திருப்புகழ் 56 சங்கை தான் ஒன்று (திருச்செந்தூர்)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
பாடல் வரிகள்:
சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
சஞ்சலா …… ரம்பமாயன்
சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
சம்ப்ரமா …… நந்தமாயன்
மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
வம்பிலே …… துன்புறாமே
வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
வந்துநீ …… யன்பிலாள்வாய்
கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே …… விஞ்சையூரா
கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
கண்டலே …… சன்சொல்வீரா
செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்றுமோ …… தும்ப்ரதாபா
செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
செந்தில்வாழ் …… தம்பிரானே.
சொல் விளக்கம்:
சங்கை தான் ஒன்று தான் இன்றியே நெஞ்சிலே சஞ்சல
ஆரம்ப மாயன் … கொஞ்சமும் சந்தேகம் இல்லாமல், மனத்தில் சஞ்சலம்
கொண்டுள்ள மாயையில் தொடக்கத்தில் இருந்தே அகப்பட்டவனும்,
சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பர சம்ப்ரம ஆநந்த
மாயன் … சந்தனத்துடன், குங்குமம் இவைகளால் சிங்கார ஆடம்பரம்
செய்துகொண்டு, பரபரப்பான களிப்பும், ஆனந்தமும் கொண்ட
மாயையில் அகப்பட்டவனும் ஆகிய நான்
மங்கைமார் கொங்கை சேர் அங்க மோகங்களால் வம்பிலே
துன்புறாமே … விலைமாதர்களின் மார்பகம் முதலான அங்கங்களின்
மேல் உள்ள மோகங்களால் வீணாகத் துன்பம் கொள்ளாமல்,
வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில்
ஆள்வாய் … வள்ளல் தன்மை வாய்ந்த குகனே, உனது திருவுருவமான
பேரொளியுடன் நீ வந்து அன்புடன் என்னை ஆண்டருளுக.
கங்கை சூடும் பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சை
ஊரா … கங்கையைத் தலையில் சூடியுள்ள பிரானாகிய சிவ பெருமானின்
மகனே, அழகனே, கந்தப் பெருமானே, வித்தையில் சிறந்தவர் ஊர்களில்
வாழ்பவனே,
கம்பியாது இந்த்ர லோகங்கள் கா என்று அவ் ஆகண்டலேசன்
சொல் வீரா … நாங்கள் நடுக்கம் கொள்ளாதவாறு எங்கள்
பொன்னுலகைக் காத்தருள்க என்று முறையிட்ட அந்த (ஆகண்டலேசன்
என்னும்) இந்திரன் புகழ்ந்த வீரனே,
செம் கை வேல் வென்றி வேல் கொண்டு சூர் பொன்றவே
சென்று மோதும் ப்ரதாபா … செங்கையில் உள்ள ஆயுதமாகிய
வெற்றிவேல் கொண்டு சூரன் அழியவே, சென்று அவனைத் தாக்கிய
கீர்த்தி உள்ளவனே,
செம் கண் மால் பங்கஜான(ன)ன் தொழு ஆநந்த வேள் …
சிவந்த கண்களை உடைய திருமாலும், தாமரையில் வாழும் பிரமனும்
தொழுகின்ற ஆனந்தமான முருக வேளே,
செந்தில் வாழ் தம்பிரானே. … திருச்செந்தூரில் வீற்றிருக்கும்
தலைவனே.
மேலும் படிக்க : நேர்மறை எண்ணங்கள் தரும் ஆற்றல்மிக்க வளர்ச்சி!