திருப்புகழ் சுவாமிமலை பாடல் 203
மண் ஆசை தீர்ந்து மானிடருக்கு இருக்கும் செருக்கு நீக்கி அதன் பின் தன்மையாய் வாழவும் சத்திய ஜோதியாய் வாழ திருப்புகழ் பாடல் செப்புகின்றது. பத்து தலை ராவணனை வென்ற ராமர் மருமகனை சரண் அடைய வேண்டும். வேட்டுவர் குரமகள் மணாளன் வேலனை சரண் அடைதல் குறிக்கின்றது.
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும் மாமாய விருளுமற் றேகி பவமென வாகாச பரமசிற் சோதி பரையைய …… டைந்துளாமே ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம் யோகீச ரெவருமெட் டாத பரதுரி யாதீத மகளமெப் போது முதயம …… நந்தமோகம் வானாதி சகலவிஸ்த் தார விபவரம் லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன் மாலீச ரெனுமவற் கேது விபுலம …… சங்கையால்நீள் மாளாத தனிசமுற் றாய தரியநி ராதார முலைவில்சற் சோதி நிருபமு மாறாத சுகவெளத் தாணு வுடனினி …… தென்றுசேர்வேன் நானாவி தகருவிச் சேனை வகைவகை சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி …… லங்கைசாய நாலாறு மணிமுடிப் பாவி தனையடு சீராமன் மருகமைக் காவில் பரிமள நாவீசு வயலியக் கீசர் குமரக …… டம்பவேலா கானாளு மெயினர்தற் சாதி வளர்குற மானோடு மகிழ்கருத் தாகி மருடரு காதாடு முனதுகட் பாண மெனதுடை …… நெஞ்சுபாய்தல் காணாது மமதைவிட் டாவி யுயவருள் பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ காவேரி வடகரைச் சாமி மலையுறை …… தம்பிரானே. ……… விளக்கம் ……… ஆனாத பிருதிவிப் பாச நிகளமும் … நீங்குதற்கு அரிய மண்ணாசை என்ற விலங்கும், மாமாய இருளும் அற்று … பெரும் மயக்கத்தைத் தரும் ஆணவம் என்ற இருளும் ஒழிந்து, ஏகி பவமென … ஒன்றுபட்ட தன்மை என்று கூறும்படியாக, ஆகாசபரமசிற் சோதி … வானம் போல் பரந்த பெரிய ஞான ஜோதியான பரையை அடைந்து உளாமே … பராசக்தியை அடைந்து நினைப்பு எதுவும் இன்றி, ஆறாறின் அதிகம் அக்க்ராயம் … முப்பத்தாறு மேலான தத்துவங்களுக்கு* அப்பால் முதன்மையானதாய், அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத … என்றும் யோகீசர் எவர்க்கும் எட்டாததான பரதுரிய அதீதம் அகளம் … பெரிய துரிய** நிலைக்கும் மேம்பட்டதாய், உருவம் இல்லாததாய், எப்போதும் உதயம் அநந்தமோகம் … எப்போதும் தோன்றி நிற்பதாய், அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய், வானாதி சகலவிஸ்த்தார விபவரம் … வான் முதலிய எல்லாமாய் விரிவான உயிர்ப்பொருளாய், லோகாதி முடிவுமெய்ப் போத … உலகத்தின் முதலாகவும் முடிவாகவும் விளங்குவதாய், உண்மை அறிவாய், மலரயன் மாலீச ரெனுமவற்கு … தாமரையான் பிரமன், திருமால், சிவபிரான் என்ற மும்மூர்த்திகளுக்கும் ஏது விபுலம் … மூலகாரணமாக விளங்கும் பெருமை வாய்ந்ததாய், அசங்கையால் நீள் … சந்தேகம் இன்றி நீடூழிகாலம் மாளாத தன் நிசமுற்றாயது … இறப்பின்றி தானே மெய்த்தன்மைத்தாக இருப்பதாய், அரியநிராதாரம் … அரியதாய், மற்ற ஒன்றையும் சாராததாய், உலைவு இல்சற் சோதி … அழிவின்றி சத்திய ஜோதியாகத் துலங்குவதாய், நிருபமும் … உருவம் ஏதும் இல்லாததாய், மாறாத சுகவெ(ள்)ளத் தாணுவுடன் … மாறுதல் இல்லாது விளங்கும் இன்ப வெள்ளமான சிவத்துடன் இனிதென்றுசேர்வேன் … யான் இனிமையாக என்றைக்கு இணைவேன்? நானாவித கருவிச் சேனை … பல்விதமான ஆயுதங்கள் (கத்தி, வில், வாள் முதலியவை) தாங்கிய சேனைகள் வகைவகை சூழ்போது … விதவிதமாக சூழ்ந்து வர, பிரபலச் சூரர் … பிரசித்தி பெற்ற வீரர்களுடன், கொடுநெடு நாவாய்செல் கடலடைத்து … பெரும் கப்பல்கள் செல்லும் சமுத்திரத்தை அணைகட்டிக் கடந்து, ஏறி நிலைமை யிலங்கைசாய … அக்கரை சென்று, நிலைத்திருந்த இலங்கையை வீழ்த்தி, நாலாறு மணிமுடிப் பாவி தனை … பத்து மணிமுடிகளைத் தரித்த பாவியாகிய ராவணனை அடு சீராமன் மருக … வதைத்த ஸ்ரீராமனின் மருகனே, மைக் காவில் பரிமள நாவீசு வயலி … இருண்ட சோலைகளில் நறுமணம் நன்றாக வீசும் வயலூரில் வீற்றுள்ள அக்கீசர் குமர கடம்ப வேலா … அக்னீஸ்வரருடைய*** குமாரனே, கடப்பமலர் அணிந்தவனே, வேலாயுதனே, கானாளும் எயினர்தற் சாதி வளர் … காட்டை ஆளும் வேட்டுவர் குலத்திலே வளர்ந்த குறமானோடு மகிழ்கருத் தாகி … குறமானாகிய வள்ளியோடு மகிழ்வதற்கு எண்ணம் கொண்டு, மருள் தரு காதாடும் உனது கண் பாணம் … மருட்சியைத் தருகின்றதும், காதுவரை நீண்டதுமான உனது கண்களிலிருந்து வரும் பாணமானது எனதுடை நெஞ்சுபாய்தல் காணாது … என்னுடைய நெஞ்சினில் பாய்வதை நீகாணாமல் இருக்கின்றாய், மமதைவிட்டு ஆவி யுயவருள் பாராய் … உன் செருக்கை விடுத்து என்னுயிர் உய்ய அருள்வாயாக எனுரைவெகுப் ப்ரீதி யிளையவ … என்றெல்லாம் வள்ளியிடம் உரைத்து மிக்க அன்புடன் சேர்ந்த இளையவனே, காவேரி வடகரைச் சாமி மலையுறை தம்பிரானே. … காவேரியின் வடகரையினுள்ள சுவாமிமலைத் தலத்தில் எழுந்தருளிய தனிப் பெரும் தலைவனே. |