ஆன்மிகம்ஆலோசனைசிலேட்குச்சி வீடியோஸ்

திருப்புகழ் 71 நிதிக்குப் பிங்கலன் (திருச்செந்தூர்)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் வறுமை நீங்கும்.

பாடல் வரிகள்

நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
     நிறத்திற் கந்தனென் …… றினைவொரை

நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
     றரற்றித் துன்பநெஞ் …… சினில்நாளும்

புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
     புகட்டிக் கொண்டுடம் ……பழிமாயும்

புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
     புணர்க்கைக் கன்புதந் …… தருள்வாயே

மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
     மறத்திற் றந்தைமன் …… றினிலாடி

மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
     டமிழ்ச்சொற் சந்தமொன் …… றருள்வோனே

குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
     கொழித்துக் கொண்டசெந் …… திலின்வாழ்வே

குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
     குவித்துக் கும்பிடும் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

நிதிக்குப் பிங்கலன் … செல்வத்துக்கு குபேரன் என்றும்,

பதத்துக்கு இந்திரன் … நற்பதவிக்கு தேவேந்திரன் என்றும்,

நிறத்திற் கந்தனென்று … பொன் போன்ற நிறத்துக்கு
கந்தப்பெருமான் என்றும்

இனைவொரை … கொடுப்பதற்கு வருந்தும் செல்வந்தரிடம் சென்று,

நிலத்திற் றன்பெரும் பசிக்கு … இந்த உலகத்தில் தன் பெரும்
பசியைப் போக்குதற்கு

தஞ்சமென்றரற்றி … நீயே புகலிடம் என்று கூறி முறையிட்டு,

துன்பநெஞ்சினில் … துயரம் மிகுந்த மனதில்

நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்து … தினமும் புதுப்புதுச்
சொற்களின் கூட்டத்தால் ஒரு கவிதை பாடி,

சங்கடம் புகட்டிக் கொண்டு உடம்பழிமாயும் … சங்கடத்தில்
சிக்கி உடம்பு அழிந்து மாய்கின்ற

புலத்திற் சஞ்சலங் குலைத்திட்டு … புலன்களால் வரும்
துன்பங்களைத் தொலைத்து,

உன்பதம் புணர்க்கைக்கு … உன் திருவடியைச் சேர்வதற்கு உரிய

அன்புதந்தருள்வாயே … அன்பினை வழங்கி அருள்வாயாக.

மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும் … மனத்தில் கருதி,
வலிய திரிபுரத்தை புன்னகை செய்தே எரித்த

மறத்திற் றந்தை … வீரம் மிகுந்த தந்தையாரும்,

மன்றினிலாடி … அம்பலத்தில் ஆனந்த நடனம் புரிந்தவரும்,

மழுக்கைக் கொண்டசங்கரர்க்குச் சென்று … மழுவைக் கரத்தில்
ஏந்தியவருமான சங்கரற்கு குருவாகச் சென்று,

வண்டமிழ்ச்சொற் சந்தமொன்று அருள்வோனே … வளமான
தமிழ்ச் சொற்களால் வேதப் பொருளை ஓதியவனே,

குதித்துக் குன்று இடந்து அலைத்து … அலைகள் குதித்து,
குன்றுகளைத் தோண்டி அலைத்து,

செம்பொனுங் கொழித்துக் கொண்ட … சிவந்த பொன்னையும்
கொழித்துத் தள்ளுகின்ற

செந்திலின்வாழ்வே … திருச்செந்தூரின் செல்வமே,

குறப்பொற் கொம்பை … குறவர்களின் பொன்னான குலக்கொடியாகிய
வள்ளியை

முன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே. …
முன்பு தினைப்புனத்தில் செம்மையான கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட
பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *