ஆன்மிகம்

திருப்புகழ் 30 அனைவரும் மருண்டு (திருச்செந்தூர்)

முருகப் பெருமானை போற்றி பாடப்பட்ட நூல் இது ஆகும். திரு அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ் ஆகும் இப்பாடலை படித்தால் செல்வம் சேரும்.

பாடல் வரிகள்:

அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
     அமரஅ டிபின்தொ டர்ந்து …… பிணநாறும்

அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு
     மவலவுட லஞ்சு மந்து …… தடுமாறி

மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி
     மனவழி திரிந்து மங்கும் …… வசைதீர

மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு
     மலரடி வணங்க என்று …… பெறுவேனோ

தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை
     திகழிரு தனம்பு ணர்ந்த …… திருமார்பா

ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு
     திகிரிவ லம்வந்த செம்பொன் …… மயில்வீரா

இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த
     இறைவகு ககந்த என்று …… மிளையோனே

எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு
     மிமையவ ரையஞ்ச லென்ற …… பெருமாளே.

சொல் விளக்கம்:

அனைவரு மருண்டு அருண்டு … (எனக்குவந்த நோயைக் கண்டு)
யாவரும் பயந்து மனம் குழம்பி,

கடிதென வெகுண்டி யம்ப … விரைவில் அகலுக என்று என்னை
அருவருப்புடன் கோபித்துக் கூறி விரட்டியும்,

அமரஅடி பின்தொடர்ந்து … விடாது நெருங்கி அவர்களின் அடியின்
பின்னே தொடர்ந்து,

பிணநாறும் அழுகுபிணி கொண்டு … பிணம்போல் நாறும், அழுகிப்
போன நிலையில் நோய் முற்றி,

விண்டு புழுவுடன் எலும்பு அலம்பும் … வெளிவரும் புழுக்களுடன்
எலும்புகள் நிலைகுலையும்

அவல உட லஞ்சுமந்து தடுமாறி … துன்பமிகு உடலைச் சுமந்து
தடுமாற்றத்தை அடைந்தும்,

மனைதொறும் இதம்பகர்ந்து … வீடுகள் தோறும் போய் இதமான
மொழிகளைக் கூறி,

வரவர விருந்தருந்தி … நாட்கள் செல்லச் செல்ல, புதுப்புது
இடங்களுக்குச் சென்று விருந்து உண்டு,

மனவழி திரிந்து மங்கும் வசைதீர … மனம் போன போக்கில் திரிந்து
அழிகின்ற பழிப்பு தீர்வதற்கு,

மறைசதுர் விதந்தெரிந்து வகை … நான்கு வேதங்களின் வகைகளை
அறிந்து முறைப்படி,

சிறு சதங்கை கொஞ்சு மலரடி வணங்க என்று பெறுவேனோ …
சிறிய சதங்கைகள் கொஞ்சும் மலர் போன்ற உன் பாதங்களை
வணங்கும் பாக்கியத்தை நான் என்று பெறுவேனோ?

தினைமிசை சுகங் கடிந்த புனமயில் … தினை மீதிருந்த கிளிகளை
ஓட்டிய மயில் போன்ற வள்ளியின்

இளங்குரும்பை திகழிரு தனம்புணர்ந்த திருமார்பா … இளம்
தென்னம் பிஞ்சுகள் போன்ற இரு மார்பையும் தழுவும் அழகிய மார்பனே,

ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு … உலகம்
முழுவதையும், முன்பு யானைமுகன் கணபதியோடு போட்டியிட்டு
தந்தை சிவனாரின் முன்னிலையில்,

திகிரிவலம் வந்த செம்பொன் மயில்வீரா … வட்டமாக வலம் வந்த
செம்பொன் மயில் வீரனே,

இனியகனி மந்தி சிந்து மலைகிழவ … இனிய பழங்களைக்
குரங்குகள் சிந்துகின்ற மலைகளுக்கு உரியவனே,

செந்தில் வந்த இறைவகுக கந்த என்றும் இளையோனே …
திருச்செந்தூரில் அமர்ந்த இறைவனே, குகனே, கந்தனே, என்றும்
இளமையோடு இருப்பவனே,

எழுகடலும் எண்சிலம்பும் நிசிசரருமஞ்ச … ஏழு கடல்களும்,
அஷ்டகிரிகளும், அசுரர்களும் அஞ்சும்படி,

அஞ்சும் இமையவரை யஞ்ச லென்ற பெருமாளே. … பயம்
கொண்டிருந்த தேவர்களை அஞ்சேல் என்று அருளிய பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *