திருப்புகழ் 54 கொலை மதகரி (திருச்செந்தூர்)
திருப்புகழில் அப்பன் முருகன் பற்றி அருணகிரிநாதர் புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் செல்வ வளம் பெருகும்.
பாடல் வரிகள்:
கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
கும்பத் …… தனமானார்
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
கொண்டுற் …… றிடுநாயேன்
நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி
நின்றுற் …… றிடவேதான்
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
நின்பற் …… றடைவேனோ
சிலையென வடமலை யுடையவர் அருளிய
செஞ்சொற் …… சிறுபாலா
திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த
செந்திற் …… பதிவேலா
விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
ரும்பிப் …… புணர்வோனே
விருதணி மரகத மயில்வரு குமரவி
டங்கப் …… பெருமாளே.
சொல் விளக்கம்:
கொலை மத கரி அ(ன்)ன ம்ருமகத தன கிரி கும்பத் தன
மானார் … கொலை செய்யும் மத யானைக்கு ஒப்பானதும், கஸ்தூரி
அணிந்ததும், குடம் போன்றதும் ஆகிய மார்பகங்களை உடைய
விலைமாதர்களின்
குமுத அமுத இதழ் பருகி உருகி மயல் கொண்டு உற்றிடு
நாயேன் … குமுத மலர் போன்றதும், அமுதம் தருவதுமான
வாயிதழ் ஊறலைப் பருகி, மனம் உருகி மோக மயக்கம்
கொண்டுள்ள நாயேனுடைய
நிலை அழி கவலைகள் கெட உனது அருள் விழி நின்று
உற்றிடவே தான் … நல்ல நிலையை அழிக்கின்ற கவலைகள்
எல்லாம் நீங்குமாறு, உனது அருட் பார்வையில் நின்று நிலை
பெறுவதற்கு,
நின திருவடி மலர் இணை மனதினில் உற நின் பற்று
அடைவேனோ … உன்னுடைய இரண்டு திருவடி மலர்
இணைகளை மனத்தில் இருக்கச் செய்ய உன் மீது பற்றைப்
பெறுவேனோ?
சிலை என வட மலை உடையவர் அருளிய செம் சொல்
சிறு பாலா … வில்லாக வடக்கில் உள்ள மேரு மலையைக்
கொண்டவராகிய சிவபெருமான் பெற்ற, செவ்விய சொற்களை
உடைய, சிறு குழந்தையே,
திரை கடலிடை வரும் அசுரனை வதை செய்த செந்தில்
பதி வேலா … அலை கடலின் நடுவே நின்ற சூரனை வதைத்த
திருச்செந்தூர் நகர் வேலவனே,
வி(ல்)லை நிகர் நுதல் இப மயில் குற மகளும் விரும்பிப்
புணர்வோனே … வில்லுக்கு நிகரான நெற்றியை உடைய,
(ஐராவதம் என்ற) யானை போற்றி வளர்த்த மயில் போன்ற
தேவயானையையும், குறப் பெண்ணாகிய வள்ளியையும்
விரும்பி மணம் புரிந்தவனே,
விருது அணி மரகத மயில் வரு குமர விடங்கப்*
பெருமாளே. … வெற்றிச் சின்னம் அணிந்த பச்சை மயிலில்
ஏறி வரும் குமரனே, சுயம்பு மூர்த்தியாக வந்த பெருமாளே.