திருப்புகழ் 49 குழைக்கும் சந்தன (திருச்செந்தூர்)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் குடும்பத்தில் உள்ள கஷ்டம் நீங்கும்
குழைக்குஞ்சந் தனச்செங்குங்
குமத்தின்சந் தநற்குன்றங்
குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் …… கியலாலே
குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்
றுரைக்குஞ்செங் கயற்கண்கொண்
டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் …… கியராலே
உழைக்குஞ்சங் கடத்துன்பன்
சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்
டுடற்பிண்டம் பருத்தின்றிங் …… குழலாதே
உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்
ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண்
டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் …… சடிசேராய்
தழைக்குங்கொன் றையைச்செம்பொன்
சடைக்கண்டங் கியைத்தங்குந்
தரத்தஞ்செம் புயத்தொன்றும் …… பெருமானார்
தனிப்பங்கின் புறத்தின்செம்
பரத்தின்பங் கயத்தின்சஞ்
சரிக்குஞ்சங் கரிக்கென்றும் …… பெருவாழ்வே
கழைக்குங்குஞ் சரக்கொம்புங்
கலைக்கொம்புங் கதித்தென்றுங்
கயற்கண்பண் பளிக்குந்திண் …… புயவேளே
கறுக்குங்கொண் டலிற்பொங்குங்
கடற்சங்கங் கொழிக்குஞ்செந்
திலிற்கொண்டன் பினிற்றங்கும் …… பெருமாளே.
சொல் விளக்கம்:
குழைக்கும் சந்தனச் செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம்
குலுக்கும் பைங்கொடிக்கு என்று … குழைத்துக் கலவையான
சந்தனம், சிகப்பு நிறமான குங்குமம் (இவைகள் பூசப்பட்ட) அழகிய
உயர்ந்த மலை போன்ற மார்பகங்களைக் குலுக்கும் பசுங்கொடி
போல் நின்று தோன்ற,
இங்கு இயலாலே குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று …
இங்கு இயல்பாகவே குண்டலம் தரித்த காதினிடத்தும், நிறமுள்ள
குமிழம்பூப் போன்ற மூக்கினிடத்தும் கண்கள் சென்று
உரைக்கும் செம் கயல் கண் கொண்டு அழைக்கும் பண்
தழைக்கும் சிங்கியராலே … பேசுவது போல செவ்விய கயல்
மீன் போன்ற கண்களைக் கொண்டு அழைக்கின்ற, இசைக் குரல்
தழைத்துள்ள, நஞ்சு போன்ற விலைமாதர்களுக்கு
உழைக்கும் சங்கடத் துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டு
உண்டு … உழைப்பதால் வரும் சங்கடங்களையும் துன்பங்களையும்
கொண்டவனாகிய நான், சுகமான பண்டங்களை அனுபவித்து
மிகுதியாக உண்டு,
உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே … உடலாகிய
பிண்டம் கனமானதாகி இந்த உலகில் அலையாமல்,
உதிக்கும் செம் கதிர்ச் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும்
தண்டு … உதிக்கின்ற செஞ்சூரியன் வீசும் ஒளிக்கு ஒப்பானதான
சிவந்த தண்டையிலும்,
உயர்க்கும் கிண்கிணிச் செம் பஞ்சு அடி சேராய் … மேலான
கிண்கிணியிலும், சிவந்த பஞ்சு போல் மிருதுவான அடியிலும்
என்னைச் சேர்த்து அருளுக.
தழைக்கும் கொன்றையைச் செம்பொன் சடைக்கு அண்ட
அங்கியைத் தங்கும் தரத்த செம் புயத்து ஒன்றும்
பெருமானார் … தழைத்துள்ள கொன்றை மலரை செம்பொன்
போன்ற சடையில் சேர்த்தும், நெருப்பைத் தங்கும் படியாக
அழகிய செவ்விய கையில் சேர்த்தும் உள்ள சிவபெருமானுடைய
தனிப் பங்கின் புறத்தின் செம் பரத்தின் பங்கயத்தின்
சஞ்சரிக்கும் சங்கரிக்கு என்றும் பெரு வாழ்வே …
ஒப்பற்ற இடது பாகத்தின் புறத்திலும், சிறந்த பர மண்டலத்திலும்,
தாமரை இருப்பிலும் உலவி நிற்கும் பார்வதிக்கு எப்போதும்
சிறந்த பிள்ளையே,
கழைக்கும் குஞ்சரக் கொம்பும் கலைக் கொம்பும் கதித்து
என்றும் கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே …
அங்குசம் அடக்கும் வெள்ளை யானை வளர்த்த கொடிபோன்ற
தேவயானையும், மான் வயிற்றில் பிறந்த வள்ளியும் மகிழ்வுற,
எப்போதும் (அவர்களுடைய) கயல் மீன் போன்ற கண்களுக்கு
இன்பம் தரும் திண்ணிய தோள்களை உடையவனே,
கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும்
செந்திலில் கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே. …
கரிய மேகம் போலப் பொங்கி எழும் கடல் சங்குகளைக் கொண்டு
கரையில் கொழிக்கின்ற திருச்செந்தூரை இருப்பிடமாகக்
கொண்டு, அன்புடன் அத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.