Jallikattu bulls

திருப்புகழ் 28 அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்)

முருகப் பெருமானை போற்றி பாடப்பட்ட நூல் இது ஆகும். திரு அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ் ஆகும் இப்பாடலை படித்தால் செல்வம் சேரும்.

பாடல் வரிகள்:

அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
     அனலவிய மலமொழுக …… அகலாதே

அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
     அழலினிகர் மறலியெனை …… யழையாதே

செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
     திருவடியி லணுகவர …… மருள்வாயே

சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
     செவிகுளிர இனியதமிழ் …… பகர்வோனே

நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
     நிருதிநிதி பதிகரிய …… வனமாலி

நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
     நிருதனுர மறஅயிலை …… விடுவோனே

மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
     மகிழமடி மிசைவளரு …… மிளையோனே

மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
     மறையவுயர் கரையிலுறை …… பெருமாளே.

சொல் விளக்கம்:

அறிவழிய … அறிவு மங்கிப் போகவும்,

மயல் பெருக … மயக்கம் பெருகவும்,

உரையுமற … பேச்சும் அடங்கிப் போகவும்,

விழிசுழல … கண்கள் சுழலவும்,

அனலவிய … உடம்பின் சூடு தணியவும்,

மலமொழுக … மலம் (தன்னிச்சையின்றி) ஒழுகவும்,

அகலாதே அனையுமனை அருகிலுற … நீங்காமலே என்
அன்னையும் மனைவியும் பக்கத்திலிருந்து

வெருவியழ … பயந்து அழ,

உறவுமழ … உறவினரும் அழ,

அழலினிகர் மறலி … நெருப்பை நிகர்த்த கொடிய யமன்

யெனை அழையாதே … என்னை அழைத்துச் செல்லாத படிக்கு,

செறியுமிரு வினை … என்னை நெருங்கியுள்ள இருவினைகளும்
(நல்வினை, தீவினை),

கரண மருவுபுலன் … என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும்

ஒழிய … ஒழிந்து நீங்கும்படியாக,

உயர் திருவடியில் அணுக … உன் உயர்ந்த திருவடிகளை அணுக

வரம் அருள்வாயே … எனக்கு வரம் தந்தருள்வாயாக

சிவனைநிகர் … சிவனுக்கு ஒப்பான

பொதியவரை முனிவன் … பொதியமலையைச் சார்ந்த முனிவன்
(அகத்தியன்)

அகமகிழ … உள்ளம் மகிழ

இரு செவிகுளிர … அவனது இரண்டு செவிகளும் குளிர,

இனியதமிழ் பகர்வோனே … இனிய தமிழை ஓதியவனே

நெறிதவறி … தத்தமக்கு உண்டான வழி தவறி

அலரிமதி நடுவன் … சூரியன், சந்திரன், யமன்,

மகபதி முளரி … இந்திரன், அக்கினி,

நிருதி நிதிபதி … நிருதி, குபேரன்,

கரிய வனமாலி … கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும்,

நிலவுமறை … நிலைத்த பிரமன்,

அவனிவர்கள் அலைய … ஆகியவர்கள் அலையும்படி

அரசுரிமை புரி … (கொடிய) ஆட்சி புரிந்த

நிருதனுரம் அற … அசுரனாம் சூரனின் மார்பு பிளவுபடும்படி

அயிலை விடுவோனே … வேலைச் செலுத்தியவனே

மறிபரசு கரமிலகு … மானும், மழுவும் கரங்களில் விளங்கும்

பரமனுமை இருவிழியு … பரமசிவனும், உமையும் தங்கள்
இருவிழிகளும்

மகிழமடி மிசை … உவகைகொள்ளும்படி அவர்தம் மடியின் மேல்

வளரும் இளையோனே … வளரும் இளைய குமாரனே

மதலைதவழ் உததியிடை … கப்பல்கள் தவழும் கடலிடையே

வருதரள மணி … வருகின்ற முத்து மணிகள்

புளின மறையவுயர் … மணல்மேட்டில் மறையும்படி உயர்ந்த

கரையிலுறை பெருமாளே. … (திருச்செந்தூர்க்) கரையில்
அமர்ந்த பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *