ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 183 மலரணி கொண்டை (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் தொழில் முன்னேற்றம் அடையும்.

மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்
     சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு
          மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக …… மதியாலே

மருவுநி தம்பத் தடத்தி லேநிறை
     பரிமள கொங்கைக் குடத்தி லேமிக
          வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி …… வலையாலே

நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில்
     வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன
          நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு …… மொயிலாலே

நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர
     வசமுட னன்புற் றிணக்கி லேயொரு
          நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு …… மதிகேடாய்

அலையநி னைந்துற் பநத்தி லேயநு
     தினமிகு மென்சொப் பனத்தி லேவர
          அறிவும ழிந்தற் பனத்தி லேநிதம் …… உலைவேனோ

அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய
     கசடனை யுன்சிற் கடைக்க ணாடிய
          மலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழ …… அருள்தாராய்

பலபல பைம்பொற் பதக்க மாரமு
     மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடு
          பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு …… மணிவோனே

பதியினில் மங்கைக் கதித்த மாமலை
     யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர்
          பழநியி லன்புற் றிருக்கும் வானவர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

மலர் அணி கொண்டைச் சொருக்கிலே அவள் சொ(ல்)லும்
மொழி இன்பச் செருக்கிலே கொடுமையும் அடர் நெஞ்சத்
திருக்கிலே முக மதியாலே
 … பூக்கள் அணிந்துள்ள கூந்தலின்
கொண்டை முடியிலும், (பொது மகளாகிய) அவளுடைய பேசும்
பேச்சின் இன்பச் செருக்கிலும், கொடுமை நிரம்பியுள்ள மன
முறுக்கிலும், முகமாகிய நிலவாலும்,

மருவு நிதம்பத் தடத்திலே நிறை பரிமள கொங்கைக்
குடத்திலே மிக வலியவும் வந்து ஒத்து இடத்திலே விழி
வலையாலே
 … பொருந்திய பெண்குறியிடத்திலும், நிறைந்துள்ள
நறு மணம் வீசும் மார்பகங்களாகிய குடத்திலும், நன்றாக வலிய வந்து
கலவியில் கூடிய நிலைகளிலும், கண்ணாகிய வலையிலும்,

நிலவு எறி அங்கக் குலுக்கிலே எழில் வளை புனை செம்
கைக் கிலுக்கிலே கன நிதி பறி அந்தப் பிலுக்கிலே செயும்
ஒயிலாலே
 … நிலவொளி போலக் குளிர்ந்த ஒளி வீசும் உடம்பின்
குலுக்காலும், அழகிய வளையல்களை அணிந்த சிவந்த கையில்
கிலுக்கிடும் ஒலியாலும், பருத்த பொருள்களை பறிக்கின்ற அந்தப்
பகட்டிலும், செய்கின்ற ஒய்யாரச் செயலிலும்,

நிதம் இயலும் துர்க் குணத்திலே பர வசமுடன் அன்புற்று
இணக்கிலே ஒரு நிமிஷம் இணங்கிக் கணத்திலே வெகு
மதி கேடாய்
 … தினமும் காட்டப்படும் கெட்ட குணத்திலும் என்
வசம் அழிந்து அன்பு பூண்டு சேரும் சேர்க்கையிலும் ஒரு நிமிடம்
கூடி ஒரு கணப் பொழுதிலே மிகவும் புத்தி கெட்டு,

அலைய நினைந்து உற்பநத்திலே அநு தினம் மிகு என்
சொப்பனத்திலே வர அறிவும் அழிந்து அற்பன் அ(த்)திலே
நி(த்)தம் உலைவேனோ
 … அலைய நினைத்து அதே தோற்றமாய்
நாள் தோறும் அதிகமாக என் கனவில் அந்நினைவுகள் வர, என்
அறிவு அழிந்து, அற்பனாகிய நான் தினமும் அழிவேனோ?

அசடனை வஞ்சச் சமர்த்தனாகிய கசடனை உன் சில்
கடைக்கண் நாடிய மலர் கொடு நின் பொன் பதத்தையே
தொழ அருள் தாராய்
 … முட்டாளாகிய என்னை, வஞ்சகத்தில்
சாமர்த்தியமுள்ள குற்றவாளியை, உனது ஞான மயமாகிய கடைக்
கண்ணால் விரும்பி நோக்கி, பூக்களைக் கொண்டு உன் அழகிய
திருவடிகளையே நான் தொழுமாறு அருள் புரிய வேண்டுகின்றேன்.

பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும் அடிமை சொலும் சொல்
தமிழ் பன்னீரொடு பரிமள மிஞ்சக் கடப்ப மாலையும்
அணிவோனே
 … பற்பல விதமான பசும் பொன்னாலாகிய
பதக்கங்களையும், மாலைகளையும், அடிமையாகிய நான் சொல்லுகின்ற
திருப்புகழ் என்னும் தமிழ்ப் பன்னீரையும், நறுமணம் மிக்கு வீசும் கடப்ப
மாலையையும் அணிபவனே,

பதியினில் மங்கைக் கதித்த மா மலை ஒடு சில குன்றில்
தரித்து வாழ் உயர் பழநியில் அன்புற்று இருக்கும் வானவர்
பெருமாளே.
 … தலங்களில் விஜய மங்கையிலும்*, கதித்த மலை**
என்னும் குன்றுடன் (மற்றும்) சில குன்றுகளிலும் பொருந்தி
வீற்றிருந்து, வாழ்வு சிறந்துள்ள பழனியில் அன்புற்று இருப்பவனே,
தேவர்களின் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *