ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் சுவாமிமலை இருவினை பாடல் 205

சிவயோகத்தை மேற்கொண்டு நெற்றியில் உள்ள ஞான விழிகள் திறக்கப்பட்டு மெய்ஞானத்தை பெறவும். முருகன் பரமாத்மாவை அப்படியே ஜீவாத்மாவாகிய நானும் இரண்டற கலந்து, வாசமிக்க மலரை போல நறுமணம் பெற்று, பேரின்பத்துடன் தேவர்கள் வணங்க பெற்று மலர்த்தோம். பல கோடி முனிவர்கள் புகழ்ந்து பாட வாகனத்தில் ஏறி உல்லாசமுடன் நீ வரவேண்டும். அடிமுடி காண முடியாத சிவனும் முதல்வரே திருமகனே வெற்றி வேடனை சரணடைகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
     னிருவினை யிடைந்து போக …… மலமூட

விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
     மிலையென இரண்டு பேரு …… மழகான

பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
     பணியவிண் மடந்தை பாத …… மலர்தூவப்

பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
     பருமயி லுடன்கு லாவி …… வரவேணும்

அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்
     அடியென விளங்கி யாடு …… நடராஜன்

அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
     அயலணி சிவன்பு ராரி …… யருள்சேயே

மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி
     மறலியுண வென்ற வேலை …… யுடையோனே

வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
     மலைமிசை விளங்கு தேவர் …… பெருமாளே.

விளக்கம் ………

இருவினை புனைந்து … அடியேன் அரும் பெரும் செயலாகிய சிவ
யோகத்தை மேற்கொண்டு,

ஞான விழிமுனை திறந்து … அறிவுக் கண்ணாகும் நெற்றியிலுள்ள
சுழிமுனை திறக்கப் பெற்று,

நோயினிருவினை யிடைந்து போக … பிறவிப் பிணிக்குக்
காரணமான நல்வினை, தீவினை இரண்டும் பிரிந்து ஓடிப்போகவும்,

மலமூட விருளற விளங்கி … ஆணவ மலமாகிய இருள் தேய்ந்து
அதனால் மெய்ஞ்ஞான ஒளி வீசவும்,

ஆறு முகமொடு கலந்து … உன் ஆறு திருமுகங்களின்
அருட்பெருக்கில் கலப்புற்று,

இரண்டு பேரும் பேதமிலையென … பரமாத்மாவாகிய நீயும்
ஜீவாத்மாவாகிய நானும் இரண்டறக் கலந்து ஒன்றாகி,

அழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து … அழகிய
வாசமிக்க மலரும் அதன் நறுமணமும் போல ஒன்றி பேரின்பமுற்று,

தேவர் பணிய விண் மடந்தை பாத மலர்தூவ … தேவர்கள்
வணங்கவும், தேவலோக மங்கையர் திருவடிகளில் மலர் தூவவும்,

பரிவுகொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட … மிக்க
அன்போடு எண்ணிலாத பல்கோடி முநிவர்கள் புகழ்ந்து பாடவும்,

பருமயிலுடன் குலாவி வரவேணும் … பெரிய மயில் வாகனத்தில்
ஏறி உல்லாசமுடன் நீ வரவேண்டும்.

அரியய னறிந்திடாத அடியிணை … நாராயணனும் பிரமனும்
தேடித் தேடிக் காண முடியாத திருவடிகளாம்

சிவந்த பாதம் அடியென … செந்நிறம் பொருந்திய பாதங்களே
உலகங்களுக்கு முதன்மையானவை என்று

விளங்கி யாடு நடராஜன் … அருட்பெரும் ஜோதியாக
ஆனந்தத் தாண்டவம் புரியும் நடராஜப் பெருமானும்,

அழலுறு மிரும்பின் மேனி … நெருப்பில் இட்டு மிக ஒளிரும்
இரும்பைப் போன்ற செம்மேனியைக் கண்டு

மகிழ் மரகதம்பெண் ஆகம் அயலணி … மகிழ்ச்சி அடையும்
மரகதமேனிப் பார்வதியை அருகில் அமர்த்திய

சிவன் புராரி யருள்சேயே … சிவனுமாகிய திரிபுராந்தகன்
பெற்றருளிய திருப் புதல்வனே,

மருவலர்கள் திண்ப ணார முடியுடல் நடுங்க … பகைவராகிய
அசுரர்களின் வலிமையான, அலங்கார ஆரமணிந்த தலைகள், உடல்கள்
அச்சத்தில் நடுங்க,

ஆவி மறலியுண வென்ற வேலை யுடையோனே … அவர்களது
உயிரை யமன் உண்ண, வெற்றி பெற்ற வேலை உடையவனே,

மேலும் படிக்க : திருப்புகழ் 184 முகிலளகத்தில் (பழநி)

வளைகுலம் அலங்கு காவிரியின்வட புறம் … சங்குக் கூட்டங்கள்
ஒளி வீசும் காவிரி நதியின் வடபுறத்தில்

சுவாமி மலைமிசை விளங்கு தேவர் பெருமாளே. … சுவாமிமலை
என்ற திருவேரகத்தில் விளங்கும், தேவர்களுக்கெல்லாம் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *