திருப்புகழ் 47 குகர மேவுமெய் (திருச்செந்தூர்)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை படித்தால் குடும்பம் மேன்மை அடையும்
பாடல் வரிகள்:
குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்
கும்பிட் டுந்தித் …… தடமூழ்கிக்
குமுத வாயின்முற் றமுதினை நுகராக்
கொண்டற் கொண்டைக் …… குழலாரோ
டகரு தூளிகர்ப் புரதன இருகோட்
டன்புற் றின்பக் …… கடலூடே
அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த்
தம்பொற் றண்டைக் …… கழல்தாராய்
ககன கோளகைக் கணவிரு மளவாக்
கங்கைத் துங்கப் …… புனலாடும்
கமல வாதனற் களவிட முடியாக்
கம்பர்க் கொன்றைப் …… புகல்வோனே
சிகர கோபுரத் தினுமதி ளினுமேற்
செம்பொற் கம்பத் …… தளமீதும்
தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச்
செந்திற் கந்தப் …… பெருமாளே.
பாடல் விளக்கம்:
குகரம் மேவு மெய்த் துறவினின் மறவாக் கும்பிட்டு … மலைக்
குகைளில் இருக்கும் உண்மைத் துறவிகள் போல மறவாத மனத்துடன்
(வேசிகளின் அடிகளைக்) கும்பிட்டு,
உந்தித் தடம் மூழ்கி குமுத வாயின் முற்று அமுதினை
நுகரா … (மாதர்களின்) தொப்புள் குளத்தில் முழுகி, அவர்களது
குமுத மலர் போன்ற மலர் வாயில் பெருகும் அமுதினைப் பருகி,
கொண்டல் கொண்டைக் குழலாரோடு அகரு தூளி கர்ப்புர
தன இரு கோட்டு அன்பு உற்று … மேகம் போன்ற கொண்டையிட்ட
கூந்தலாருடைய அகிற் பொடி, கற்பூரம் அணிந்த மார்பகங்களாகிய
இரு மலைகளின் மேல் அன்பு பூண்டு,
இன்பக் கடல் ஊடே அமிழுவேனை மெத்தென ஒரு கரை
சேர்த்து … இன்பக் கடலிடையே அமிழ்கின்ற என்னை பக்குவமாக
ஒப்பற்ற முக்திக் கரையில் சேர்த்து,
அம் பொன் தண்டைக் கழல் தாராய் … அழகிய பொன்னாலாகிய
தண்டை சூழ்ந்த திருவடியைத் தந்து அருளுக.
ககன(ம்) கோளகைக்கு அண இரும் அளவாக் கங்கைத்
துங்கப் புனல் ஆடும் … ஆகாய முகட்டில் அளவுக்கு அடங்காத
வெள்ளத்துடன் கங்கையாகிய புனித நீர் அசைந்தாடும்
கமல வதனற்கு அளவிட முடியாக் கம்பர்க்கு ஒன்றைப்
புகல்வோனே … தாமரைப் பீடத்தில் அமர்ந்துள்ள பிரமனால்
அளவிட முடியாத (கச்சி ஏகம்பராகிய) சிவபெருமானுக்கு ஒப்பற்ற
பிரணவப் பொருளைப் போதித்தவனே,
சிகர கோபுரத்தினும் மதிளினும் மேல் செம் பொன் கம்பத்
தளம் மீதும் … சிகரங்களை உடைய கோபுரத்தின் மீதும், மதில் மீதும்,
செம்பொன்னாலாகிய கம்பங்களின் மேல் அமைந்த தளத்தின் மீதும்,
தெருவிலே நித்திலம் எறி அலைவாய்ச் செந்தில் கந்தப்
பெருமாளே. … வீதியிலும் முத்துக்களை வீசி எறிகின்ற அலைகளின்
கரையில் (உள்ள) திருச்செந்தூர் பதியில் வாழும் கந்தப் பெருமாளே.