திருப்புகழ் 63 தந்த பசிதனை (திருச்செந்தூர்)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்வார்.
பாடல் வரிகள்:
தந்த பசிதனைய றிந்து முலையமுது
தந்து முதுகுதட …… வியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயி …… ரெனவேசார்
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
மந்த வரிசைமொழி …… பகர்கேடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிட …… மிசையேறி
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலிய …… மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம
தன்ப னெனமொழிய …… வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு …… மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி னகரிலுறை …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
தந்த பசிதனையறிந்து முலையமுது தந்து … ஏற்பட்ட பசியை
அறிந்து, முலைப்பால் தந்து,
முதுகு தடவிய தாயார் … முதுகைத் தடவிவிட்ட தாயார்,
தம்பி பணிவிடைசெய் தொண்டர் … தம்பி, ஏவல் செய்து வந்த
வேலைக்காரர்கள்,
பிரியமுள தங்கை மருகர் உயிரெனவே சார் … அன்புமிக்க
தங்கை, மருமக்கள், தம்முயிர் போல அன்பு பூண்டு சார்ந்திருந்த
மைந்தர் மனைவியர்கடும்பு கடனுதவும் … பிள்ளைகள்,
மனைவியர், சுற்றத்தார், யாவரும் தத்தம் கடமைக்குரிய
அந்த வரிசைமொழி பகர்கேடா வந்து … அந்த உறவு
முறைகளைச் சொல்லிக்கொண்டு, குறையுடன் வந்து
தலைநவிர் அவிழ்ந்து தரைபுக மயங்க … தலைமயிர் அவிழ்ந்து
தரையில் விழவும், மயங்கவும்,
ஒருமகிட மிசையேறி … ஓர் எருமைக்கடாவின் மேல் ஏறி
அந்தகனும் எனைய டர்ந்து வருகையினில் … யமனும் என்னை
நெருங்கி வரும்போது,
அஞ்ச லெனவலிய மயில்மேல்நீ … அஞ்சாதே என்று
கூறியவண்ணம் வலியதான மயில் மீது நீ
அந்த மறலியொடு உகந்த மனிதன் … அந்த யமனிடம் இவன்
நமக்கு மிகவும் வேண்டிய மனிதன்,
நமதன்பன் எனமொழிய வருவாயே … நம்முடைய அன்பன்
என்று சொல்லவந்து அருள்வாயாக.
சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள் … சிந்தை
மகிழும்படியாக, ஹிமவான் மகளாகிய பார்வதியின் இரண்டு மார்பிலும்
சிந்து பயமயிலும் அயில்வீரா … பீறிட்ட பால் அமுதை உண்ட
வேலாயுதக் கடவுளே,
திங்கள் அரவுநதி துன்று சடிலர் அருள் … நிலவும், பாம்பும்,
கங்கைநதியும் நெருங்கிப் பொதிந்துள்ள ஜடாமுடியை உடைய
சிவபெருமான் அருளியவனே,
செந்தி னகரிலுறை பெருமாளே. … திருச்செந்தூர் நகரில்
வீற்றிருக்கும் பெருமாளே.