ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 172 நெற்றி வெயர்த்துளி (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் தொழில் முன்னேற்றம் அடையும்.

நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு
     குத்துமு லைக்குட மசைத்து வீதியி
          னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் …… மொழியாலே

நித்தம யக்கிகள் மணத்த பூமலர்
     மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட
          னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு …… முறவாடி

உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு
     மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு
          முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க …… ளுறவாமோ

உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன்
     மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற
          வுட்குளிர் புத்தியை யெனக்கு நீதர …… வருவாயே

கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
     வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு
          கற்பனை நெற்பல அளித்த காரண …… னருள்பாலா

கற்பந கர்க்களி றளித்த மாதணை
     பொற்புய மைப்புயல் நிறத்த வானவர்
          கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர …… எனநாளும்

நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர
     வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர்
          நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு …… மருகோனே

நட்டுவர் மத்தள முழக்க மாமென
     மைக்குல மெத்தவு முழக்க மேதரு
          நற்பழ நிப்பதி செழிக்க மேவிய …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

நெற்றி வெயர்த் துளி துளிக்கவே இரு குத்து முலைக் குடம்
அசைத்து வீதியில் நிற்பவர் மைப் படர் விழிக் கலாபியர்
மொழியாலே நித்த(ம்) மயக்கிகள்
 … நெற்றியில் வியர்வைத் துளிகள்
அரும்பவே, இரண்டு குத்து முலைக் குடங்களையும் அசைத்து தெருவில்
நிற்பவர்கள். மை தீட்டிய கண்களை உடைய மயில் போன்ற
விலைமாதர்கள். இனிய பேச்சினால் நாள் தோறும் மயக்குபவர்கள்.

மணத்த பூ மலர் மெத்தையில் வைத்து அதி விதத்திலே
உடல் நெட்டு வரத் தொழில் கொடுத்து மேவியும் உறவாடி
 …
நறு மணம் வீசும் அழகிய மலர்கள் விரிக்கப்பட்ட மெத்தையில்
சேர்ப்பித்து, பல வகையிலே உடலில் திமிர் ஏறும்படியான
தொழில்களைக் காட்டிக் கொடுத்தும், நெருங்கியும் உறவாடி,

உற்ற வகைப்படி பொருட்கள் யாவையும் மெத்தவு(ம்)
நட்பொடு பறித்து நாள் தொறும் உற்பன வித்தைகள்
தொடுக்கு மாதர்கள் உறவாமோ
 … தமக்கே உள்ள வழக்கமாக
பொருள் முழுமையும் மிகுந்த நட்பினைக் காட்டிப் பறித்து தினமும்
(பணம் பறிக்க) புதிதாகத் தோன்றும் வித்தைகளை உபயோகப்
படுத்தும் விலைமாதர்களின் தொடர்பு நல்லதாகுமோ?

உச்சித மெய்ப்பு உற அ(ன்)னை தயாவுடன் மெய்ப்படு
பத்தியின் இணக்கமே பெற உள் குளிர் புத்தியை எனக்கு
நீ தர வருவாயே
 … மேலான உண்மை உடையதான மெய்யான
பக்தியின் சேர்க்கையையே நான் பெறுமாறு, என் உள்ளம் குளிரும்
புத்தியை எனக்கு, தாயின் அன்புடன், நீ தர வந்தருள வேண்டும்.

கற்ற தமிழ்ப் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற் கொடி
களிக்கவே பொரு கற்பனை நெல் பல அளித்த காரணன்
அருள்பாலா
 … நன்கு கற்ற தமிழ்ப் புலவனாகிய சுந்தரர் மீது
மகிழ்ச்சி பூண்டு ஒரு பொன் கொடி போன்ற அவர் மனைவி
(பரவையார்) களிப்புற, தாம் இட்ட கட்டளைப்படி வந்து குவிந்த
நெல் மலையை* அளித்த மூலப் பொருளான சிவ பெருமான்
அருளிய குழந்தையே,

கற்ப நகர்க் களிறு அளித்த மாது அணை பொன் புய …
கற்பக மரங்கள் நிறைந்த நகராகிய அமராவதியில் உள்ள
(ஐராவதமாகிய) வெள்ளை யானை போற்றி வளர்த்த மாதாகிய
தேவயானையைத் தழுவிய அழகிய திருப்புயங்களை உடையவனே,

மைப் புயல் நிறத்த வானவர்கட்கு இறை உட்கிட அருள்
க்ருபாகர என நாளும் நல் தவர் அர்ச்சனை இட
 … கரிய மேக
நிறமுடைய தேவர்கள் தலைவனாகிய இந்திரன் (சூரனைக் கண்டு)
பயப்பட்ட போது கருணைக்கு உறைவிடமே என்று நாள் தோறும்
நல்ல தவசிகள் அர்ச்சனை செய்ய,

தயாபர வஸ்து எனப் புவியிடத்திலே வளர் நத்து அணி
செக்கரன் மகிழ்ச்சி கூர் தரு மருகோனே
 … கிருபாகர மூர்த்தி
என்று, பூமியில் புகழ் வளர்ந்திருக்கின்ற சங்கு ஏந்திய சிவந்த
கரங்களை உடைய திருமால் மகிழ்ச்சி மிகக் கொண்டு, போற்ற
விளங்கும் மருகோனே,

மேலும் படிக்க : திருப்புகழ் 65 துன்பங்கொண்டு அங்கம் (திருச்செந்தூர்)

நட்டுவர் மத்தள முழக்கமாம் என மைக் குலம் மெத்தவும்
முழக்கமே தரு நல் பழநிப் பதி செழிக்க மேவிய
பெருமாளே.
 … நட்டுவனார் மத்தளத்தின் முழக்கம் தானோ என்று
ஐயுறும்படி, கரு மேகக் கூட்டங்கள் மிகவும் இடி ஒலியைப் பெருக்கும்
சிறந்த பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *