ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 53 கொம்பனையார் (திருச்செந்தூர்)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கும்.

பாடல் வரிகள்:

கொம்பனை யார்காது மோதிரு
     கண்களி லாமோத சீதள
          குங்கும பாடீர பூஷண …… நகமேவு

கொங்கையி னீராவி மேல்வளர்
     செங்கழு நீர்மாலை சூடிய
          கொண்டையி லாதார சோபையில் …… மருளாதே

உம்பர்கள் ஸ்வாமிந மோநம
     எம்பெரு மானேந மோநம
          ஒண்டொடி மோகாந மோநம …… எனநாளும்

உன்புக ழேபாடி நானினி
     அன்புட னாசார பூசைசெய்
          துய்ந்திட வீணாள்ப டாதருள் …… புரிவாயே

பம்பர மேபோல ஆடிய
     சங்கரி வேதாள நாயகி
          பங்கய சீபாத நூபுரி …… கரசூலி

பங்கமி லாநீலி மோடிப
     யங்கரி மாகாளி யோகினி
          பண்டுசு ராபான சூரனொ …… டெதிர்போர்கண்

டெம்புதல் வாவாழி வாழியெ
     னும்படி வீறான வேல்தர
          என்றுமு ளானேம நோகர …… வயலூரா

இன்சொல்வி சாகாக்ரு பாகர
     செந்திலில் வாழ்வாகி யேயடி
          யென்றனை யீடேற வாழ்வருள் …… பெருமாளே.

சொல் விளக்கம்:

கொம்பனையார் காது மோது இரு கண்களில் … பூங்கொடி
போன்ற மாதர்களின் காதுவரை நீண்டு அதை மோதும் இரண்டு
கண்களிலும்,

ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகமேவு
கொங்கையில்
 … வாசம் மிக்கதும், குளிர்ந்த செஞ்சாந்து, சந்தனம்,
நகைகள் அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களிலும்,

நீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையில் …
நீர்த் தடாகத்தின் மேல் வளரும் செங்கழுநீர் மலர்மாலையைச் சூடிய
கூந்தலிலும்,

ஆதார சோபையில் மருளாதே … உடலின் அழகிலும்
மயங்காமல்,

உம்பர்கள் ஸ்வாமி நமோநம … தேவர்களின் ஸ்வாமியே போற்றி,
போற்றி,

எம்பெருமானே நமோநம … எங்கள் பெருமானே போற்றி, போற்றி,

ஒண்டொடி மோகா நமோநம … ஒளி பொருந்திய வளையல்களை
அணிந்த வள்ளியிடம் மோகம் கொண்டவனே போற்றி, போற்றி,

எனநாளும் உன்புகழேபாடி … என்று தினமும் உனது புகழையே
பாடி

நானினி அன்புடன் ஆசார பூசைசெய்துய்ந்திட … யான் இனி
அன்புடனே ஆசாரமான பூஜையைச் செய்து பிழைத்திடவும்,

வீணாள்படாதருள் புரிவாயே … என் வாழ்நாள் வீண் நாளாகப்
போகாதபடியும் அருள் புரிவாயாக.

பம்பரமேபோல ஆடிய சங்கரி … பம்பரம் போலவே சுழன்று
நடனம் ஆடும் சங்கரி,

வேதாள நாயகி … வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு)
தலைவி,

பங்கய சீபாத நூபுரி கரசூலி … தாமரை போன்ற திரு நிறைந்த
பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத்
தரித்தவள்,

பங்கமி லாநீலி மோடிபயங்கரி … குற்றமில்லாத கருநீல
நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள்
(தந்த பயத்தைப் போக்குபவள்)

மாகாளி யோகினி … மகா காளி, யோகத்தின் தலைவியாகிய
அன்னை பார்வதி,

பண்டுசுராபான சூரனொடெதிர் போர்கண்டு … முன்பு மதுபானம்
செய்திருந்த சூரனோடு நீ எதிர்த்துப் போர் செய்யவேண்டி,

எம் புதல்வா வாழி வாழியெனும்படி … என் மகனே நீ வாழ்க, வாழ்க
என்று ஆசி கூறும் வகையில்

வீறான வேல்தர என்றுமுளானே … வெற்றியைத் தரும்
வேலாயுதத்தைத் தரப்பெற்ற, என்றும் அழியாது விளங்கும் மூர்த்தியே,

மநோகர வயலூரா … மனத்துக்கு இன்பம் தருபவனே, வயலூர்ப்
பெருமானே,

இன்சொல் விசாகா க்ருபாகர … இனிய சொற்களை உடைய
விசாகப் பெருமானே, கருணை நிறைந்தவனே,

செந்திலில் வாழ்வாகியே யடியென்றனை … திருச்செந்தூரில்
வீற்றிருக்கும் செல்வமாகி அடியேனை

ஈடேற வாழ்வருள் பெருமாளே. … உய்விக்கும்படியாக வாழ்வை
எனக்கு அருளும் பெருமாளே.

மேலும் படிக்க : கோவிலுக்கு போகும் போது இதெல்லாம் செய்ங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *