திருப்புகழ் 64 தரிக்குங்கலை (திருச்செந்தூர்)
செவ்வாய் கிழமையான இன்று முருகனுக்கு உகந்த நாளாகும் இன்றைய நாளில் இப்பாடலை படித்தால் அனைத்து வகையான செல்வங்களும் கிடைக்கும்.
பாடல் வரிகள்:
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
தவிக்குங்கொடி …… மதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
தமிழ்த்தென்றலி …… னுடனேநின்
றெரிக்கும்பிறை யெனப்புண்படு
மெனப்புன்கவி …… சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
யுரைத்துய்ந்திட …… அறியாரே
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
மனுக்குந்தெரி …… வரிதான
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு
மரற்கும்புரி …… தவபாரக்
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
வரிக்குங்குரு …… பரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்கிளை
கெடக்கன்றிய …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
தரிக்குங்கலை நெகிழ்க்கும் … உடுத்தியுள்ள ஆடை அவிழ்கின்றது,
பரதவிக்கும் … விரக வேதனையால் தவிக்கின்றேன்,
கொடி மதனேவில் தகைக்கும் … கொடி போன்ற யான் மன்மதனது
பாணத்தால் தடை படுகின்றேன்,
தனி திகைக்கும் … தனிமையில் நின்று திகைக்கின்றேன்,
சிறு தமிழ்த்தென்றலினுடனே … மெல்லிய இனிய தென்றல்
காற்றினுடன் வந்து
நின்றெரிக்கும்பிறை யெனப்புண்படும் … சந்திரன் நின்று
கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன்,
எனப்புன்கவி சிலபாடி … என்றெல்லாம் புன்மையான கவிதைகள்
சிலவற்றை மனிதர்கள் மீது பாடி
இருக்குஞ்சிலர் … சில புலவர்கள் வீணே இருக்கின்றனர்.
திருச்செந்திலை உரைத்துய்ந்திட அறியாரே … திருச்செந்தூரில்
எழுந்தருளிய உன்னைப் பற்றிப் பாடி கடைத்தேற அறிய மாட்டார்களோ?
அரிக்குஞ் சதுர் மறைக்கும் … திருமாலுக்கும், நான்கு வேதங்களுக்கும்,
பிரமனுக்குந் தெரிவரிதான அடி … பிரமனுக்கும் காண்பதற்கு
முடியாத திருவடியையும்
செஞ்சடை முடிக்கொண்டிடும் அரற்கும் … சிவந்த ஜடாமுடியையும்
உடைய சிவ பிரானுக்கும்,
புரி தவபாரக் கிரிக் கும்ப* நன் முநிக்கும் … செய்தவம்
நிறைந்தவரும், பொதிய மலையில் வாழ்பவருமான அகஸ்திய முநிவருக்கும்,
க்ருபை வரிக்கும் குருபரவாழ்வே … கருணை புரிந்து உபதேசித்த
மேலான குருமூர்த்தியே,
கிளைக்குந்திற லரக்கன் … சுற்றத்தார் சூழ வலிமையுடன் வந்த
அரக்கன் சூரன்
கிளை கெடக்கன்றிய பெருமாளே. … தன் குலத்தோடு
அழியும்படிக் கோபித்த பெருமாளே.