ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 182 மனக்கவலை ஏதும் (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் மனக்கவலை நீங்கும்.

பாடல்

மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
     வகைக்குமநு நூல்வி தங்கள் …… தவறாதே

வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
     மயக்கமற வேத முங்கொள் …… பொருள்நாடி

வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
     மிகுத்தபொரு ளாக மங்கள் …… முறையாலே

வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
     மிகுக்குமுனை யேவ ணங்க …… வரவேணும்

மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
     மலர்ப்பதம தேப ணிந்த …… முநிவோர்கள்

வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
     மருட்டிவரு சூரை வென்ற …… முனைவேலா

தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
     செகத்தைமுழு தாள வந்த …… பெரியோனே

செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
     திருப்பழநி வாழ வந்த …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

மனக்கவலை யேது மின்றி … மனத்தில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல்,

உனக்கடிமை யேபு ரிந்து … உனக்குத் தொண்டு செய்யும் பணியையே
பூண்டு,

வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே … வகையாக அமைந்துள்ள
நீதி நூல் முறைகளிலிருந்து தவறாமல்,

வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி …
நல்ல முறையில் மன விருப்பங்கள் எண்ணிய விதத்திலேயே அமைந்து,

மயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடி … சந்தேகம்
அற்றுப்போகும்படி வேதத்தின் மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து,

வினைக்குரிய பாதகங்கள் துகைத்(து) … வினையைக் கொடுக்கும்
பாவச்செயல்களை அறவே அகற்றி,

உவகை யால் நினைந்து … ஆனந்தத்துடன் உன்னைத் தியானித்து,

மிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலே … மேலான பொருளைக்
கொண்ட ஆகமங்களில் விதிக்கப்பட்ட முறையின்படி,

வெகுட்சிதனையே துரந்து … கோபம் என்பதையே முற்றிலும் விலக்கி,

களிப்பினுடனே நடந்து … மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்து
நடந்து,

மிகுக்கும் உனையே வணங்க … யாவர்க்கும் மேம்பட்டு விளங்கும்
உன்னையே வணங்குதற்கு

வரவேணும் … (வேண்டிய அருளைத் தர) நீ வரவேண்டும்.

மனத்தில்வருவோனெ என்(று) … தியானித்தால் மனத்தில்
வருபவனே என்று நினைத்து

உன் அடைக்கலம் அதாக வந்து … உன் அடைக்கலப் பொருளாக
வந்து சேர்ந்து

மலர்ப்பதமதே பணிந்த முநிவோர்கள் … உன் மலர்த் திருவடியே
பணிந்த முனிவர்களுக்கும்,

வரர்க்கும் இமையோர்க ளென்பர் தமக்கும் … பிற
வரசிரேஷ்டர்களுக்கும், தேவர்களுக்கும்,

மனமேயிரங்கி … மனம் இரக்கப்பட்டு,

மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா … பயமுறுத்தி வந்த
சூரரை வென்ற கூரிய வேலனே,

தினைப்புனமுனே நடந்து … தினைப்புனத்துக்கு முன்னொருநாள்
நடந்துசென்று

குறக்கொடியையே மணந்து … குறவர்கொடி வள்ளியையே
மணஞ்செய்து,

செகத்தை முழுதாள வந்த பெரியோனே … இந்த உலகம்
முழுவதையும் ஆட்கொண்ட பெரியோனே,

செழித்தவளமே சிறந்த … செழிப்புற்ற, வளம் பொலிந்த

மலர்ப்பொழில்களே நிறைந்த … மலர்ச் சோலைகள் நிறைந்துள்ள

திருப்பழநி வாழவந்த பெருமாளே. … திருப்பழனியில் வீற்றிருக்க
வந்த பெருமாளே.

மேலும் படிக்க : கல்வி , செல்வம், வீரம் வாழ்வில் கிடைக்க, ஒரே ஒரு பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *