ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 91 முந்துதமிழ் மாலை (திருச்செந்தூர்)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்.

பாடல் வரிகள்:

முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
     சந்தமொடு நீடு பாடிப் பாடி
          முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி …… யுழலாதே

முந்தைவினை யேவ ராமற் போக
     மங்கையர்கள் காதல் தூரத் தேக
          முந்தடிமை யேனை யாளத் தானு …… முனைமீதே

திந்திதிமி தோதி தீதித் தீதி
     தந்ததன தான தானத் தான
          செஞ்செணகு சேகு தாளத் தோடு …… நடமாடுஞ்

செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
     துங்கஅநு கூல பார்வைத் தீர
          செம்பொன்மயில் மீதி லேயெப் போது …… வருவாயே

அந்தண்மறை வேள்வி காவற் கார
     செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
          அண்டருப கார சேவற் கார …… முடிமேலே

அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
     குன்றுருவ ஏவும் வேலைக் கார
          அந்தம்வெகு வான ரூபக் கார …… எழிலான

சிந்துரமின் மேவு போகக் கார
     விந்தைகுற மாது வேளைக் கார
          செஞ்சொலடி யார்கள் வாரக் கார …… எதிரான

செஞ்சமரை மாயு மாயக் கார
     துங்கரண சூர சூறைக் கார
          செந்தினகர் வாழு மாண்மைக் கார …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

முந்து தமிழ் மாலை … மொழிகளில் முந்தியுள்ள தமிழில்
பாமாலைகளை

கோடிக் கோடி சந்தமொடு … கோடிக்கணக்காக சந்தப்பா வகையில்

நீடு பாடிப் பாடி … நீண்டனவாகப் பாடிப்பாடி,

முஞ்சர் மனை வாசல் … அழிகின்ற மக்களின் வீட்டு வாசல்கள்

தேடித் தேடி … எங்கே உள்ளன என்று தேடித் தேடி

உழலாதே … அலையாமல்,

முந்தை வினையே … முன்ஜென்ம வினை என்பதே

வராமற் போக … என்னைத் தொடராமல் ஓடிப்போக

மங்கையர்கள் காதல் தூரத் தேக … பெண்ணாசை என்பது தூரத்தே
ஓடிப்போக

முந்தடிமை யேனை … முந்தவேண்டும் என்ற ஆசைகொண்ட
அடிமையேனை

ஆளத் தானு முனைமீதே … ஆண்டருளும் பொருட்டு என்
முன்னிலையில்,

திந்திதிமி தோதி தீதித் தீதி, தந்ததன தான தானத் தான,
செஞ்செணகு சேகு
 … (அதே ஒலி) என்ற

தாளத் தோடு நடமாடும் … தாளத்திற்கு ஏற்ப நடனம் செய்யும்

செஞ்சிறிய கால் … சிவந்த சிறிய கால்களை உடையதும்,

விசாலத் தோகை … விரித்த தோகையை உடையதும்,

துங்க அநுகூல பார்வை … பரிசுத்தமான நன்மை நல்கும் பார்வை
கொண்டதும்,

தீர செம்பொன்மயில் மீதிலே … தீரமும், செம்பொன் நிறத்தையும்
கொண்ட மயில்மீது,

எப்போது வருவாயே … எப்போது தான் வரப்போகிறாயோ?

அந்தண் மறை வேள்வி … அழகிய அருள்மிக்க வேத
வேள்விக்கெல்லாம்

காவற் கார … காவல் புரியும் பெருமானே,

செந்தமிழ் சொல் பாவின் … செந்தமிழ்ச் சொற்களான பாடல்களை

மாலைக் கார … மாலைகளாக அணிந்துகொள்பவனே,

அண்டர் உபகார … தேவர்களுக்கெல்லாம் உபகாரியே,

சேவற் கார … சேவலைக் கொடியாக உடையவனே,

முடிமேலே அஞ்சலி செய்வோர்கள் … சிரத்தின்மேல் கைகூப்பித்
தொழுவோரின்

நேயக் கார … அன்பு பூண்டவனே,

குன்றுருவ ஏவும் … (கிரெளஞ்ச) மலையை ஊடுருவும்படி ஏவின

வேலைக் கார … வேற் கரத்தோனே,

அந்தம் வெகுவான … அழகு மிகப் பொலியும்

ரூபக் கார … திருவுருவம் கொண்டவனே,

எழிலான சிந்துரமின் மேவு … அழகு நிறைந்த தேவயானை விரும்பும்

போகக் கார … இன்பம் வாய்ந்தவனே,

விந்தை குறமாது … அழகிய குறப்பெண் வள்ளியுடன்

வேளைக் கார … பொழுதுபோக்கும் மெய்க்காவலனே,

செஞ்சொல் அடியார்கள் … இன்சொற்களால் போற்றும் அடியார்கள்
மீது

வாரக் கார … அன்பு கொண்டவனே,

எதிரான செஞ்சமரை மாயு … எதிர்த்துவரும் பெரும்போரில்
பகைவரை மாய்க்கும்

மாயக் கார … மாயக்காரனே,

துங்கரண சூர … பெரும் போரில் சூரனை

சூறைக் கார … சூறாவளிக் காற்றுப் போல் அடித்துத் தள்ளியவனே,

செந்தினகர் வாழும் … திருச்செந்தூர் நகரில் வாழும்

ஆண்மைக் கார பெருமாளே. … ஆட்சித் திறன் படைத்த பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *