திருப்புகழ் 39 கண்டுமொழி (திருச்செந்தூர்)
அய்யன் முகம் காண கோடி கண்கள் வேண்டும்.அப்படிபட்ட முருகனின் பாடல் பாட கோடி புண்ணியம் அடைய வேண்டும்.
பாடல் வரிகள்:
கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு
கண்கள்குழல் கொண்டல் என்று …… பலகாலும்
கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பகல் என்று நின்று …… விதியாலே
பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்து …… புகழோதும்
பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து
பண்புபெற அஞ்ச லஞ்ச …… லெனவாராய்
வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
வம்பினைய டைந்து சந்தின் …… மிகமூழ்கி
வஞ்சியைமு னிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகு டன்க லந்த …… மணிமார்பா
திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
செஞ்சமர்பு னைந்து துங்க …… மயில்மீதே
சென்றசுரர் அஞ்ச வென்று குன்றிடைம ணம்பு ணர்ந்து
செந்தில்நகர் வந்த மர்ந்த …… பெருமாளே
சொல் விளக்கம்:
கண்டுமொழி கொம்பு கொங்கை … கற்கண்டுச் சொல், யானைத்
தந்தம் போன்ற மார்பு,
வஞ்சியிடை யம்பு நஞ்சு கண்கள் … வஞ்சிக் கொடி போன்ற இடை,
அம்பையும் நஞ்சையும் ஒத்த கண்கள்,
குழல் கொண்டல் என்று பலகாலும் கண்டு … கூந்தல் மேகம்
போன்றது என பலமுறையும் உவமை கண்டு,
உளம்வ ருந்தி நொந்து … உள்ளம் வருந்தி, நொந்து போய்,
மங்கையர்வசம்புரிந்து … மாதர்களின் வசப்பட்டு,
கங்குல்பகல் என்று நின்று … இரவும் பகலுமாக நின்று,
விதியாலே பண்டைவினை கொண்டு உழன்று … விதியின்
பயனாய் பழவினை தாக்க, அதனால் திரிந்து,
வெந்துவிழுகின்றல் கண்டு … என் மனம் வெந்து வீழ்வதைக் கண்டு,
பங்கயப தங்கள் தந்து … உன் தாமரைப் பதங்களைத் தந்தளித்து,
புகழோதும் பண்புடைய சிந்தை யன்பர் தங்களினுடன்
கலந்து … உன் புகழை ஓதும் பண்பு கொண்ட மனத்து அன்பர்களுடன்
கலந்து
பண்புபெற அஞ்சல் அஞ்சலெனவாராய் … நான் நற்குணம்
பெறுவதற்கு, நீ அஞ்சாதே அஞ்சாதே என்று கூறி வருவாயாக.
வண்டுபடுகின்ற தொங்கல் கொண்டு … வண்டுகள் மொய்க்கின்ற
மலர்மாலையைப் பூண்டு,
அறநெருங்கியிண்டு வம்பினைய டைந்து … மிக நெருக்கமாக
நெய்த அழுத்தமான ரவிக்கையை அணிந்து,
சந்தின் மிகமூழ்கி வஞ்சியை முனிந்த கொங்கை …
சந்தனக்குழம்பில் மிகவும் முழுகி, வஞ்சிக் கொடி போன்ற இடையை
வருத்துகின்ற மார்பினள்,
மென்குறம டந்தை செங்கை … மென்மையான குறப்பெண்
வள்ளியின் சிவந்த கைகளை
வந்தழகுடன்கலந்த மணிமார்பா … அவளது இடத்துக்கு
(வள்ளிமலைக்கு)ச் சென்று எழிலுடன் தொட்டுக் கலந்த திருமார்பனே.
திண்டிறல்புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு …
திண்ணிய வலிமை கொண்ட தேவர்கள் நின்னிடம் அபயம் அடைய
வேண்டுவதைக் கண்டு,
செஞ்சமர்புனைந்து துங்க மயில்மீதே சென்று … செவ்விய
போர்க்கோலம் பூண்டு, தூய மயில்மீது ஏறிச்சென்று,
அசுரர் அஞ்ச வென்று … போர்க்களத்தில் அசுரர்களை அஞ்சும்படி
வெற்றி கொண்டு,
குன்றிடை மணம்புணர்ந்து … (திருப்பரங்) குன்றத்தில்
தேவயானையை மணம்புரிந்து,
செந்தில்நகர் வந்தமர்ந்த பெருமாளே. … திருச்செந்தூர்ப்பதியில்
வந்து வீற்றிருக்கும் பெருமாளே.