திருப்புகழ் 185 முகை முளரி (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள்.
முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு
முதிர்விலிள தனபார …… மடவார்தோள்
முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்
மொழியுமது மதியாமல் …… தலைகீழ்வீழ்ந்
தகமகிழ விதமான நகையமுத மெனவூற
லசடரக மெழவாகி …… மிகவேயுண்
டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி
னமுதுபரு கிடஞான …… மருளாயோ
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி
மறுகுபுனல் கெடவேலை …… விடுவோனே
வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி
வருபனிரு கரதீர …… முருகோனே
பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு
பரமகுரு வெனநாடு …… மிளையோனே
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு
பழநிமலை தனில்மேவு …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் …
மொட்டு நிலையில் உள்ள தாமரை மலர் போலவும், ஒளி வீசுகின்ற
அழகிய பொன் மலை போலவும்,
முதிர்வு இல் இள தன பார மடவார் தோள்முழுகி அமிழ்
அநுபோக விழலன் என … முதிர்ச்சி அடையாத இளமையான
மார்பகங்களை உடைய விலைமகளிரின் தோள்களில் முழுகி அமிழ்கின்ற
சிற்றின்பம் அநுபவிக்கும் வீணன் என்று
உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலை கீழ் வீழ்ந்து …
உலகில் உள்ளவர்கள் சொல்லுகின்ற பழிச்சொற்களை சிறிதும்
பொருட்படுத்தாமல் தலை கீழாகச் சறுக்கி விழுந்து,
அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர்
அகம் எழ ஆகி மிகவே உண்டு அழியும் ஒரு தமியேனும் …
உள்ளம் களிப்புற பலவகையான இன்பத்தைத் தரும் அமுதமே
என்னும்படி இதழ் ஊறலைத் தரும் மூடர்களாகிய விலைமாதர்களின்
வீடுகளுக்குப் போய் மிகவே உண்டு அழிகின்ற ஒரு தனியனாகிய
நானும்,
மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம்
அருளாயோ … யாவராலும் போற்றப்படும் உன்னுடைய இரண்டு
திருவடிகளின் அமுதையும் உண்ணும்படியான ஞானத்தை எனக்கு
அருள் புரிய மாட்டாயோ?
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல்
கெட வேலை விடுவோனே … மகர மீன்களை எறிகின்ற அலைகள்
மோதுகின்ற ஒளி பொருந்திய கடலில் உள்ள விசாலமான நீர் கலங்கும்
நீராகிக் கெட்டுப் போகும்படியாக வேலாயுதத்தைச் செலுத்தியவனே,
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு
ப(ன்)னிரு கர தீர முருகோனே … சாரிசாரியாக வந்த அசுரர்களின்
பெரிய சேனைகளின் கால அளவு முடியும்படி மயில் மேல் ஏறி வந்த
பன்னிரண்டு கரங்களை உடைய தீரனே, முருகனே,
பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம
குரு என நாடும் இளையோனே … விவரிப்பதற்கு முடியாதவர் எனச்
சொல்லத்தக்க உமா தேவியின் கணவராகிய சிவபெருமான், என்
உள்ளத்தில் வீற்றிருக்கும் மேலான குருவே என்று கூறி உன்னை
விரும்பும் இளையவனே,
பணில(ம்) மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி
மலை தனில் மேவு(ம்) பெருமாளே. … சங்கு மணிகள் ஒளி வீசும்
அழகிய மலையின் உச்சி சந்திரனைத் தீண்டும் உயரமான பழனி
மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.