ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 175 பாரியான கொடை (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
     வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு
          பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக …… அபிராம

பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
     சீல ஞாலவிளக் கின்ப சீவக
          பாக சாதனவுத் துங்க மானத …… எனவோதிச்

சீர தாகஎடுத் தொன்று மாகவி
     பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை
          சீறு வார்கடையிற் சென்று தாமயர் …… வுறவீணே

சேய பாவகையைக் கொண்டு போயறி
     யாம லேகமரிற் சிந்து வார்சிலர்
          சேய னார்மனதிற் சிந்தி யாரரு …… குறலாமோ

ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
     வாயி னேர்படவுற் றன்று மூலமெ
          னார வாரமதத் தந்தி தானுய …… அருள்மாயன்

ஆதி நாராணனற் சங்க பாணிய
     னோது வார்களுளத் தன்பன் மாதவ
          னான நான்முகனற் றந்தை சீதரன் …… மருகோனே

வீர சேவகவுத் தண்ட தேவகு
     மார ஆறிருபொற் செங்கை நாயக
          வீசு தோகைமயிற் றுங்க வாகன …… முடையோனே

வீறு காவிரியுட் கொண்ட சேகர
     னான சேவகனற் சிந்தை மேவிய
          வீரை வாழ்பழநித் துங்க வானவர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

பாரியானகொடைக் கொண்டலே … பாரியைப் போன்ற கொடை
மேகமே,

திரு வாழ் விசாலதொடைத் திண்புயா … லக்ஷ்மி வாசம்செய்யும்
பெரிய மாலையை அணிந்த திண்ணிய தோளனே,

எழு பாரும் ஏறுபுகழ்க் கொண்ட நாயக அபிராம … ஏழு
உலகிலும் மிக்க புகழ் கொண்ட நாயகனே, அழகனே,

பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள் … புலவர்கள்
கூட்டத்திற்கு எப்போதும் வாழ்வை அருளும்

சீல ஞாலவிளக் கின்ப சீவக … நல்லொழுக்கம் வாய்ந்த விளக்கே,
இன்பம் தரும் ஜீவகனே,

பாக சாதன உத்துங்க மானத எனவோதி … இந்திரன் போன்று
உயர்ந்த அரசனே – என்றெல்லாம் கூறி,

சீரதாக எடுத்தொன்று மாகவி பாடி னாலும் … சீராக
எடுத்தமைந்த ஒரு சிறப்பான பாடலைப் பாடினாலும்

இரக்கஞ்செயாதுரை சீறுவார் … இரக்கம் காட்டாது வார்த்தைகளைச்
சீறிப் பேசுவோரது

கடையிற் சென்று தாமயர்வுற வீணே … கடைவாயிலிற் சென்று
தாம் சோர்வு அடையும்படி வீணாக,

சேய பாவகையைக் கொண்டு போய் … செம்மை வாய்ந்த பாமாலை
வகைகளைக் கொண்டு போய்

அறியாம லேகமரிற் சிந்து வார்சிலர் … அறியாமலே சாக்கடையில்
கொட்டுவது போலக் கொட்டிச் சிந்துவார்கள் சிலர்.

சேய னார்மனதிற் சிந்தியார் அருகுறலாமோ … இரப்பவர்க்குத்
தூரத்தில் நிற்பவர்கள், மனதில் சிறிதும் இரக்கத்தைச் சிந்தியாதவர்கள்
ஆகியோரின் அருகே நிற்கலாமோ?

ஆரு நீர்மைமடுக் கண்கரா நெடுவாயில் … நிறைந்த நீருள்ளதான
கரிய சுனையின் மத்தியில் முதலையின் பெரும் வாயில்

நேர்படவுற் றன்று மூலமென … நேராக அகப்பட்டு, அன்று
ஆதிமூலமே என்று

ஆர வாரமதத் தந்திதான் உ(ய்)ய அருள்மாயன் … பேரொலி
செய்த மதயானையாகிய கஜேந்திரன் பிழைக்கும்வண்ணம் அருளிய மாயவன்,

ஆதி நாராணனற் சங்க பாணியன் … ஆதிப் பரம்பொருளான
நாராயணன், பாஞ்சஜன்யம் என்ற சங்கைக் கரத்தில் ஏந்தியவன்,

ஓது வார்களுளத் தன்பன் … அவனைத் துதிப்போர்களின்
உள்ளத்தில் இருக்கும் அன்பன்,

மாதவனான நான்முகன் நற் றந்தை சீதரன் மருகோனே …
மகா தவனாகிய பிரமாவுக்கு நல்ல தந்தை, லக்ஷ்மியை மார்பில் தரித்த
திருமாலின் மருமகனே,

வீர சேவகவுத் தண்ட தேவகுமார … வீரமும், பராக்கிரமும்,
உக்கிரமும் உள்ள தெய்வக் குழந்தையே,

ஆறிருபொற் செங்கை நாயக … பன்னிரு அழகிய செங்கை
நாயகனே,

வீசு தோகைமயிற் றுங்க வாகனமுடையோனே … வீசும் கலாப
மயிலாம் பெருமை வாய்ந்த வாகனத்தை உடையவனே,

வீறு காவிரியுட் கொண்ட சேகரனான சேவகன் … விளங்கும்
காவிரியைத் தன்னிடத்தே கொண்ட கலிசையூர்த் தலைவனான*
பராக்ரமனின்

நற் சிந்தை மேவிய வீரை வாழ்பழநி … நல்ல மனத்தில்
வீற்றிருக்கும் தலைவா, வீரை நகரிலும் பழநியிலும் வீற்றிருக்கும்
பெருமாளே,

துங்க வானவர் பெருமாளே. … தூய்மையான தேவர்களின்
பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *