ஆன்மிகம்ஆலோசனைசிலேட்குச்சி வீடியோஸ்

திருப்புகழ் 76 படர்புவியின் மீது (திருச்செந்தூர்)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும்.

பாடல் வரிகள்:

படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
     வியனினுரை பானு வாய்வி யந்துரை
          பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி …… சங்கபாடல்

பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
     திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
          பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் …… சந்தமாலை

மடல்பரணி கோவை யார்க லம்பக
     முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
          வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி …… சண்டவாயு

மதுரகவி ராஜ னானென் வெண்குடை
     விருதுகொடி தாள மேள தண்டிகை
          வரிசையொடு லாவு மால கந்தைத …… விர்ந்திடாதோ

அடல்பொருது பூச லேவி ளைந்திட
     எதிர்பொரவொ ணாம லேக சங்கர
          அரஹர சிவாம ஹாதெ வென்றுனி …… அன்றுசேவித்

தவனிவெகு கால மாய்வ ணங்கியு
     ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
          அதிபெல கடோர மாச லந்தர …… னொந்துவீழ

உடல்தடியு மாழி தாவெ னம்புய
     மலர்கள்தச நூறு தாளி டும்பக
          லொருமலரி லாது கோவ ணிந்திடு …… செங்கண்மாலுக்

குதவியம கேசர் பால இந்திரன்
     மகளைமண மேவி வீறு செந்திலி
          லுரியஅடி யேனை யாள வந்தருள் …… தம்பிரானே.

……… சொல் விளக்கம் ………

படர் புவியின் மீது மீறி வஞ்சர்கள் … பரந்துள்ள இப்பூமியில்
அளவுக்கு மிஞ்சி வஞ்சனை உள்ள லோபியர்களிடம்

வியனில் உரை பானுவாய் வியந்து உரை … (பொருள் பெறுதற்கு
அவர்களைச்) சிறப்பாக சூரியனே என்று பாராட்டிக் கூறியும்,

பழுது இல் பெரு சீல நூல்களும் … குற்றம் இல்லாத பெரிய
ஒழுக்க நூல்களையும்,

தெரி சங்க பாடல் … தெரியவேண்டிய சங்க நூல் பாடல்களையும்,

பனுவல் கதை காவ்யமாம் எண் எண் கலை … வரலாற்று
நூல்களையும், கதைகளையும், காப்பியங்களையும், அறுபத்து நான்கு
கலை நூல்களையும்,

திருவ(ள்)ளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழியை ஓதியே
உணர்ந்து
 … திருவள்ளுவ தேவர் அருளிய பொய்யாமொழி ஆகிய
திருக்குறள் முதலிய பழமொழி நூல்களை ஓதியும் உணர்ந்தும்,

பல் சந்த மாலை மடல் பரணி கோவையார் … பலவகையான
சந்த மாலைச் செய்யுட்கள், மடல், பரணி, கோவையார்,

கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்
வகைவகையில்
 … கலம்பகம் முதலான கோடிக்கணக்கான
பிரபந்தங்களை வகைவகையாய்ப் பாடி,

ஆசுசேர் பெரும் கவி சண்டவாயு மதுரகவி ராஜன் நான்
என்(று)
 … பெருமைமிக்க ஆசுகவி, சண்டமாருதன், மதுரகவிராஜன்
நான் என்று (புலவர்கள் தம்மைத் தாமே கூறிக்கொண்டு),

வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை … வெண்
குடை, வெற்றிக் கொடி, தாளம், மேளம், பல்லக்கு முதலான

வரிசையொடு உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ …
சிறப்புச் சின்னங்களோடு உலவி வரும் மயக்க அறிவும், அகங்காரமும்
அவர்களை விட்டு நீங்காவோ?

அடல் பொருது பூசலே விளைந்திட … (ஜலந்தராசுரனுடன்)
வலிமையுடன் போர் செய்து பெரிய ஆரவாரம் உண்டாக

எதிர் பொர ஒணாமல் ஏக … அவனுடன் எதிர் நின்று போர் செய்ய
முடியாமல் புறந்தந்து (திருமால்) சென்று,

சங்கர அரஹர சிவா மஹா தேவ என்று உ(ன்)னி அன்று
சேவித்து
 … சங்கரா, அரகர சிவா மகா தேவா என்று தியானித்து
அன்று ஆராதனை புரிந்து,

அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி … மண்ணுலகில்
வெகு காலமாகத் தொழுது, மனம் உருகி,

வெகு பாச கோச சம்ப்ரம அதி பெல கடோர மா சலந்தரன்
நொந்து வீழ
 … கொடிய பாசக் கயிறு, கவசம் முதலிய சிறப்பான
ஆயுதங்களும், மிக்க வலிமையும் கொடுமையும் உள்ள பெரும்
ஜலந்தரன் வருந்தி விழுமாறு

உடல் தடியும் ஆழி தா என … அவனுடைய உடலைப்
பிளக்கவல்ல சக்கரத்தைத் தந்தருள்வீர் என்று வேண்டி,

அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் … தாமரை
மலர்கள் ஆயிரம் கொண்டு (சிவனுடைய) திருப்பாதங்களில்
பூஜித்து வந்த அந்த நாட்களில் (ஒரு நாள்),

ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு …
ஒரு மலர் இல்லாது குறைந்துபோக, (அதற்கு ஈடாகத் தன்)
கண்ணையே எடுத்து அர்ச்சித்த சிவந்த கண்ணுடைய திருமாலுக்கு

உதவிய மகேசர் பால … அந்தச் சக்ராயுதத்தையே உதவி அருளிய*
மகா தேவருடைய குழந்தையே,

இந்திரன் மகளை மணம் மேவி … இந்திரன் பெண்ணாகிய
தேவயானையை திருமணம் செய்து கொண்டு,

வீறு செந்திலில் உரிய அடியேனை ஆள வந்து அருள்
தம்பிரானே.
 … பெருமை நிறைந்த திருச்செந்தூரில் (உன்னிடம்)
உரிமை பூண்ட அடியேனாகிய என்னை ஆட்கொள்ளும் பொருட்டு
வந்தருளிய பெரும் தலைவனே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *