ஆன்மிகம்

திருப்புகழ் 38 கட்டழகு விட்டு (திருச்செந்தூர்)

திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது. இப்பாடலை படித்தால் பண வரவு அதிகரிக்கும்.

பாடல் வரிகள்:

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
     இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள்
          கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் …… முறையோடே

வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
     மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
          விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற …… வுணர்வேனோ

பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
     முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
          பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் …… முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
     நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
          சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை …… பெருமாளே.

சொல் விளக்கம்:

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்து … இறுகிய கட்டுக்கோப்பாய்
இருந்த அழகிய உடல் தளர்ந்துபோய், அவ்வுடலில் இருந்துகொண்டு

முனம் இட்டபொறி தப்பி … முன்பு ஆட்டிவைத்த ஐந்து பொறிகளும்
கலங்கிச் சிதறிப்போய்,

பிணங்கொண்டதின் சிலர்கள் … பிணம் என்ற நிலையை உடல்
அடைந்ததும், சில பேர்கள்

கட்டணமெ டுத்துச் சுமந்தும் … பிணத்தைக் கூலிக்கு எடுத்துச்
சுமந்து போக,

பெரும்பறைகள் முறையோடே … பெரிய பறைகள் முறைப்படியாக

வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென … வெட்டவிட
வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சம் என்ற ஓசையில் முழங்க,

மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும் … மக்கள் ஒன்றுகூடிப்
பிணத்தைத் தொடர்ந்தும், சிலர் செல்லும் வழியிலே புரண்டும்

வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்து … சிலர் பிணம் செல்வதற்கு
வழி விடுகின்றதுமான இந்தப் பொய்யான வாழ்வை விட்டு,

உன் பதங்களுற வுணர்வேனோ … உன் திருவடிகளை அடையும்
வழியை நான் உணர மாட்டேனோ?

பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்து … பட்டு உருவிச்
செல்லும்படி ஆணவம் கொண்ட உயரமான கிரெளஞ்சமலையை
வேலாயுதம் பிளந்து எறிந்து,

கடல் முற்றும் அலை வற்றிக் குழம்புங் குழம்ப … கடல் முழுதும்
அலை வற்றிப்போய் குழம்பாகக் போகும்படி,

முனை பட்டஅயில் தொட்டு … கூர்மை கொண்ட வேலாயுதத்தைச்
செலுத்தி,

திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாய … வலிமையோடு
எதிர்த்த அசுரர்களின் முடி சாயும்படியாக,

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட …
அடியோடு அழியும்படி வெட்டி, தலையற்ற உடல்களும், பெரிய
கழுகுகளும் நடனமாடவும்,

ரத்தக் குளங்கண்டு உமிழ்ந்துமணி … ரத்தம் குளமாகப்
பெருகச்செய்தும், அசுரர் கிரீடங்களினின்று மணிகள் சிதறி விழ வைத்தும்,

சற்சமய வித்தைப் பலன்கண்டு … தேவர்களுக்கு நல்ல காலம்
வருவதற்கான விதையைப் பலன் கிடைக்குமாறு நீ நட்டுவைத்த

செந்திலுறை பெருமாளே. … திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும்
பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *