திருப்புகழ் 31 இயலிசையில் உசித (திருச்செந்தூர்)
இப்பாடலில் அப்பன் முருகன் பற்றி பாடும் நூல் ஆகும். இப்பாடலை படித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும்.
பாடல் வரிகள்:
இயலிசையி லுசித வஞ்சிக் …… கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் …… துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் …… கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் …… தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத் …… தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் …… தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் …… பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் …… பெருமாளே.
சொல் விளக்கம்:
இயலிசையில் உசித … இலக்கியத் தமிழிலும், இசையிலும் சிறப்பான
வஞ்சிக்கு அயர்வாகி … பெண்களிடம் ஈடுபட்டு, அதனால் தளர்வு
அடைந்து,
இரவுபகல் மனது சிந்தித்து … இரவும் பகலும் மனது அவர்களையே
நினைத்து
உழலாதே … நான் அலையாமல் இருந்து,
உயர்கருணை புரியும் … உனது உயர்ந்த கருணையால் வரும்
இன்பக்கடல்மூழ்கி … பேரின்பக் கடலில் மூழ்கி
உனையெனதுள் அறியும் … உன்னை நான் எனது உள்ளத்திலே
அறியக்கூடிய
அன்பைத் தருவாயே … அன்பினைத் தந்தருள்வாயாக.
மயில் தகர்கல் இடையர் … மயிலும் ஆடுகளும் உள்ள மலையிடை
வாழும் வேடர்களின்
அந்தத் தினைகாவல் … அழகிய தினைப்புனத்தைக் காவல் செய்த
வனசகுற மகளை … லக்ஷ்மி போன்று அழகிய குறத்தியாம் வள்ளியை
வந்தித்து அணைவோனே … வணங்கிப் பின் அணைந்து
கொண்டவனே,
கயிலைமலை யனைய செந்தில் … திருக்கயிலை போன்ற புனிதமான
செந்தில்
பதிவாழ்வே … திருத்தலத்தில் வாழ்பவனே,
கரிமுகவ னிளைய … யானைமுகனாம் வினாயகனுக்கு தம்பியான
கந்தப் பெருமாளே. … கந்தப் பெருமாளே.