திருப்புகழ் 82 பூரண வார கும்ப (திருச்செந்தூர்)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் குடும்பம் மேன்மை அடையும்.
பாடல் வரிகள்:
பூரண வார கும்ப சீதப டீர கொங்கை
மாதர் விகார வஞ்ச லீலையி லேயு ழன்று
போதவ மேயி ழந்து போனது மான மென்ப …… தறியாத
பூரிய னாகி நெஞ்சு காவல்ப டாத பஞ்ச
பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து
போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய ழுந்து …… மயல்தீரக்
காரண காரி யங்க ளானதெ லாமொ ழிந்து
யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து
காலுட லுடி யங்கி நாசியின் மீதி ரண்டு …… விழிபாயக்
காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு
காயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து
காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க …… அருள்வாயே
ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க
ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு
மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு …… முரவோனே
ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற
சூரனை மாள வென்று வானுல காளு மண்ட
ரானவர் கூர ரந்தை தீரமு னாள்ம கிழ்ந்த …… முருகேசா
வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு
வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த
மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் …… மருகோனே
வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து
சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து
வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
பூரண வார கும்ப சீத படீர கொங்கை மாதர் விகார வஞ்ச
லீலையிலே உழன்று … நிறைந்து, கச்சு அணிந்த, கும்பம் போன்ற,
குளிர்ந்த சந்தனக் கலவை அணிந்த மார்பகங்களை உடைய
விலைமாதர்களுடைய அவலட்சணமான, வஞ்சகமான ஆடல்
பாடல்களில் அலைப்புண்டு,
போது அவமே இழந்து போனது மானம் என்பது அறியாத
பூரியனாகி … பொழுதை வீணாக இழந்து, மானம் போய் விட்டது
என்பதை அறியாத கீழ் மகனாகி,
நெஞ்சு காவல் படாத பஞ்ச பாதகனாய் அறம் செ(ய்)யாதபடி
ஓடி இறந்து போனவர் வாழ்வு கண்டும் … மனத்தால், கட்டுக்கு
அடங்காத ஐம்பெரும் பாதகங்களைச்* செய்தவனாக, தருமமே
செய்யாமல் அடியோடு இறந்து போனவர்களுடைய வாழ்வைப் பார்த்தும்,
ஆசையிலே அழுந்து மயல் தீரக் காரண காரியங்கள் ஆனது
எ(ல்)லாம் ஒழிந்து … ஆசையில் அழுந்தும் (எனது) மயக்கம்
ஒழியும்படி, காரணம், காரியம் ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஒழிந்து,
யான் எனும் மேதை விண்டு பாவகமாய் இருந்து கால் உடல்
ஊடி அங்கி நாசியின் மீது இரண்டு விழி பாய … நான் என
வரும் ஆணவம் நீங்கி, தூயவனாக இருந்து, பிராண வாயு உடலின் பல
பாகங்களுக்கு ஓடி, மூக்கின் மேல் இரண்டு விழி முனைகளும் பாய,
காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு காயம் விடாமல்
உன்றன் நீடிய தாள் நினைந்து … காயம், வாக்கு, மனம் என்னும்
மூன்றும் ஒரு வழிப்பட, அன்பை உடலுள்ள அளவும் விடாமல், உனது
அழிவற்ற திருவடிகளை நினைந்து,
காணுதல் கூர் தவம் செய் யோகிகளாய் விளங்க அருள்வாயே …
காட்சியைப் பெறுவதற்கு, மிக்க தவத்தைச் செய்கின்ற யோகிகளைப்
போல் நான் விளங்கும்படி அருள் புரிவாயாக.
ஆரணசார மந்த்ர வேதம் எ(ல்)லாம் விளங்க ஆதிரையானை
நின்று தாழ்வன் எனா வணங்கும் … வேதசாரமான மந்திரங்களும்,
வேதங்கள் எல்லாமும் விளங்கும்படியாக, (தேவாரப் பாக்களால்)
திருவாதிரை நாளை உகந்துள்ள சிவபெருமானை எதிர் நின்று
வணங்குவேன் என்று (உலகுக்குக் காட்டி) வணங்கும்
ஆதரவால் விளங்கு பூரண ஞானம் மிஞ்சும் உரவோனே …
அன்பினால் மேம்பட்ட பூரணமான ஞானம் மிக்க திருஞான
சம்பந்தப் பெருமானே,
ஆர்கலி ஊடு எழுந்து மா வடிவாகி நின்ற சூரனை மாள
வென்று வான் உலகு ஆளும் அண்டரானவர் கூர் அரந்தை
தீர மு(ன்)னாள் மகிழ்ந்த முருகேசா … கடலில் எழுந்து மாமர
வடிவுடன் நின்ற சூரனை, அவன் இறக்கும்படி வென்று, வானுலகை
ஆளுகின்ற தேவர்களுக்கு (உண்டான) பெரிய துன்பம் ஒழிய,
முன்பொரு நாள் உதவி செய்து களிப்புற்ற முருகேசனே,
வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின்
மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த … யானை (கஜேந்திரன்)
ஆதிமூலமே என்று அழைத்த போது சக்கரத்தை எடுத்து வந்து,
மடுவில் இருந்த முதலை பாழ்படும்படி எறிந்த
மா முகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன்
மருகோனே … கரிய மேகம் போல் இருண்ட திரு மேனியை உடைய
திருமாலின் மருகனே,
வாலுகம் மீது வண்டல் ஓடிய காலில் வந்து சூல் நிறைவான
சங்கு மா மணி ஈன … வெண் மணலின் மீது வண்டல் ஓடிய
வாய்க்கால் வழியாக வந்து, கருப்பம் நிறைந்த சங்குகள் சிறந்த
முத்து மணிகளைப் பெறும்படியாக
உந்து வாரிதி நீர் பரந்த சீர் அலைவாய் உகந்த பெருமாளே. …
அலை வீசுகின்ற கடல் நீர் பரந்துள்ள திருச்சீரலைவாயில்
(திருச்செந்தூரில்) மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே.