ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 184 முகிலளகத்தில் (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

முகிலள கத்திற் கமழ்ந்த வண்பரி
     மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு
          முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய …… ரங்கமீதே

முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல்
     விழியிணை செக்கச் சிவந்து குங்கும
          ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை …… யெங்குமேவி

உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற
     வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள
          வுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி …… லொன்றிமேவி

ஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புற
     முறுவளை யொக்கக் கலின்க லென்கவு
          முயர்மய லுற்றுற் றிரங்கு மன்பதொ …… ழிந்திடாதோ

செகமுழு தொக்கப் பயந்த சங்கரி
     அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம
          சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு …… மங்கைநீடு

திகழ்வன பச்சைப் பசங்கி யம்பண
     கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள்
          திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை …… யண்டமீதே

பகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகை
     திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர்
          பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி …… யன்புகூரும்

பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள்
     பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு
          பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் …… தம்பிரானே.

……… சொல் விளக்கம் ………

முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்றக்
கலந்து இடம் தரு முகிழ் நுதி தைத்துத் துயர்ந்த
மங்கையர் அங்கம் மீதே
 … மேகம் போல் கரிய கூந்தலில்
வாசனை உள்ள நறு மணம் கொண்ட மலர்கள் நெருங்கும்படிச்
சேர்ந்து இடம்பெறும்படி, தான் தொடர்ந்த மாதர்களின் உடலின்
மேல் நக நுனியால் குறிகளை அழுந்தப் பதித்து,

முகம் வியர்வு உற்றுப் பரந்து செம் கயல் விழி இணை
செக்கச் சிவந்து குங்கும ம்ருக்மத மத்தத் தனங்களின்
மிசை எங்கும் மேவி
 … முகத்தில் வியர்வை உற்றுப் பரவ,
செங்கயல் மீன் போன்ற கண் இணைகள் செக்கச் சிவக்க,
குங்குமம், கஸ்தூரி இவைகளை அணிந்து செருக்குற்ற
மார்பகங்களின் மேல் எல்லாம் பொருந்தி,

மேலும் படிக்க : திருப்புகழ் 168 திமிர உததி (பழநி)

உக உயிர் ஒத்துப் புயங்கள் இன்புற உறவினை உற்றுத்
திரண்டு கொங்கு அளவுறும் அணை உற்றுத் திரங்கும்
மஞ்சமில் ஒன்றி மேவி
 … வெளிப்பட்டுத் தோன்றும்
இவ்வேசியர்கள் உயிரே போலும் எனக் கருதி, புயங்கள்
இன்புறும்படியாக கூடல் செய்து, திரண்டுள்ளதும் வாசனை
கலந்துள்ளதுமான படுக்கையில் அமர்ந்து, சுருக்கம் கொள்ளும்
கட்டிற் படுக்கையில் பொருந்தியிருந்து,

ஒளி திகழ் பத்மக் கரங்களின் புறம் உறு வளை ஒக்கக்
கலின் கல் என்கவும் உயர் மயல் உற்று இரங்கும் அன்பு
அது ஒழிந்திடாதோ
 … ஒளி விளங்கும் தாமரை போன்ற
கைகளின் மேலுள்ள வளைகள் ஒருங்கே கலின்கல் என்று ஒலி
செய்ய, மிக்க மோகம் கொண்டு (அவர்களுக்கு) இரக்கம் காட்டும்
அன்பு ஒழியாதோ?

செக முழுது ஒக்கப் பயந்த சங்கரி அடியவர் சித்தத்து
உறைந்த சம்ப்ரம சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை
சு மங்கை 
… உலகம் முழுதும் பெற்ற சங்கரி, அடியார்களுடைய
உள்ளத்தில் உறைகின்ற சிறப்பு வாய்ந்த சிவபெருமானுடைய
ஒரு பாகத்தில் உறைகின்ற மங்கை, நல்ல மங்கை,

நீடு திகழ்வன பச்சைப் பசங்கி அம்பண(ம்) கரதலி கச்சு
உற்று இலங்கு கொங்கையள் திரு அருள் நல் பொன்
பரந்திடும் பரை அண்டம் மீதே பகல் இரவு அற்றிட்டு
உயர்ந்த அம்பிகை
 … பெரிதும் விளங்கும் பச்சைப் பசேல் என்ற
நிறம் உடையவள், யாழ் ஏந்திய கரத்தினள், கச்சு அணிந்த
மார்பகங்களை உடையவள், திருவருள் என்னும் நல்ல செல்வத்தைப்
பரப்பி உலகைப் பாலிக்கும் பராசக்தி, அண்டங்களுக்கு அப்பால்
பகலும் இரவும் அற்றுப் போன உயர்ந்த இடத்தில் உள்ள அம்பிகை,

திரி புரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அ(ல்)லர்
பரிவுற ஒக்கச் செய்யும் பரம்ப்ரமி அன்பு கூரும் பதிவ்ரதை
மிக்கச் சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த
பெண் தரு
 … திரிபுரங்களை அழித்தவள், மும்மூர்த்திகளுக்கும்
உயர்ந்தவளாய் மூவரும் அல்லரான சிவபெருமான் அன்பு
கொள்ளுபடி தவம் செய்த பர தேவதை, அன்பு மிக்க பதிவிரதை,
சிறந்த (சிவபெருமானுடைய) தலையில் விளக்கமுற்று அருளும்
கங்கா நதி உற்பத்தியாகும் (இமய) மலையில் உதித்த
பெண்ணாகிய பார்வதி தந்து அருளி குழந்தையே,

பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் தம்பிரானே. …
பழனி மலை மீது விளங்கி நின்றருளும் தனிப் பெருந் தலைவனே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *