ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 92 முலை முகம் (திருச்செந்தூர்

திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் மனக் குறைகள் நீங்கும்.

பாடல் வரிகள்:

முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு
     முறுவ லுஞ்சி வந்த …… கனிவாயும்

முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த
     முகிலு மின்ப சிங்கி …… விழிவேலும்

சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த
     திருமு கந்த தும்பு …… குறுவேர்வும்

தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று
     செயல ழிந்து ழன்று …… திரிவேனோ

மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
     வழிதி றந்த செங்கை …… வடிவேலா

வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை
     மணிவ டம்பு தைந்த …… புயவேளே

அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க
     மலறி வந்து கஞ்ச …… மலர்மீதே

அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற
     அரிய செந்தில் வந்த …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

முலை முகம் திமிர்ந்த கலவையும் துலங்கு முறுவலும் சிவந்த
கனி வாயும்
 … மார்பகத்தின் மேல் பூசப்பட்ட சந்தனக் கலவையும்,
விளங்கும் பற்களின் புன்னகையும், செந்நிறமான கொவ்வைக் கனி
போன்ற வாயும்,

முருகு அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த முகிலும் இன்ப
சிங்கி விழி வேலும்
 … மணம் அவிழ்ந்து உதிர்ந்த பூக்களும், சரிந்துள்ள
மேகம் போன்று கருத்த கூந்தலும், இன்பமும் நஞ்சும் ஒருங்கே கொண்ட
கண்களாகிய வேலும்,

சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு(ம்)
குறு வேர்வும்
 … வில் போன்ற இடமாகிய நெற்றியில் அமைந்த பொட்டும்,
குளிர்ந்த அழகிய முகத்தில் அரும்பும் சிறு வியர்வைத் துளிகளும்,

தெரிய வந்து நின்ற மகளிர் பின் சுழன்று செயல் அழிந்து
உழன்று திரிவேனோ
 … தெரியும்படி வந்து நின்ற விலைமாதர்களின்
பின்னால், என் செயல் அழிந்து, அலைந்து திரிவேனோ?

மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த
செம் கை வடிவேலா
 … மலைக் குகையில் அடைக்கப்பட்டிருந்த
புலவராகிய நக்கீரரின் சிறந்த பாடலை (திருமுருகாற்றுப்படையைக்)
கேட்டு, அந்தக் குகையின் வாயிலைத் திறந்து விட்ட செவ்விய
கைகளை உடைய வடிவேலனே.

வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம்
புதைந்த புய வேளே
 … வளர்கின்ற தினைப் புனத்தில் காவல்
இருந்த குறமங்கையாகிய வள்ளியின் மார்பின் மீதிருந்த மணி மாலை
புதைந்த புயம் விளங்கும் அரசே,

அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து
கஞ்ச மலர் மீதே அளி கலந்து இரங்க இசையுடன் துயின்ற
அரிய செந்தில் வந்த பெருமாளே.
 … அலைகளில் தவழ்ந்து
(முத்துக்களைக் கருவில் கொண்டுள்ள) சூல் நிறைந்த சங்குகள் மிக
ஒலித்து வந்து, வண்டுகள் மொய்த்து ஒலிக்கும் தாமரை மலர் மேல் தங்கி,
அந்த இசையைக் கேட்டுக் கொண்டே துயில் கொள்ளும் அருமையான
தலமாகிய திருச்செந்தூரில் வந்து அமர்ந்துள்ள பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *