திருப்புகழ் சுவாமிமலை பாடலில் 216 சரண கமலாலயத்தை
திருப்புகழ் பாடல் சுவாமிமலை பாடல் 216 இல் முருகரிடம் சரண் அடைவதை தெரிவிக்கின்றது. தாமரைப் பாதமுடையவரே உமது பாதத்தை சரண்புக வாழ்வ்வை தியானத்தில் கழிக்க வேண்டும்.
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க …… அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க …… முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற …… குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை கமழுமண மார்க டப்ப …… மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க …… பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த …… வடிவேலா அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த …… மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் …… முருகோனே. விளக்கம் சரண கமலாலயத்தை … உனது தாமரை போன்ற திருவடிகளை அரை நிமிஷ நேர மட்டில் … அரை நிமிஷ நேர அளவுக்காவது தவமுறை தியானம் வைக்க அறியாத … தவ நிலையில் தியானத்தில் வைத்திட அறியாத ஜட கசட மூட மட்டி … பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான மட்டி யான் பவ வினையிலே சனித்த … பிறப்பதே தொழிலாகக் கொண்டு பிறந்துள்ள தமியன் … தன்னம் தனியனான யான் மிடியால் மயக்கம் உறுவேனோ? … வறுமையால் மயக்கத்தை அடையலாமோ? கருணை புரியாதிருப்ப தென குறை … கருணை காட்டாமல் இருப்பது என்ன குறையைக் கண்டு? இவேளை செப்பு … இப்பொழுதே சொல்லி அருளவேண்டும் கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே … கயிலாயமலை நாதராம் சிவன் பெற்ற குமரனே கடக புயமீதி … வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது ரத்ன மணியணி பொன்மாலை செச்சை … ரத்னாபரணம், தங்கமாலை, வெட்சிப் பூமாலை கமழு மணமார் கடப்பம் அணிவோனே … வாசனை நிறைந்த கடம்பமாலை இவைகளை அணிந்தவனே தருணம் இதையா … தக்க சமயம் இதுதான் ஐயா மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய … மிக்க பெருமையைத் தரும் நீடித்த சுகம் சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு … எல்லாவித செல்வம், அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து) … நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ கொடுத்(து) (உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா … உதவி புரிய வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க … சிவந்த தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு அரிய தமிழ் தானளித்த மயில்வீரா … அருமையான் தமிழ் ஞானத்தை தந்த மயில்வீரனே அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த … அதிசயக் கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும் அழக, திருவேரகத்தின் முருகோனே. … அழகனே திருவேரகத்து (சுவாமி மலையின்) முருகப்பெருமானே. மேலும் படிக்க : திருப்புகழ் சுவாமிமலை பாடலில் 215 கோமள வெற்பினை |