ஆன்மிகம்

திருப்புகழ் 27 அளக பாரமலைந்து (திருச்செந்தூர்)

திருச்செந்தூரில் வீற்றிருக்கும் அப்பன் முருகப் பெருமான் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை படித்தால் திருமண தடை நீங்கும்.

அளக பாரம லைந்துகு லைந்திட
     வதனம் வேர்வுது லங்கிந லங்கிட
          அவச மோகம்வி ளைந்துத ளைந்திட …… அணைமீதே

அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம
     அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து
          அதர பானம ருந்திம ருங்கிற …… முலைமேல்வீழ்ந்

துளமும் வேறுப டும்படி ஒன்றிடு
     மகளிர் தோதக இன்பின்மு யங்குதல்
          ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு …… சிவயோகத்

துருகு ஞானப ரம்பர தந்திர
     அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி
          உபய சீதள பங்கய மென்கழல் …… தருவாயே

இளகி டாவளர் சந்தன குங்கும
     களப பூரண கொங்கைந லம்புனை
          இரதி வேள்பணி தந்தையும் அந்தண …… மறையோனும்

இனது றாதெதிர் இந்திரன் அண்டரும்
     ஹரஹ ராசிவ சங்கர சங்கர
          எனமி காவரு நஞ்சினை யுண்டவர் …… அருள்பாலா

வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி
     படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன்
          மகர வாரிக டைந்தநெ டும்புயல் …… மருகோனே

வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
     இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
          மகிமை மாநகர் செந்திலில் வந்துறை …… பெருமாளே.

அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி
நலங்கிட அவச மோகம் விளைந்து தளைந்திட
 … கூந்தல் பாரம்
அலைந்து குலைய, முகம் வியர்வை தோன்றி மாசு பெற, தன்
வசமழியும்படி மோகம் உண்டாகிப் பிணிக்க,

அணைமீதே அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா
நுதி பங்க விதம் செய்து
 … படுக்கையில், சிவந்த வாயினின்றும்
சிரிப்பை வெளிப்படுத்தின களிப்புடன், நெருங்கிய நகங்களின் நுனி
கொண்டு நகக் குறி பதியுமாறு செய்து,

அதர பானம் அருந்தி மருங்கு இற முலைமேல் வீழ்ந்து …
இதழ்களினின்றும் வரும் ஊறலை உண்டு, இடை அற்றுப் போகுமாறு
மார்பின் மேல் வீழ்ந்து,

உளமும் வேறுபடும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின்
முயங்குதல் ஒழியுமாறு
 … உள்ளமும் மாறும்படி சேர்கின்ற
விலைமாதர்களின் வஞ்சகம் நிறைந்த இன்பத்தில் முழுகுதல் ஒழியும்
வண்ணம்

தெளிந்து உளம் அன்பொடு சிவயோகத்து உருகு ஞான
பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பணி
உபய சீதள பங்கய மென் கழல் தருவாயே
 … மனம் தெளிந்து,
உள்ளம் அன்புடன் சிவயோக நிலையில் உருகுகின்ற ஞானமும்,
மேலான ஆகம அறிவும் படைத்த ஞானிகள் தியானிக்கின்ற,
அழகிய சிலம்பை அணிந்த, இரு குளிர்ந்த தாமரை போன்ற
மென்மையான திருவடியைத் தந்து அருளுக.

இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம்
புனை இரதி வேள் பணி தந்தையும் அந்தண மறையோனும்
இனிது உறாது
 … தளராது வளரும், சந்தனமும் குங்குமப் பூவின்
கலவையும் நிறைந்த, மார்பின் அழகைக் கொண்ட ரதியின் கணவனான
மன்மதன் தொழுகின்ற தந்தையாகிய திருமாலும், அந்தண பிரமனும்
துன்புற,

எதிர் இந்திரன் அண்டரும் ஹரஹரா சிவ சங்கர சங்கர என …
அங்கு இருந்த இந்திரனும் தேவர்களும் ஹர ஹரா சிவ சங்கரா சங்கரா
என்று முறையிட,

மிகா வரு நஞ்சினை உண்டவர் அருள்பாலா … (பாற்கடலில்)
பொங்கி எழுந்த (ஆலகால) விஷத்தை உண்டவராகிய சிவபெருமான்
அருளிய குழந்தையே,

வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடி பட விரோதம் இடும் குல
சம்ப்ரமன் மகர வாரி கடைந்த நெடும் புயல் மருகோனே
 …
வளர்ச்சியுற்ற அசுரர்களுடைய (கர்வம் கொண்ட) தலைகள் பொடிபடுமாறு
பகைமை காட்டிய நற்சிறப்பு பெற்றவனும், சுறா மீன்கள் நிறைந்த கடலை
(தான் ஒருவனாகக்) கடைந்தவனும், நெடிய மேகத்தின் நிறத்தைக்
கொண்டவனுமான திருமாலின் மருமகனே,

வளரும் வாழையு(ம்) மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது
நெருங்கிய மங்கல மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை
பெருமாளே.
 … வளர்கின்ற வாழையும், மஞ்சளும் இஞ்சியும் எப்போதும்
நெருங்கி விளங்குகின்ற மங்கலமும் மகிமையும் உள்ள சிறந்த நகரமாகிய
திருச்செந்தூரில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *