ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 93 மூப்புற்றுச் செவி (திருச்செந்தூர்)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

பாடல் வரிகள்:

மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
     மூச்சுற் றுச்செயல் …… தடுமாறி

மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
     மூக்குக் குட்சளி …… யிளையோடும்

கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
     கூட்டிற் புக்குயி …… ரலையாமுன்

கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
     கூட்டிச் சற்றருள் …… புரிவாயே

காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
     காப்பைக் கட்டவர் …… குருநாதா

காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
     காப்புக் குத்திர …… மொழிவோனே

வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
     வாய்க்குச் சித்திர …… முருகோனே

வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
     வாய்க்குட் பொற்பமர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

மூப்புற்றுச் செவி கேட்பற்று … கிழப் பருவத்தை அடைந்து, காது
கேட்கும் தன்மையை இழந்து,

பெரு மூச்சுற்றுச் செயல் தடுமாறி … பெருமூச்சு விட்டுக்கொண்டு,
செயல்கள் தடுமாற்றம் அடைந்து,

மூர்க்கச் சொற்குரல் காட்டி … கொடிய கோபத்துடன் கூடிய
சொற்களோடு குரலை வெளிப்படுத்தி,

கக்கிட மூக்குக்கு உள்சளி இளையோடும் கோப்புக் கட்டி …
வெளிப்படும் மூக்குச்சளியும், நெஞ்சுக்கபமும் கோத்தது போல் ஒன்று
சேர்ந்து

இ(ன்)னாப் பிச்சு எற்றிடு … துன்ப வெறியை அதிகரிக்கச் செய்து,

கூட்டிற் புக்கு உயிர் அலையாமுன் … இத்தகைய உடலில் புகுந்து
என் உயிர் தவிப்பதற்கு முன்னம்,

கூற்றத் தத்துவ நீக்கி … யமன் வந்து என்னுயிரை எடுக்கும் தவிர்க்க
முடியாத செயலை அகற்றி,

பொற்கழல் கூட்டிச் சற்றருள் புரிவாயே … உன் அழகிய
திருவடியில் சேர்த்து, சிறிது அருள் புரிவாயாக.

காப்புப் பொற்கிரி கோட்டி … உலகின் அரணாக நிற்கும்
பொன்மலை மேருவை வில்லாக வளைத்து,

பற்றலர்காப்பைக் கட்டவர் குருநாதா … பகைவராகிய
திரிபுரத்தாருடைய அரண்களை அழித்தவராகிய சிவபிரானின்
குருநாதனே,

காட்டுக்குட் குறவாட்டிக்கு … கானகத்தில் குறப் பெண் வள்ளி
தேவிக்கு

பல காப்புக் குத்திர மொழிவோனே … என்னைக் காத்தருள்
என்றெல்லாம் பல நயமொழிகள் கூறியவனே,

வாய்ப்புற்றத் தமிழ் மார்க்கத் திட்பொருள் … வாய்ப்புள்ள தமிழின்
அகத்துறையின் உறுதியான பொருளை

வாய்க்குச் சித்திர முருகோனே … உண்மை இதுவே என
(ருத்திரசன்மனாக வந்து)* அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே,

வார்த்தைச் சிற்பர … சொல்லுக்கும் சித்தத்துக்கும் அப்பாற்பட்டவனே,

தீர்த்தச் சுற்றலைவாய்க்குள் … புண்ணிய தீர்த்தங்கள் சுற்றியுள்ள
திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்)

பொற்பமர் பெருமாளே. … அழகாக வீற்றிருக்கும் பெருமாளே.

மேலும் படிக்க : கலையாத கல்வியும்-அபிராமி பட்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *