திருப்புகழ் 84 மங்கை சிறுவர் (திருச்செந்தூர்)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் திருமணம் தடை நீங்கும்.
பாடல் வரிகள்:
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
வந்து கதற …… வுடல்தீயின்
மண்டி யெரிய விண்டு புனலில்
வஞ்ச மொழிய …… விழஆவி
வெங்கண் மறலி தன்கை மருவ
வெம்பி யிடறு …… மொருபாச
விஞ்சை விளைவு மன்று னடிமை
வென்றி யடிகள் …… தொழவாராய்
சிங்க முழுவை தங்கு மடவி
சென்று மறமி …… னுடன்வாழ்வாய்
சிந்தை மகிழ அன்பர் புகழு
செந்தி லுறையு …… முருகோனே
எங்கு மிலகு திங்கள் கமல
மென்று புகலு …… முகமாதர்
இன்பம் விளைய அன்பி னணையு
மென்று மிளைய …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் … மனைவியும், மக்களும், தங்கள்
சுற்றத்தார்களும்,
வந்து கதற … வந்து கதறி அழுது புலம்ப,
உடல்தீயின் மண்டி யெரிய … உடம்பானது மயானத்தீயில்
ஜ்வாலையுடன் எரிந்துகொண்டிருக்க,
விண்டு புனலில் வஞ்ச மொழிய விழ … உறவினர் மயானத்தை
விட்டு நீங்கி, பந்தம் என்ற மாயை நீங்குமாறு, நீரில் மூழ்கிக் குளிக்க,
ஆவி வெங்கண் மறலி தன்கை மருவ … உயிரானது
கொடுங்கண்களை உடைய யமனது கரத்தில் சிக்கிக்கொள்ள,
வெம்பி யிடறும் … மனம் புழுங்கித் துன்பப்படும்
ஒருபாச விஞ்சை விளையு மன்று … ஒரு பற்று என்னும்
மாயக்கூத்து நிகழும் அந்த நாளில்
உனடிமை வென்றி யடிகள் தொழவாராய் … உன் அடிமையாகிய
சிறியேன் வெற்றி பொருந்திய உன் திருவடி மலர்களைத் தொழும்படி
வந்தருள்வாயாக.
சிங்கம் உழுவை தங்கும் அடவி சென்று … சிங்கங்களும், புலிகளும்
வாழும் காட்டிலே சென்று
மறமினுடன்வாழ்வாய் … வேடப் பெண்ணாகிய வள்ளியுடன்
வாழ்கின்றவனே,
சிந்தை மகிழ அன்பர் புகழு … உள்ள மகிழ்ச்சியுடன் உன் அன்பர்கள்
துதி செய்கிற
செந்தி லுறையு முருகோனே … திருச்செந்தூர் நகரில் எழுந்தருளிய
முருகக் கடவுளே,
எங்கு மிலகு திங்கள் கமலம் … எங்கும் விளங்கும் சந்திரனையும்,
தாமரையையும் ஒத்தது
என்று புகலு முகமாதர் … என்று உவமை கூறி புலவர்கள் புகழ்கின்ற
திருமுகத்தை உடைய மாதர்களாம் தேவயானையையும், வள்ளியையும்,
இன்பம் விளைய அன்பி னணையும் … உயிர்களுக்கு இன்பம்
விளையுமாறு அன்போடு அணையும்
என்றும் இளைய பெருமாளே. … எக்காலத்தும் இளமையோடு
விளங்கும் பெருமாளே.