ஆன்மிகம்

திருப்புகழ் 18 மன்றலங் கொந்துமிசை (திருப்பரங்குன்றம்)

முருகப் பெருமானை போற்றி பாடப்பட்ட நூல் இது ஆகும். திரு அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ் ஆகும் இப்பாடலை படித்தால் செல்வம் சேரும்.

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
     வண்டினங் கண்டுதொடர் …… குழல்மாதர்

மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
     வம்பிடுங் கும்பகன …… தனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
     உந்தியென் கின்றமடு …… விழுவேனை

உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
     ஒண்கடம் பும்புனையும் …… அடிசேராய்

பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
     பண்டையென் பங்கமணி …… பவர்சேயே

பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
     பண்டிதன் தம்பியெனும் …… வயலூரா

சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
     செண்பகம் பைம்பொன்மலர் …… செறிசோலை

திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
     தென்பரங் குன்றிலுறை …… பெருமாளே.

மன்றல் அங் கொந்துமிசை … வாசனைபொருந்திய அழகிய
பூங்கொத்துக்களின் மீது

தெந்தனத் தெந்தனென … தெந்தனம் தெந்தனம் என்று ரீங்காரம்
செய்து கொண்டு

வண்டினங் கண்டுதொடர் … வண்டுக் கூட்டங்கள் தேனை
உண்ணப்பார்த்து தொடரும்படியான

குழல்மாதர் … கூந்தலையுடைய பெண்களது

மண்டிடும் தொண்டை … நெருக்கமாய் உள்ள கொவ்வைக்கனி
போன்ற

அமுது உண்டுகொண்டு … இதழ் அமிர்தத்தைப் பருகிக் கொண்டு,

அன்புமிக வம்பிடுங் கும்பகன தனமார்பில் ஒன்ற … ஆசை
மிகும்படி கச்சணிந்த பெருத்த மார்பில் பொருந்த,

அம்பு ஒன்றுவிழி கன்ற … அம்பை நிகர்த்த விழிகள் சோர்ந்து போக,

அங்கங்குழைய … சரீரம் மோகவசத்தால் குழைந்து போக,

உந்தியென்கின்ற மடு விழுவேனை … வயிறு என்னும் மடுவில்
விழுகின்ற அடியேனை

சிலம்புங் கனக தண்டையுங் கிண்கிணியும் … சிலம்பும்,
பொன்னால் ஆன தண்டையும், கிண்கிணியையும்,

ஒண்கடம் பும்புனையும் உன் அடிசேராய் … அழகிய கடப்ப
மலரையும் அணியும் உன் திருவடிகளில் சேர்ப்பாய்.

பன்றியங் கொம்பு கமடம் புயங்கம் … பன்றியின் அழகிய
கொம்பையும்*, ஆமை ஓட்டையும்**, பாம்பையும்,

சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர்சேயே … தேவர்களது
பழைய எலும்புகளையும் தரிக்கும்*** சிவபிரானின் பாலனே,

பஞ்சரங் கொஞ்சுகிளி … கூட்டில் இருந்துகொண்டு கொஞ்சுகின்ற
கிளிப்பிள்ளைகள்

வந்துவந்து … கூட்டின் முகப்பில் மீண்டும் மீண்டும் வந்து

ஐந்துகர பண்டிதன் தம்பியெனும் வயலூரா … ஐங்கரன்
விநாயகனாம் ஞான பண்டிதனின் தம்பியே என்று கூறி அழைக்கின்ற,
வயலூர் தலத்தில் வாசம் செய்யும் முருகனே,

சென்றுமுன் குன்றவர்கள் தந்த … குன்றுகளில் வசிப்பவர்களாகிய
வேடுவர்கள் முன்னாளில் கொடுத்த

பெண் கொண்டு … வள்ளிநாயகியாகிய பெண்ணை மணந்து கொண்டு

வளர் செண்பகம் பைம்பொன்மலர் … வளர்ந்து ஓங்கிய செண்பக
மரங்களின் பசும்பொன்னை ஒத்த மலர்கள்

செறிசோலை … மிகுந்த சோலைகளால் சூழப்பெற்றதும்,

திங்களும செங்கதிரும் அங்குலும் தங்குமுயர் … சந்திரனும்,
செஞ்சூரியனும், மேகமும் தங்கும்படி உயர்ந்ததும்

தென்பரங் குன்றிலுறை பெருமாளே. … ஆகிய அழகிய
திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *