திருப்புகழ் 72 நிலையாப் பொருளை (திருச்செந்தூர்)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் திருமண தடை நீங்கும்.
பாடல் வரிகள்:
நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது …… மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் …… தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய …… நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல …… மருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற …… முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை …… விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித …… வடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
நிலையாப் பொருளை … நிலையில்லாத பொருட்களை
உடலாக் கருதி … பொன்னாக மதித்து,
நெடுநாட் பொழுதும் அவமேபோய் … நீண்ட நாட்களெல்லாம்
வீணாக்கி,
நிறைபோய் … மனத்திண்மை போய்,
செவிடு குருடாய் … செவிடாகி, குருடாகி,
பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி … நோய்கள் மிகுந்து,
ஐம்பொறிகளும் தடுமாற்றம் அடைந்து,
மலநீர் … மலமும், சிறுநீரும்
சயன மிசையாப் பெருகி … படுக்கை மேலேயே (தன்னிச்சையின்றி)
பெருகி,
மடிவேற்கு … இறந்து படுவேனுக்கு,
உரிய நெறியாக … கடைத்தேறுவதற்கு உரிய முக்தி நெறியாக,
மறைபோற் றரிய … வேதங்களாலும் போற்றுதற்கு அரியதான
ஒளியாய்ப் பரவு … ஒளியாக விரிந்துள்ள
மலர்தாட் கமலம் அருள்வாயே … நின்மலர்த் தாமரையை
தந்தருள்வாயாக.
கொலைகாட்டு அவுணர் கெட … கொலையே செய்து வருகின்ற
அசுரர்கள் அழிய,
சலதி குளமாய்ச் சுவற … பெருங்கடல் சிறு குளம் போல் வற்றிப்போக,
முதுசூதம் … முற்றிய மாமரம் (வடிவில் நின்ற சூரன்)
குறிபோய்ப் பிளவு பட … குறிவைத்தபடி பட்டு, பிளவுபட,
மேற் கதுவு … மேலே பற்றும்படியாக பிடியுள்ள
கொதிவேற் படையை விடுவோனே … எரிவீசும் வேற்படையை
செலுத்தியவனே,
அலைவாய்க் கரையின் … திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
கடற்கரையில்
மகிழ்சீர்க் குமர … மகிழ்ச்சியோடு கோலம் கொண்ட குமரனே,
அழியாப் புநித வடிவாகும் அரனார்க்கு … அழியாத பரிசுத்த
வடிவில் உள்ள சிவனார்க்கு
அதித பொருள்காட் டதிப … யாவும் கடந்த ஓம் என்னும் பொருளை
விளக்கிய அதிபனே,
அடியார்க் கெளிய பெருமாளே. … அடியவர்களுக்கு எளிதான
பெருமாளே.