திருப்புகழ் 69 தோலொடு மூடிய (திருச்செந்தூர்)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் திருமண தடை நீங்கும்.
பாடல் வரிகள்:
தோலொடு மூடிய கூரையை நம்பிப்
பாவையர் தோதக லீலைநி ரம்பிச்
சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் …… புதிதான
தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்
கோவையு லாமடல் கூறிய ழுந்தித்
தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் …… கலமாருங்
காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
கோளனை மானமி லாவழி நெஞ்சக்
காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் …… புலையேனைக்
காரண காரிய லோகப்ர பஞ்சச்
சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்
காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் …… றருளாதோ
பாலன மீதும னான்முக செம்பொற்
பாலனை மோதப ராதன பண்டப்
பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் …… றமராடிப்
பாவியி ராவண னார்தலை சிந்திச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் …… கினியோனே
சீலமு லாவிய நாரதர் வந்துற்
றீதவள் வாழ்புன மாமென முந்தித்
தேமொழி பாளித கோமள இன்பக் …… கிரிதோய்வாய்
சேலொடு வாளைவ ரால்கள்கி ளம்பித்
தாறுகொள் பூகம ளாவிய இன்பச்
சீரலை வாய்நகர் மேவிய கந்தப் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
தோலொடு மூடிய கூரையை நம்பி … தோல் கொண்டு மூடப்பட்ட
இந்த உடலை நம்பி,
பாவையர் தோதக லீலைநி ரம்பி … மாதர்களுடைய வஞ்சக
லீலைகள் நிரம்புவதால்,
சூழ்பொருள் தேடிட ஓடிவ ருந்தி … அவர்களுக்கு வேண்டிய
பொருளைத் தேட வேண்டி ஓடியும், வருந்தியும்,
புதிதான தூதொடு நான்மணி மாலைப்ரபந்த … புதுவிதமான
நூல்களாக தூது, நான்மணிமாலை, பிரபந்தங்கள்,
கோவையு லாமடல் கூறியழுந்தி … கோவை, உலா, மடல்*
முதலியவற்றைப் பாடி, அவற்றிலேயே ஈடுபட்டு,
தோமுறு காளையர் வாசல்தொ றும்புக்கு அலமாரும் …
குற்றம் நிறைந்த இளைஞர்களின் வாசல் தோறும் புகுந்து வருந்துகின்ற
காலனை வீணனை நீதிகெ டும்பொய்க் கோளனை …
கால்களைக் கொண்டவனை, வீணனை, நீதி தவறிய பொய்யைக்
கொண்டவனை,
மானமிலா அழி நெஞ்சக் காதக லோபவ்ருதாவனை …
மானமில்லாது அழிந்திடும் நெஞ்சனை, பிறரை வருத்தும் லோபியை,
பயனற்றவனை,
நிந்தைப் புலையேனை … நிந்திக்கப்படும் கீழ்மகனாகிய என்னை,
காரண காரிய லோகப்ரபஞ்சச் சோகமெலாம் அற … காரண,
காரியத் தொடர்போடு வரும் இவ்வுலகத் துன்பங்கள் எல்லாம் நீங்கவும்,
வாழ்வுற நம்பிற் காசறு வாரி … நல்வாழ்வு சேரவும், விருப்பமுடன்
குற்றமற்ற செல்வமாகிய
மெய்ஞ் ஞான தவஞ்சற்றருளாதோ … உண்மை ஞானமான
தவநிலை வந்தடைய சிறிதாவது அருளக்கூடாதோ?
பால் அ(ன்)ன மீதுமன் நான்முக … பால் போன்ற வெண்மையான
அன்னத்தின் மீது வீற்றிருந்து, நான்கு முகங்களும்
செம்பொற் பாலனை மோது அபராதன … பொன்னிறமும்
கொண்டு, படைத்தல் தொழில் செய்யும் பிரமனை, முன்பு தலைகளில்
குட்டி, தண்டனை விதித்தவனே,
பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்று அமராடி …
முன்பு, அந்தப் பெரிய அநுமானின் தோளிலே வீற்றிருந்து போர் செய்து,
பாவியி ராவணனார்தலை சிந்தி … பாவியாம் ராவணனுடைய
தலைகள் சிதறவும்,
சீரிய வீடணர் வாழ்வுற … உத்தமனாம் விபீஷணன் வாழ்வுறவும்
செய்து,
மன்றற் பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்கு
இனியோனே … மணந்த பாவையாம் சீதையின் தோளைத் தழுவிய
மாமனாம் (ராமனின்) திருமாலின் சிந்தைக்கு இனியவனே,
சீலமு லாவிய நாரதர் வந்துற்று … நல்ல குணங்கள் நிறைந்த
நாரத முநிவர் உன்னிடம் வந்து,
ஈதவள் வாழ்புன மாமென முந்தி … இதுதான் அவ்வள்ளி வாழும்
தினைப்புனமாகும் என்று குறிப்பிட்டுக் காட்ட, உடனே நீ முடுகிச்
சென்று,
தேமொழி பாளித கோமள இன்பக்கிரிதோய்வாய் … தேன்
போன்ற மொழியாளாகிய வள்ளியின் பச்சைக்கற்பூர கலவையை
அணிந்த, அழகிய, இன்பம் நல்கும் மலையொத்த மார்பினைத்
தழுவியவனே,
சேலொடு வாளைவரால்கள் கிளம்பி … சேல், வாளை, வரால்
மீன்கள் யாவும் கிளம்பித் துள்ளிப் பாய்ந்து,
தாறுகொள் பூகம் அளாவிய இன்ப … குலைசாய்த்திருக்கும்
பாக்கு மரங்களில் குலாவும் இன்பகரமான
சீரலை வாய்நகர் மேவிய கந்தப் பெருமாளே. … திருச்செந்தூர்
நகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே