ஆன்மிகம்

திருப்புகழ் 32 இருகுழை யெறிந்த (திருச்செந்தூர்)

திருச்செந்தூரில் அருள் பாலித்து கொண்டிருக்கும் அய்யன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது. இப்பாடலை படித்தால் புகழ் சேரும்.

பாடல் வரிகள்:

இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட
     இணைசிலை நெரிந்தெ ழுந்திட …… அணைமீதே

இருளள கபந்தி வஞ்சியி லிருகலை யுடன்கு லைந்திட
     இதழமு தருந்த சிங்கியின் …… மனமாய

முருகொடு கலந்த சந்தனஅளருப டுகுங்கு மங்கமழ்
     முலைமுக டுகொண்டெ ழுந்தொறு …… முருகார

முழுமதி புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு
     முகடியு நலம்பி றந்திட …… அருள்வாயே

எரிவிட நிமிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு
     மிதழியொ டணிந்த சங்கரர் …… களிகூரும்

இமவரை தருங்க ருங்குயில் மரகத நிறந்த ருங்கிளி
     யெனதுயி ரெனுந்த்ரி யம்பகி …… பெருவாழ்வே

அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக
     ளணிமணி சதங்கை கொஞ்சிட …… மயில்மேலே

அகமகிழ் வுகொண்டு சந்ததம் வருகும ரமுன்றி லின்புறம்
     அலைபொரு தசெந்தில் தங்கிய …… பெருமாளே.

சொல் பொருள்

இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து
வந்திட
 … காதுகளில் விளங்கும் இரண்டு குண்டலங்களையும்
தாக்குகின்ற கெண்டை மீன் போன்ற கண்கள் ஒப்பற்ற குமிழம்
மலர் போன்ற நாசியை நெருங்கி வந்திடவும்,

இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே இருள்
அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட
 …
இரண்டு வில் போன்ற புருவங்களும் நெரிந்து மேல் எழுந்திடவும்,
படுக்கையின் மேல் இருண்ட கரிய கூந்தல் கற்றையும், கொடி
போன்ற இடையைச் சுற்றிய பெரிய ஆடையும் குலைந்திடவும்,

இதழ் அமுது அருந்து சிங்கியின் மன(ம்) மாய … இதழ்
அமுதத்தை உண்ணும் நஞ்சில் என் மனம் அழிந்து அழியவும்,

முருகொடு கலந்த சந்தன அளறு படு குங்குமம் கமழ்
முலை முகடு கொண்டு எழுந்தொறும் முருகு ஆர
 … நறு
மணத்துடன் கலந்த சந்தனச் சேற்றுடன் குங்குமம் மணக்கும்
மார்பின் உச்சி விம்மிப் பூரித்து எழுந்தோறும் அழகு நிரம்ப,

முழு மதி புரந்த சிந்துர அரிவையர் உடன் கலந்திடு
முகடியு(ம்) நலம் பிறந்திட அருள்வாயே
 … முழு நிலாப்
போன்ற திலகம் இட்டுக் கொண்டுள்ள விலைமாதர்களுடன்
கலந்திடும் கசடனாகிய எனக்கும் நன்மை பிறக்க அருள்வாயாக.

எரி விட(ம்) நிமிர்ந்த குஞ்சியி(ல்) நிலவொடும் எழுந்த
கங்கையும் இதழி ஒடு அணிந்த சங்கரர் களி கூரும்
 …
நெருப்பைப் போல் ஒளி விட்டு நிமிர்ந்த சடையில் சந்திரனுடன்
எழுந்த கங்கை நதியும், கொன்றையுடன் தரித்த சிவபெருமான்
மகிழ்ச்சி மிகக் கொள்ளும்

இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி
எனது உயிர் எனும் த்ரி அம்பகி பெரு வாழ்வே
 … இமய
மலையரசன் பெற்ற கரிய குயில், பச்சை நிறம் கொண்ட கிளி,
எனது உயிர் என்று நான் போற்றும் மூன்று கண்களை உடையவள்
ஆகிய பார்வதி பெற்ற செல்வமே,

அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுர(ம்) நெருங்கு
தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட
 … அரையில்
கட்டிய பொன்வடம், ஒலிக்கின்ற கிண்கிணி, சிலம்பு, நெருங்கியுள்ள
தண்டைகள், அழகிய மணியாலாகிய சதங்கை இவை எல்லாம்
கொஞ்ச,

மயில் மேலே அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர …
மயிலின் மேல் உள்ளம் பூரித்து எப்போதும் வருகின்ற குமரனே,

முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய
பெருமாளே.
 … முற்புறத்தில் அலைகள் வந்து மோதுகின்ற
கரையுடைய திருச்செந்தூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும்
பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *