திருப்புகழ் 174 பஞ்ச பாதகன் (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் வரவு அதிகரிக்கும்.
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு
வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி
பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை …… பவுஷாசை
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ
பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு …… சதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங் காரியம லாமலரு
ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக …… ழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி
கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் …… புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ
டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு
வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி …… முருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிட
தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ்
மங்க ளாயிசந் தானசிவ காமியுமை …… யருள்பாலா
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை
பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச
கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர …… அணைவோனே
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல்
கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர்
கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் … ஐந்து பாதகங்களும்*
செய்தவன், பாவம் செய்தவன், முற்றிய மூடன்,
வெகு வஞ்ச லோபியன் … மிக்க வஞ்சகத்தோடு கூடிய
பேராசைக்காரன்,
சூதுகொலை காரன் … சூது, கொலை இவை செய்யும் பேர்வழி,
மதி பண்கொளாதவன் … அறிவில் நல்ல பண்பே இல்லாதவன்,
பாவகட லூடுநுழை பவுஷாசை பங்கன் … பாவக்கடலில்
நுழைகின்ற செருக்கு, ஆசை என்ற குற்றம் உடையவன் ஆகிய நான்,
மோதியம் பாழ்நரகில் வீணின்விழ … தாக்குண்டு அந்தப் பாழ்
நரகத்தில் வீணாக விழும்படியாக
பெண்டிர் வீடுபொன் தேடி … பெண்கள், வீடு, பொன் என்னும்
மூவாசை கொண்டு தேடி அலைந்தும்,
நொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடி … ஒரு
நொடியில், மறைந்து கிடக்கும் ஐவகை மலங்களுடனும்**
பாசங்களுடனும் சேர்ந்து,
வெகு சதிகாரர் அஞ்சு பூதமுண்டா கடிய காரர் … மிக்க
மோசக்காரராம் ஐந்து பூதங்களாகிய அந்தத் தீயவர்
இவர் தங்கள் வாணிபங் காரியம லாமல் … இவர்களின்
வியாபார காரியங்களில் கலவாமல்,
அருளன்பர் பாலுடன் கூடியறி யாதபுகழ் அடியேனை … அருள்
பெற்ற அன்பர்களிடத்தே கூடியறியாத புகழையே கொண்டுள்ள நான்,
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி … தேவர்களும்,
திருமாலும், பிரமனும் தேடியும் காணாத ஜோதியாம்,
சந்த்ர சேகரன் பாவைவிளையாடு … சந்திரசேகரனாம்
சிவபிரானும், பாவையாம் தேவி பார்வதியும் கூடி விளையாடுகின்ற
படிக அந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் புரிவாயே …
ஸ்படிகம் போன்று தூய அழகுடன் உள்ள நாடாகிய
சிவலோகத்தில் உள்ளவர்களோடு கூடி விளையாட அருள்
புரிவாயாக.
வஞ்ச மாசுரன் சேனைகடலோடு குவடுங்கவே … வஞ்சம்
நிறைந்த கொடும் சூரனும், அவனது படையும், கடலும்,
கிரெளஞ்சமலையும் ஒடுங்கும்படியாக,
இனன் போலவொளிர் வேலைவிடு … சூரியனைப் போல
ஒளிவீசும் வேலாயுதத்தைச் செலுத்திய,
வண்கையா கடம் பேடுதொடை யாடுமுடி முருகோனே …
வழங்கும் தன்மையுடைய கையனே, கடப்பமலர் மாலை
விளங்கும் திருமுடியை உடைய முருகனே,
மங்கை மோகசிங்கார ரகு ராமரிட தங்கை … மங்கை,
வசீகரமும் அழகும் கொண்ட ரகுராமனின் (திருமாலின்) தங்கை,
சூலியங் காளியெமை யீணபுகழ் மங்களாயி …
சூலமேந்தியவள், அழகிய காளி, யாம் அனைவரையும் ஈன்ற
புகழ் நிறைந்த மங்களகரமான தாய்,
சந தானசிவ காமியுமை யருள்பாலா … சந்தான விருட்சம்
போல் வேண்டிய வரங்களைத் தரும் சிவகாமி, அந்த உமாதேவி
அருளிய பாலனே,
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை … கொஞ்சும்
அழகிய கிளி போன்ற பேச்சும், கரிய கடைக் கண்களும்,
பெண்கள் நாயகந் தோகைமயில் போல் … பெண்களுக்குள்
தலைமையும், கலாப மயில் போன்ற சாயலும்,
இரச கொங்கை மால்குறம் பாவை … இன்பம் தரும் மார்பகமும்,
பெருமையும் உடைய குறப் பெண் வள்ளியின்
அவல் தீரவர அணைவோனே … ஆவல் தீர வந்து அவளை
அரவணைத்துக் கொண்டவனே,
கொண்டல் சூழுமஞ்சோலை மலர் வாவி … மேகங்கள் சூழ்ந்த
அழகிய சோலைகளும், மலர்கள் நிறைந்த குளங்களும்,
கயல் கந்து பாய நின்றாடு துவர் பாகை யுதிர் … கயல் மீன்கள்
வேகமாகப் பாய்வதால் ஆட்டப்படும் துவர்த்த பாக்குக்கிளைகளில்
இருந்து உதிர்கின்ற
மேலும் படிக்க : திருப்புகழ் 74 பங்கம் மேவும் பிறப்பு (திருச்செந்தூர்)
கந்தி யோடகஞ் சேர் … கமுகமரங்களும் தன்னகத்தே
கொண்டுள்ள
பழநி வாழ்குமர பெருமாளே. … பழநி மலையில் வாழ்கின்ற
குமரப் பெருமாளே.