ஆன்மிகம்ஆலோசனைசிலேட்குச்சி வீடியோஸ்

திருப்புகழ் 80 பாத நூபுரம் (திருச்செந்தூர்)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் தொழில் தொடங்குவீர்கள்.

பாடல் வரிகள்:

பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை
     யோதி மோகுலம் போலசம் போகமொடு
          பாடி பாளிதங் காருகம் பாவையிடை …… வஞ்சிபோலப்

பாகு பால்குடம் போலிரண் டானகுவ
     டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல்
          பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ …… ரந்தமீதே

மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி
     தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை
          வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை …… யன்புளார்போல்

வாச பாசகஞ் சூதுபந் தாடஇழி
     வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி
          வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர் …… சந்தமாமோ

தீத தோதகந் தீததிந் தோதிதிமி
     டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு
          டீகு டீகுகம் போலவொண் பேரிமுர …… சங்கள்வீறச்

சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும்
     வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர்
          சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு …… மங்கிவேலா

தாதை காதிலங் கோதுசிங் காரமுக
     மாறும் வாகுவுங் கூரசந் தானசுக
          தாரி மார்பலங் காரியென் பாவைவளி …… யெங்கள்மாதைத்

தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக
     ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு
          தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை …… தம்பிரானே.

……… சொல் விளக்கம் ………

பாத நூபுரம் பாடகம் சீர் கொள் நடை ஓதி மோகுலம் போல்
சம்போகமொடு ப(பா)டி பாளிதம் காருகம் பாவை இடை
வஞ்சி போல
 … பாதச் சிலம்பு கால் அணி இவைகளுடன் சீரான
நடையுடன் அன்னப் பறவைகளின் கூட்டம் நடப்பது போல விளங்கவும்,
சேர்க்கை இன்பம் கொண்டு மகிழவும், நன்கு நெய்யப்பட்ட பட்டாடை
சூழ்ந்துள்ள அழகிய இடை வஞ்சிக் கொடி போல இப் பாவையொத்த
பெண்கள் இலங்கவும்,

பாகு பால் குடம் போல் இரண்டான குவடு ஆட நீள் வடம்
சேர அலங்கார குழல் பாவ மேக பொன் சாபம் இந்தே
பொருவர் அந்தமீதே
 … அழகிய பால் குடம் போன்ற இரண்டு
மலையொத்த மார்பகங்கள் ஆடவும், நீண்ட மணி வடம் சேரவும்,
அலங்காரமான கூந்தல் பரந்த மேகத்தை ஒக்கவும், அழகிய வில்
(புருவத்தையும்) பிறை (நெற்றியையும்) ஒப்பாகச் சொல்லும்படி
இருப்பவரும், இவ்வாறான அழகைக் கொண்டு,

மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி தோகை வாகர்
கண்டாரை கொண்டாடி தகை வாரும் வீடெ என்று ஓதி
இதம் பாயல் மிசை அன்பு உளார் போல்
 … குயில் போல இனிய
குரலும், கரும்பான பேச்சையும், மயில் போன்ற அழகையும் கொண்டவரும்,
பார்த்தவர்களைக் கொண்டாடி மறித்து நிறுத்தி (எங்கள்) வீட்டுக்கு
வாருங்கள் என்று சொல்லி இனிமையான பேச்சுக்களைப் பேசி
படுக்கையின் மீது அன்புள்ளவர்கள் போல் நடித்து,

வாச பாசகம் சூது பந்தாட இழி வேர்வை பாய சிந்து ஆகு
கொஞ்சு ஆர விழி வாகு தோள் கரம் சேர்வை தந்து ஆடும்
அவர் சந்தம் ஆமோ
 … மணத்தையும் பசுமையும் கொண்ட, சூதாடு
கருவியை ஒத்ததான மார்பகங்கள் பந்து போல ஆடவும், வழிகின்ற
வேர்வை உடலில் பாய, கடல் போன்றதும் கொஞ்சுதல் நிறைந்ததுமான
கண்ணும், வாளிப்பான தோளும் கைகளும் ஒன்று பட சேரத் தந்து
மகிழ்ந்து ஆடுபவர்களாகிய விலைமாதர்கள் மீது ஆசை கொள்ளுதல்
தகுமோ?

தீத தோதகஞ் தீததிந் தோதிதிமி டூடு டூடுடுண் டூடுடுண்
டூடுடுடு டீகு டூகுகம் போல ஒண் பேரி முரசங்கள் வீற
 … தீத
தோதகஞ் தீததிந் தோதிதிமி டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு டீகு
டூகுகம் என்ற ஒலிகளுடன் ஒண்ணிய பேரிகைகளும் முரசங்களும்
பேரொலி செய்ய,

சேடன் மேருவும் சூரனும் தாரகனும் வீழ ஏழ் தடம் தூளி
கொண்டு ஆடு அமரர் சேசெ சேசெ என்று ஆட நின்று ஆடி
விடும் அங்கி வேலா
 … ஆதிசேஷனும், மேரு மலையும், சூரனும்,
தாரகாசுரனும் வீழ்ந்திட, ஏழு மலைகளும் தூள் தூள் ஆகி ஆட,
தேவர்கள் ஜே ஜே ஜே ஜே என்று ஆட, விளங்கி நின்று, கூத்தாடிச்
செலுத்திய நெருப்புப் போன்ற வேற் படையை உடையவனே,

தாதை காதில் அங்கே ஓதும் சிங்கார முகம் ஆறும் வாகுவும்
கூர
 … தந்தையாகிய சிவபெருமான் காதில் அங்கே ஓதிய சிங்காரமான
ஆறு திரு முகங்களும் தோள்கள் பன்னிரண்டும் பூரிக்க,

சந்தான சுக தாரி மார்பு அலங்காரி என் பாவை வ(ள்)ளி
எங்கள் மாதை தாரு பாளிதம் சோர சிந்தா மணிகள் ஆடவே
புணர்ந்து ஆடி
 … வழி வழி இன்பம் தரும் சுகத்தைக் கொண்டவளும்,
மார்பில் அலங்காரம் கொண்டவளும், எனது அருமைப் பதுமை
போன்றவளுமாகிய வள்ளி நாயகி என்னும் எங்கள் மாதுடன், மரச்
சோலைகளிடையே பட்டாடை சோர அணிந்துள்ள கோக்கப்பட்ட
மணி வடங்கள் சப்தித்து ஆட சேர்க்கை இன்பம் துய்த்து,

வங்காரமொடு தாழை வான் உயர்ந்து ஆடு செந்தூரில்
உறை தம்பிரானே.
 … செழிப்புடன் வளர்ந்த தென்னைகள் வான்
அளாவி ஓங்கும் திருச் செந்தூரில் வீற்றிருக்கும் தம்பிரானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *