ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 61 தண் தேனுண்டே (திருச்செந்தூர்)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் மன கசப்பு நீங்கும்.

பாடல் வரிகள்

தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
     தண்டார் மஞ்சுக் …… குழல்மானார்

தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
     சம்பா வஞ்சொற் …… றடிநாயேன்

மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்
     வண்கா யம்பொய்க் …… குடில்வேறாய்

வன்கா னம்போ யண்டா முன்பே
     வந்தே நின்பொற் …… கழல்தாராய்

கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
     கொன்றாய் வென்றிக் …… குமரேசா

கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
     குன்றா மன்றற் …… கிரியோனே

கண்டா கும்பா லுண்டா யண்டார்
     கண்டா கந்தப் …… புயவேளே

கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
     கந்தா செந்திற் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

தண் தேனுண்டே … குளிர்ந்த தேனைப் பருகி

வண்டார் வஞ்சேர் … வண்டுகள் ஆர்வத்துடன் மொய்க்கின்ற

தண் தார் மஞ்சுக் குழல்மானார் தம்பால் … தண்மையான
மாலைகளைச் சூடிய மேகம் போன்ற கூந்தலையுடைய பெண்களிடத்தில்

அன்பார் நெஞ்சே கொண்டே … அன்பு நிறைந்த மனத்தைக்
கொண்டு சல்லாபித்து

சம்பாவஞ் சொற்று அடிநாயேன் … சம்பாஷணைகளைச் செய்கின்ற
நாயினும் கீழான அடியேன்,

மண் தோயம் தீ மென்கால் விண்தோய் … மண், நீர், தீ,
மென்மையான காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலான

வண்காயம் பொய்க்குடில் வேறாய் … வளமிக்க இந்த சரீரமாகிய
பொய்க் குடிசையிலிருந்து உயிர் நீங்கி,

வன்கானம்போய் அண்டா முன்பே … கொடும் சுடுகாட்டுக்கு
அருகில் நெருங்குவதற்கு முன்பாக

வந்தே நின்பொற்கழல்தாராய் … என்முன் தோன்றி உன் அழகிய
திருவடிகளைத் தந்தருள்வாயாக.

கொண்டாடும்பேர் கொண்டாடுஞ்சூர் … தன்னைக் கொண்டாடிப்
புகழ்பவர்களுடன் கூடி மகிழும் சூரனை

கொன்றாய் வென்றிக் குமரேசா … கொன்றவனே, வெற்றியை
உடைய குமரேசனே,

கொங்கார் வண்டு ஆர் பண்பாடும் … பூக்களின் மகரந்தங்களில்
நிறைந்த வண்டுகள் அருமையாய் இசைக்கும்

சீர்குன்றா மன்றற்கிரியோனே … சிறப்பு குறையாத வள்ளிமலையில்*
வாழ்பவனே,

கண்டாகும் பாலுண்டாய் … கற்கண்டு போன்று இனிக்கும்
உமையின் திருமுலைப்பால் உண்டவனே,

அண்டார் கண்டா கந்தப் புயவேளே … பகைவர்களைக் கண்டித்தவனே,
மணம் கமழும் புயத்தை உடையவனே

கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா … கம்பம் போன்ற
வலிமையுள்ள அழகிய தோள்களை உடைய குமரா,

கந்தா செந்திற் பெருமாளே. … கந்தனே, திருச்செந்தூர்ப் பதியில்
வாழும் பெருமாளே.

மேலும் படிக்க : திருப்புகழ் 104 அகல்வினை (பழநி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *