ஆன்மிகம்ஆலோசனைசிலேட்குச்சி வீடியோஸ்

திருப்புகழ் 66 தெருப்புறத்து (திருச்செந்தூர்)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

பாடல் வரிகள்:

தெருப்பு றத்துத் துவக்கியாய்
     முலைக்கு வட்டைக் குலுக்கியாய்
          சிரித்து ருக்கித் தருக்கியே …… பண்டைகூள மெனவாழ்

சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய்
     மனத்தை வைத்துக் கனத்தபேர்
          தியக்க முற்றுத் தவிக்கவே …… கண்டுபேசி யுடனே

இருப்ப கத்துத் தளத்துமேல்
     விளக்கெ டுத்துப் படுத்துமே
          லிருத்தி வைத்துப் பசப்பியே …… கொண்டுகாசு தணியா

திதுக்க துக்குக் கடப்படா
     மெனக்கை கக்கக் கழற்றியே
          இளைக்க விட்டுத் துரத்துவார் …… தங்கள்சேர்வை தவிராய்

பொருப்பை யொக்கப் பணைத்ததோ
     ரிரட்டி பத்துப் புயத்தினால்
          பொறுத்த பத்துச் சிரத்தினால் …… மண்டுகோப முடனே

பொரப்பொ ருப்பிற் கதித்தபோ
     ரரக்கர் பட்டுப் பதைக்கவே
          புடைத்து முட்டத் துணித்தமா …… லன்புகூரு மருகா

வரப்பை யெட்டிக் குதித்துமே
     லிடத்தில் வட்டத் தளத்திலே
          மதர்த்த முத்தைக் குவட்டியே …… நின்றுசேலி னினம்வாழ்

வயற்பு றத்துப் புவிக்குள்நீள்
     திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ்
          வயத்த நித்தத் துவத்தனே …… செந்தில்மேவு குகனே.

……… சொல் விளக்கம் ………

தெருப் புறத்து துவக்கியாய் முலைக் குவட்டைக்
குலுக்கியாய்
 … தெருவின் வெளிப்புறத்திலேயே கட்டுண்டவராக
நிற்பவர்களாய், மார்பகம் என்னும் மலையைக் குலுக்குபவர்களாய்,

சிரித்து உருக்கித் தருக்கியே பண்டை கூளம் என வாழ்
சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய்
 … சிரித்துப் பேசி, வரும்
ஆடவர்கள் மனதை உருக்கியும், அகங்கரித்தும், பழைய குப்பை என்று
வாழும்படி, (வேசியர் குலத்து) இளம் பெண்கள் பெரிதாகக் காப்பவர்கள்
போல இதமான மொழியைக் கூறுபவர்களாய்,

மனத்தை வைத்துக் கனத்த பேர் தியக்கம் உற்றுத் தவிக்கவே
கண்டு பேசி
 … செல்வத்தில் மனதை வைத்து, பலமான பேர்வழிகளான
ஆடவர் தம்மேல் மயக்கம் கொண்டு தவிக்குமாறு அவர்களைப் பார்த்தும்
பேசியும்,

உடனே இருப்பு அகத்துத் தளத்து மேல் விளக்கு எடுத்துப்
படுத்து மேல் இருத்தி வைத்துப் பசப்பியே கொண்டு காசு
தணியாது
 … உடனேயே (தாங்கள்) இருக்கும் வீட்டின் உள்ளே
தளத்தின் மேல் விளக்கை அணைத்துவிட்டு, படுத்து, மேலே படுக்க
வைத்து, பசப்பு நடிப்புகளை நடித்துக் கொண்டு, (கொடுத்த) பொருள்
போதாமல்,

இதுக்கு அதுக்குக் கடப்படாம் எனக் கை கக்கக் கழற்றியே
இளைக்க விட்டுத் துரத்துவார் தங்கள் சேர்வை தவிராய்
 …
இதற்கு வேண்டும், அதற்கு வேண்டும் என்று ஜாலப் பேச்சுக்களைப்
பேசி, கையில் உள்ள பொருள்களை எல்லாம் கக்கும்படிச் செய்து பிடுங்கி,
சோர்வடையும்படி செய்து (விரட்டித்) துரத்துவார்களுடன் சேருவதை
நீக்கி அருள்க.

பொருப்பை ஒக்கப் பணைத்தது ஓர் இரட்டி பத்துப்
புயத்தினால் பொறுத்த பத்துச் சிரத்தினால் மண்டு
கோபமுடனே பொர
 … மலைபோல பெருத்ததான இருபது
புயங்களாலும், அவை தாங்கியுள்ள பத்துத் தலைகளாலும், மிகுந்த
கோபத்துடன் (ராவணன்) சண்டை செய்ய,

பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டுப் பதைக்கவே
புடைத்து முட்டத் துணித்த மால் அன்பு கூரு மருகா
 … மலை
போல கொதித்தெழுந்த போர் அரக்கர்கள் யாவரும் சிதைக்கப்பட்டு
பதைக்கவே அவர்களை அடித்து எல்லாரையும் வெட்டி ஒழித்த (ராமராக
வந்த) திருமால் அன்பு மிக வைத்துள்ள மருகனே,

வரப்பை எட்டிக் குதித்து மேல் இடத்தில் வட்டத் தளத்திலே
மதர்த்த முத்தைக் குவட்டியே நின்று சேல் இனம் வாழ்
 …
வயலின் வரப்பின் மேல் எட்டிக் குதித்து மேலே உள்ள வட்டமான நிலப்
பரப்பில் செழிப்புடன் கிடக்கும் முத்தைக் குவியக் கூட்டி நின்று, சேல்
மீன் கூட்டங்கள் வாழும்

வயல் புறத்துப் புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில்
வாழ் வயத்த
 … வயற்புரங்களைக் கொண்ட, பூமியில் ஓங்கிய,
திருத்தணிகையில் சிறப்புடன் வாழ்கின்ற வெற்றியாளனே,

நித்தத் துவத்தனே செந்தில் மேவு குகனே. … என்றும்
உள்ளவனே, திருச் செந்தூரில் வாழ்கின்ற குகனே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *