ஆன்மிகம்ஆலோசனைசிலேட்குச்சி வீடியோஸ்

திருப்புகழ் 70 நாலும் ஐந்து வாசல் (திருச்செந்தூர்)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் மன நிம்மதி அடையும்.

பாடல் வரிகள்:

நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
     நாரி யென்பி லாகு மாக …… மதனூடே

நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
     நாட றிந்தி டாம லேக …… வளராமுன்

நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
     நூறு செஞ்சொல் கூறி மாறி …… விளைதீமை

நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான
     நூல டங்க வோத வாழ்வு …… தருவாயே

காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
     காலம் வந்து வோல மோல …… மெனுமாதி

காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்
     காள கண்ட ரோடு வேத …… மொழிவோனே

ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
     ஆழி யங்கை ஆயன் மாயன் …… மருகோனே

ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
     யான செந்தில் வாழ்வ தான …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

நாலும் ஐந்து வாசல் கீறு தூறு … ஒன்பது* வாசல்களைப் பிளந்து
வைத்த, அவதூறுக்கு இடமான,

உடம்பு கால்கை யாகி … இவ்வுடம்பு கால்களும் கரங்களும் கொண்டு,

நாரி யென்பில் ஆகும் ஆகம் … நரம்புகள், எலும்புகள் இவைகளால்
ஆகிய சரீரம்.

அதனூடே நாதம் ஒன்ற … அந்த உடம்பினுள் ஒலி என்னும்
இந்திரியம் பொருந்த,

ஆதி வாயில் … எல்லாத் தொழில்களுக்கும் மூல காரணமான
ஐம்பொறிகள் கொண்டு

நாடகங்க ளான ஆடி … பல வகையான கூத்துக்களை இவ்வுலகில்
ஆடி,

நாடறிந்திடாமல் ஏக … இவ்வாறு உயிர் போயிற்று என்று உலகில்
யாரும் அறியாதபடி உயிர் பிரியும் வரை

வளராமுன் … இந்த உடம்பு வளர்வதற்கு முன்பு,

நூல் அநந்த கோடி தேடி மால்மிகுந்து … பல கோடி நூல்களைத்
தேடிப் படித்து மயக்கத்தை அடைந்து,

பாருளோரை நூறு செஞ்சொல் கூறி … உலகில் உள்ள
செல்வந்தரை நூறு செவ்வையான சொற்களால் பாடி,

மாறி விளைதீமை … புத்தி மாறி, அதனால் தீமை விளைந்து,

நோய்கலந்த வாழ்வுறாமல் … பலவிதமான பிணிகளுடன் கலந்த
துன்ப வாழ்வை அடையாமல்,

நீகலந்து … நீ எனது அறிவில் கலந்து

உள் ஆகு ஞான நூல் அ டங்க … உள்ளத்தில் பொருந்தும் ஞான
சாஸ்திரங்கள் முழுவதும்

ஓத வாழ்வு தருவாயே … ஓதி உணரக் கூடிய வாழ்வைத்
தந்தருள்வாயாக.

காலன் வந்து பாலன் ஆவி காய வென்று … யமன் வந்து
இளைஞன் மார்க்கண்டேயனின் உயிரை வருத்த

பாசம் வீசு காலம் வந்து … பாசக்கயிறை வீசுகின்ற சமயத்திலே
வெளிப்பட்டு

ஓலம் ஓலம் எனும் ஆதி … அஞ்சேல் அஞ்சேல் என்று அருளிய
ஆதி முதல்வரும்,

காமன் ஐந்து பாணமோடு வேமின் … மன்மதனை நீ உனது
ஐந்து மலர்க் கணைகளோடு எரிவாயாக

என்றுகாணு மோனர் … என்று நெற்றிக் கண்ணால் பார்த்த மெளன
மூர்த்தியும்,

காள கண்ட ரோடு … நீலகண்டருமாகிய சிவபெருமானுக்கு

வேத மொழிவோனே … வேத முதலாகிய பிரணவ மந்திரத்தின்
உட்பொருளை உபதேசித்தவனே,

ஆல மொன்று வேலை யாகி … ஆலகாலம் தோன்றிய பாற்கடலில்
பள்ளிகொண்டு,

யானை யஞ்சல் தீரு மூல … கஜேந்திரன் என்னும் யானையின்
அச்சத்தைத் தீர்த்த ஆதிமூலப் பொருளும்,

ஆழி யங்கை ஆயன் மாயன் மருகோனே … சக்ராயுதத்தை
அழகிய கரத்தில் ஏந்துபவரும், ஆயர் குலத்தில் தோன்றியவருமான
மாயன் திருமாலின் மருகோனே,

ஆரணங்கள் தாளை நாட … வேதங்களெல்லாம் உனது
திருவடிகளைத் துதிக்க,

வாரணம் கை மேவும் … சேவற் கொடியைக் கரத்திலே தாங்கிய

ஆதியான செந்தில் வாழ்வதான பெருமாளே. … ஆதிப் பரம்
பொருளாகி, திருச்செந்தூரில் வாழ்கின்ற பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *