திருப்புகழ் 43 களபம் ஒழுகிய (திருச்செந்தூர்)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை படித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
களபம் ஒழுகிய புளகித முலையினர்
கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் …… எவரோடுங்
கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்
பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு
தளர விடுபவர் தெருவினில் எவரையும் …… நகையாடிப்
பிளவு பெறிலதி லளவள வொழுகியர்
நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு …… குழைவோடே
பிணமும் அணைபவர் வெறிதரு புனலுணும்
அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்
பெருமை யுடையவர் உறவினை விடஅருள் …… புரிவாயே
அளையில் உறைபுலி பெறுமக வயிறரு
பசுவின் நிரைமுலை யமுதுண நிரைமகள்
வசவ னொடுபுலி முலையுண மலையுடன் …… உருகாநீள்
அடவி தனிலுள உலவைகள் தளிர்விட
மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர …… விரல்சேரேழ்
தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய
இசைகள் பலபல தொனிதரு கருமுகில்
சுருதி யுடையவன் நெடியவன் மனமகிழ் …… மருகோனே
துணைவ குணதர சரவண பவநம
முருக குருபர வளரறு முககுக
துறையில் அலையெறி திருநகர் உறைதரு …… பெருமாளே.
சொல் விளக்கம்:
களபம் ஒழுகிய புளகித முலையினர் … சந்தனக் கலவை
ஒழுகுகின்ற புளகம் கொண்ட மார்பகத்தை உடையவர்,
கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் … விஷமும் அமுதமும்
கலந்த கண்களை உடையவர்,
கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும் கலகம் இடு
கயல் எறி குழை விரகியர் … கழுவி எடுத்து வாரிய, பொருத்தமான
வாசனைத் தைலம் ஒழுகும், கூந்தலை உடையவர், கயல் மீன் போன்ற
கண்கள் பரந்து மோதும் குண்டலங்களை அணிந்த, எல்லாரிடமும்
கலகம் செய்கின்ற, தந்திரவாதிகள்,
பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு தளர
விடுபவர் … பொருள் இல்லாத வாலிபர்களை தமது நடவடிக்கையாலும்
பேச்சுக்களாலும் தளர்ச்சி அடையச் செய்பவர்,
தெருவினில் எவரையும் நகை ஆடிப் பிளவு பெறில் அதில்
அளவு அளவு ஒழுகியர் … தெருவில் யாரோடும் சிரித்துப் பேசி,
பிரிவுக்குக் காரணம் ஏற்பட்டால் அதற்குத் தக்கபடி அளவோடு
நடந்து கொள்பவர்,
நடையில் உடையினில் அழகொடு திரிபவர் … நடையிலும்,
உடையிலும் அழகினோடு திரிபவர்,
பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே
பிணமும் அணைபவர் … மிக்க பொருள் கிடைத்தால், படுக்கையில்
இன்பத்துடனும் உருக்கத்துடனும் பிணத்தையும் தழுவுவர்,
வெறி தரு புனல் உ(ண்)ணும் அவச வனிதையர் முடுகொடும்
அணைபவர் … கலக்கத்தைத் தரும் கள்ளை உண்டு தம் வசம்
இழக்கும் விலைமாதர் அந்தக் கள் நாற்றத்துடனேயே நெருங்கி
அணைபவர்,
பெருமை உடையவர் உறவினை விட அருள் புரிவாயே …
அகந்தை உடைய இத்தகைய வேசியரது உறவு நீங்கும்படி அருள்
புரிவாயாக.
அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை
முலை அமுது உ(ண்)ண … குகையில் இருக்கும் புலி பெற்ற குட்டி
குடிப்பதற்கு பசுக் கூட்டங்களின் முலைப் பால் அமுதை உண்ணவும்,
நிரை மகள் வசவனொடு புலி முலை உ(ண்)ண மலையுடன்
உருகா … பசுவின் பெண் கன்று, ஆண் கன்றுடன் புலியின் முலைப்
பாலைக் குடிக்கவும், மலை அப்படியே உருகவும்,
நீள் அடவி தனில் உள உலவைகள் தளிர் விட … நீண்ட
காட்டில் உள்ள பட்ட மரங்கள் தளிர் விடவும்,
மருள மதமொடு களிறுகள் பிடியுடன் அகல வெளி உயர்
பறவைகள் நிலம் வர … மயல் கொண்ட மதத்துடன் ஆண் யானைகள்
பெண் யானைகளோடு ஒரு புறம் செல்லவும், ஆகாயத்தில் உயரத்தில்
உள்ள பறவைகள் நிலத்துக்கு வந்து சேரவும்,
விரல் சேர் ஏழ் தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய …
தன் விரல்களைச் சேர்த்து, ஏழு தொளைகள் விட்டுள்ள மூங்கில்
(புல்லாங்குழல்) மீது விரலை முறைப்படி தடவினதால் எழுகின்ற
இசைகள் பல பல தொனி தரு கரு முகில் சுருதி உடையவன்
நெடியவன் மனமகிழ் மருகோனே … இசைகளால் பற்பல
நாதங்களை எழுப்பும் கரிய மேகம் போன்ற கண்ணபிரான், வேதப்
பொருளோன், நெடிய திருமால் மனமகிழும் மருகனே,
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறு
முக குக … துணை நிற்பவனே, குணவானே, சரவணபவனே,
வணங்கத் தக்கவனே, முருகனே, குருபரனே, புகழ் வளரும்
ஆறு முகனே, குகனே,
துறையில் அலை எறி திருநகர் உறை தரு பெருமாளே. …
கரையில் அலைகளை வீசும் அழகிய திருச்செந்தூர் நகரில்
வீற்றிருக்கும் பெருமாளே.