ஆன்மிகம்

திருப்புகழ் 42 கருப்பம் தங்கு (திருச்செந்தூர்)

இந்த உலகயே காக்கும் கடவுளான அய்யன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது. இப்பாடலை படித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

பாடல் வரிகள்:

கருப்பந்தங் கிரத்தம்பொங்
     கரைப்புண்கொண் டுருக்கும்பெண்
          களைக்கண்டங் கவர்ப்பின்சென் …… றவரோடே

கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந்
     துவக்குண்டும் பிணக்குண்டுங்
          கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் …… தடுமாறிச்

செருத்தண்டந் தரித்தண்டம்
     புகத்தண்டந் தகற்கென்றுந்
          திகைத்தந்திண் செகத்தஞ்சுங் …… கொடுமாயும்

தியக்கங்கண் டுயக்கொண்டென்
     பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ்
          சிதைத்துன்றன் பதத்தின்பந் …… தருவாயே

அருக்கன்சஞ் சரிக்குந்தெண்
     டிரைக்கண்சென் றரக்கன்பண்
          பனைத்தும்பொன் றிடக்கன்றுங் …… கதிர்வேலா

அணிச்சங்கங் கொழிக்குந்தண்
     டலைப்பண்பெண் டிசைக்குங்கொந்
          தளிக்குஞ்செந் திலிற்றங்குங் …… குமரேசா

புரக்குஞ்சங் கரிக்குஞ்சங்
     கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்
          புதுக்குங்கங் கையட்குந்தஞ் …… சுதனானாய்

புனைக்குன்றந் திளைக்குஞ்செந்
     தினைப்பைம்பொன் குறக்கொம்பின்
          புறத்தண்கொங் கையிற்றுஞ்சும் …… பெருமாளே

சொல் விளக்கம்:

கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு அரைப்புண் கொண்டு
உருக்கும் பெண்களைக் கண்டு அங்கு அவர்ப் பின் சென்று
 …
கர்ப்பத்துக்கு இடமாய் ரத்தப் பெருக்குள்ள புண் போன்ற உறுப்பைக்
கொண்டு உருக்கும் பெண்களைப் பார்த்து, அப்போதே அவர்கள்
பின்னே போய்,

அவரோடே கலப்பு உண்டும் சிலுப்பு உண்டும் துவக்கு
உண்டும் பிணக்கு உண்டும் கலிப்பு உண்டும் சலிப்பு உண்டும்
தடுமாறி
 … அவர்களுடன் கூடி மகிழ்ந்தும், ஊடல் கொண்டும்,
ஒற்றுமை கொண்டும், மனம் பிணங்கியும், இன்பம் கொண்டும்,
துன்பப்பட்டும், நிலை தடுமாறியவனாய்,

செருத் தண்டம் தரித்து அண்டம் புகத் தண்டு அந்தகற்கு
என்றும் திகைத்து
 … போருக்கு ஏற்ற தண்டாயுதத்தைக் கையில்
ஏந்தி பூமியில் வந்து உயிர்களை வருத்தும் யமனுக்கு எப்போதும்
அச்சம் உற்று,

அம் திண் செகத்து அஞ்சும் கொடு மாயும் தியக்கம் கண்டு
உயக் கொண்டு
 … அழகிய திண்ணிய இப்பூமியில் ஐந்து
புலன்களுடன் அழிந்து போகும் என் சோர்வினைக் கண்டு, உய்யும்படி
என்னை ஆட்கொண்டு,

என் பிறப்(பு) பங்கம் சிறைப் பங்கம் சிதைத்து உன்றன்
பதத்து இன்பம் தருவாயே
 … எனது பிறப்பாகிய இடரையும்,
சிறையிட்டது போன்ற துன்பத்தையும் நீக்கி, உன்னுடைய
திருவடிகளின் இன்பத்தைத் தருவாயாக.

அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரைக் கண் சென்று
அரக்கன் பண்பு அனைத்தும் பொன்றிடக் கன்றும்
கதிர்வேலா
 … சூரியன் உலவுகின்ற அலைகள் வீசுகின்ற
கடலிடத்தே போய் சூரனது பெருமையெல்லாம் அழியும்படி
கோபித்த ஒளி வேலனே,

அணிச் சங்கம் கொழிக்கும் தண்டு அலைப் பண்பு எண்
திசைக்கும் கொந்தளிக்கும் செந்திலில் தங்கும் குமரேசா
 …
அழகிய சங்குகளை ஒதுக்கி எறிந்து, எழுந்து வீசும் அலைகடலின்
பெருமை எட்டுத் திசைகளிலும் மேம்பட்டு விளங்கும் திருச்செந்தூரில்
வீற்றிருக்கும் குமரேசனே,

புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம்
புதுக்கும் கங்கையட்கும் தம் சுதன் ஆனாய்
 … உலகங்களை
எல்லாம் காக்கும் உமா தேவிக்கும், சிவ பெருமானுக்கும், சிவனார்க்கு
இன்பம் புதுப்பிக்கும் கங்கா தேவிக்கும் செல்லப் பிள்ளையாக ஆனவனே,

புனக் குன்றம் திளைக்கும் செம் தினைப் பைம்பொன்
குறக் கொம்பின்
 … வயல்கள் விளங்கும் வள்ளி மலையில் மகிழ்ச்சி
அடைகின்ற, செந்தினையைக் காத்திருந்த பசும் பொன் போன்ற
குற மகளாகிய வள்ளியின்

புறத் தண் கொங்கையில் துஞ்சும் பெருமாளே. … குளிர்ந்த
மார்பகத்தின் மீது துயில் கொள்ளும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *