திருப்புகழ் பாடல் 261 விளக்கம் – கிறி மொழி (திருத்தணிகை)
நமது அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி புகழ்ந்து பாடிய பாடல்கள் ஏராளம்.அதிலும் மிக சிறப்பு வாய்ந்தது திருப்புகழ். என்னுள் வெறும் படிப்பதற்கு மட்டுமல்லாமல் முருகப்பெருமானின் அருமைகளையும் அவரது அருளையும் நாம் படிக்கும் போதே பெரும் அளவிற்கு அருணகிரிநாதர் வர்ணித்து எழுதியுள்ளார் . எந்த ஒரு கெட்டவனும் முருகப்பெருமானே சரணடைந்தால் அவன் தான் செய்த தவறுகளை திருத்தி முருகனின் திருவடிகளை போற்றி வணங்கி நல்ல மனிதனாக தனது வாழ்க்கையில் மாறுவான் என்பதைப் பற்றி அருணகிரிநாதர் இப்பாடலில் கூறியுள்ளார்.

கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
கெடுபிறப் பறவிழிக் …… கிறபார்வைக்
கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
கிகள்தமைச் செறிதலுற் …… றறிவேதும்
அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
றறவுநெக் கழிகருக் …… கடலூடே
அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
றடியிணைக் கணுகிடப் …… பெறுவேனோ
பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
பொறியிலச் சமணரத் …… தனைபேரும்
பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
புகலியிற் கவுணியப் …… புலவோனே
தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
தவர்திருப் புதல்வநற் …… சுனைமேவுந்
தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
தணியினிற் சரவணப் …… பெருமாளே.

பாடல் விளக்கம்
கிறி மொழிக் கிருதரைப் பொறி வழிச் செறிஞரை …
பொய்ம்மொழி பேசும் செருக்கு உள்ளவர்களை, ஐம்புலன்களின்
வழியே செல்லுபவர்களை,
கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வைக் கெடு மடக் குருடரைத்
திருடரை … கெட்ட இப்பிறப்பு (நற் பிறப்பு) ஆகாமல் அழியும்படி
விழிக்கின்ற விழியை உடைய கெட்டவர்களை, அறிவில்லாத
குருடர்களை, திருடர்களை,
சமய தர்க்கிகள் தமைச் செறிதல் உற்று அறிவு ஏதும் அறிதல்
அற்று அயர்தல் உற்று அவிழ்தல் அற்று … சமயவாதிகளை (நான்)
நெருங்குதலுற்று, அறிவு சற்றும் அறிதல் இல்லாமல், தளர்ச்சி
உற்று, (மனம் பக்தியால்) நெகிழ்தல் இல்லாமல்,
அருகல் உற்று அறவு(ம்) நெக்கு அழி கருக் கடல் ஊடே
அமிழ்தல் அற்று … குறைபாடு அடைந்து மிகவும் கெட்டு அழிவு தரும்
பிறவிக் கடலுள்ளே அமிழ்ந்து போதல் நீங்கி,
எழுதல் உற்று உணர் நலத்து உயர்தல் உற்று அடியிணைக்கு
அணுகிடப் பெறுவேனோ … முன்னுக்கு வந்து, நல்லுணர்வு பெறும்
நலமான வழியில் மேம்பாடு அடைந்து, உன் திருவடியிணையை
அணுகப் பெறுவேனோ?
பொறி உடைச் செழியன் வெப்பு ஒழிதரப் பறி தலைப் பொறி
இலச் சமணர் அத்தனை பேரும் பொடி பட … அறிவுள்ள (கூன்)
பாண்டியனுடைய வெப்ப நோய் நீங்கவும், மயிர் பறிபடும் தலையராகிய
அறிவிலிகளாகிய சமணர்கள் அத்தனை பேரும் அழியவும்,

சிவ மணப் பொடி பரப்பிய திருப் புகலியில் கவுணியப்
புலவோனே … சிவ மணத் திருநீற்றை (மதுரையில்) பரப்பினவரும்,
புகலியில் (சீகாழியில்*) உதித்த கவுணியர் குலப் புலவருமாகிய
திருஞான சம்பந்தரே,
தறி வளைத்து உற நகைப் பொறி எழப் புரம் எரித்தவர் திருப்
புதல்வ … அழிவு உண்டாகும்படி புன்சிரிப்புப் பொறியை எழுப்பி,
திரி புரங்களை எரித்த சிவபெருமானுடைய நல்ல மகனே,
மேலும் படிக்க : திருப்புகழ் 170 நாத விந்து (பழநி)
நல் சுனை மேவும் தனி மணக் குவளை நித்தமும் மலர் தரு …
சிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறு மணம் வீசும் குவளை நாள்தோறும்
பூவைத் தருகின்ற
செருத்தணியினில்** சரவணப் பெருமாளே. … திருத்தணிகையில்
(வீற்றிருக்கும்) சரவணப் பெருமாளே.