ஆலோசனை

திருப்புகழ் 25 அருணமணி மேவு (திருச்செந்தூர்)

இப்பாடலில் அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது. மனமுருகி இப்பாடலை படித்து கேட்கும் வரங்களை முருகப்பெருமான் வழங்குவார்.

பாடல் வரிகள்:

அருணமணி மேவு பூஷித ம்ருகமதப டீர லேபன
     அபிநவவி சால பூரண
          அம்பொற் கும்பத் …… தனமோதி

அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
     அறவுமுற வாடி நீடிய
          அங்கைக் கொங்கைக் …… கிதமாகி

இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
     லிழைகலைய மாத ரார்வழி
          யின்புற் றன்புற் …… றழியாநீள்

இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
     இணையடிகள் பாடி வாழஎ
          னெஞ்சிற் செஞ்சொற் …… றருவாயே

தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
     சதுர்மறையி னாதி யாகிய
          சங்கத் துங்கக் …… குழையாளர்

தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
     தனைமுழுதும் வாரி யேயமு
          துண்டிட் டண்டர்க் …… கருள்கூரும்

செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
     தெளிவினுடன் மூல மேயென
          முந்தச் சிந்தித் …… தருள்மாயன்

திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
     ஜெயசரவ ணாம னோகர
          செந்திற் கந்தப் …… பெருமாளே.

சொல் விளக்கம்:

அருணமணி மேவு பூஷித … சிவந்த மணிகளால்
அலங்கரிக்கப்பட்டதாய்,

ம்ருகமத படீர லேபன … கஸ்தூரி, சந்தனம் இவற்றின் கலவையைப்
பூசியதாய்,

அபிநவ விசால பூரண … புதுமை வாய்ந்ததும், அகன்றதும்,
நிறைந்ததுமான

அம்பொற் கும்பத் தனமோதி … அழகிய பொற்குடம் போன்ற
மார்பில் பட்டு,

அளிகுலவு மாதர் லீலையின் முழுகி … ஆசை மொழி பேசிக்
கொஞ்சும் மாதர்களின் சரசலீலைகளில் மூழ்கி,

அபி ஷேக மீதென அறவுமுறவாடி நீடிய … திருமஞ்சனம்
இதுதான் என்று அவர்களோடு மிகவும் கலந்து பொழுதைக் கடத்தி,

அங்கைக் கொங்கைக்கு இதமாகி … அவர்களின் கைகளிலும்
மார்பிலும் இன்பம் பெறுபவனாய்,

இருள் நிறை அம் ஓதி மாலிகை … கருமை நிறைந்த அழகிய
கூந்தலில் உள்ள மாலையானது,

சருவி யுறவான வேளையில் … தழுவி உறவு கொள்ளும் வேளையில்,

இழைகலைய மாத ரார்வழி … நகைகளோடு சேர்ந்து கலைய, அம்
மாதர்களின் வசத்தே

யின்புற் றன்புற்றழியா … இன்பம் கொண்டும், அன்பு கொண்டும்
அழிந்து,

நீள் இரவுபகல் மோக னாகியெ … நெடும் போது இரவும் பகலும்
மோகம் கொண்டவனாய்,

படியில்மடி யாமல் யானுமுன் இணையடிகள் பாடி வாழ … இப்
பூமியில் இறவாமல், நானும் உன் இணையடிகளைப் பாடி வாழ்வுற,

எனெஞ்சிற் செஞ்சொற் றருவாயே … என் நெஞ்சிலே சிறந்த
உபதேசச் சொற்களைப் பதித்து அருள்வாயாக.

தருணமணி ஆடு அராவணி … இளமையும், அழகும், ஆடலும்
உடைய பாம்புகளை அணிந்த

குடிலசடில ஆதி … வளைந்த ஜடாமுடியை உடைய ஆதிப் பரம்
பொருள் ஆனவரும்,

ஓதிய சதுர்மறையி னாதி ஆகிய … ஓதப்படும் வேதங்களின்
ஆதிப்பொருளானவரும் ஆகிய,

சங்கத் துங்கக் குழையாளர் தருமுருக … வெண்சங்கைக்
குண்டலமாகத் தரித்த சிவனார் தந்தருளிய முருகனே,

மேக சாயலர் … கார்மேக வண்ணத்தாரும்,

தமர மகர ஆழி சூழ்புவிதனை … ஒலிக்கின்றதும் மகர மீன்கள்
நிறைந்ததுமான சமுத்திரம் சூழ்ந்த இந்த உலகம்

முழுதும் வாரி யேயமுதுண்டிட்டு அண்டர்க்கு அருள்கூரும் …
முழுமையும் வாரி அமுதென ஒரே வாயில் உண்டு தேவர்களுக்கு
அருள் செய்தவரும்,

செருமுதலி மேவு … போர்க்களத்தில் முதன்மையாளராக இருப்பவரும்,

மாவலி யதிமத கபோல மாமலை … மிக்க வலிமையும், அதிக மதம்
பெருகும் கன்னங்களும், கொண்ட பெரிய மலை போன்ற கஜேந்திரன்
என்ற யானை

தெளிவினுடன் மூல மேயென … தெளிந்த சிந்தையோடு ஆதிமூலமே
என்று அழைத்துச் சரணடைய,

முந்தச் சிந்தித் தருள்மாயன் திருமருக … முன்னதாக உதவும்
சிந்தையோடு ஓடிவந்து அருளிய மாயனாம் திருமாலின் அழகிய மருகனே,

சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய … சூரனது
மார்புடன், கிரெளஞ்ச மலையையும் உருவிச் செல்லும்படி வேலாயுதத்தைச்
செலுத்திய

ஜெயசரவ ணாம னோகர … ஜெய சரவணனே, மனத்துக்கு
இனியவனே,

செந்திற் கந்தப் பெருமாளே. … திருச்செந்தூரில் வீற்றிருக்கும்
கந்தப்பெருமாளே.

மேலும் படிக்க : சரஸ்வதி தாயாரின் அருளை பெற்று தரும்.. போற்றி மலர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *