திருப்புகழ் 169 தோகைமயிலே கமல (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் மன நிம்மதி கிடைக்கும்.
தோகைமயி லேகமல மானேயு லாசமிகு
காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை
தோயுமநு போகசுக லீலாவி நோதமுழு …… துணர்தேனே
சூதனைய சீதஇள நீரான பாரமுலை
மீதணைய வாருமிதழ் தாரீரெ னாணைமொழி
சோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக …… மயலானேன்
ஆகமுற வேநகம தாலேவி டாதஅடை
யாளமிட வாருமென வேமாத ரார்களுட
னாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி …… யுனையோதேன்
ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில
னீறுநுதல் மீதிடலி லாமூட னேதுமிலி
யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள் …… தருவாயே
மாகமுக டோடகில பாதாள மேருவுட
னேசுழல வாரியது வேதாழி யாவமரர்
வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது …… கடைநாளில்
வாருமென வேயொருவர் நோகாம லாலவிட
மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும்
வாழஅமு தேபகிரு மாமாய னாரினிய …… மருகோனே
மேகநிக ரானகொடை மானாய காதிபதி
வாரிகலி மாருதக ரோபாரி மாமதன
வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன …… துளமேவும்
வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருத
தீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி
வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
தோகை மயிலே கமல மானே உ(ல்)லாசம் மிகு காம
துரையான மத வேள் பூவையே … கலாப மயிலே, தாமரையில்
உறையும் லக்ஷ்மியான மான் போன்றவளே, உல்லாசம் மிகுந்த காமத்
தலைவனான மன்மதனுக்கு உகந்த நாகணவாய்ப் புள்ளைப் போன்ற
பாவையே,
இனிமை தோயும் அநுபோக சுக லீலா விநோதம் முழுது
உணர் தேனே … இனிமை நிரம்பிய அநுபவங்களான காம லீலா
விநோதங்கள் எல்லாவற்றையும் அறிந்துள்ள தேன் போல் இனிப்பவளே,
சூது அனைய சீதள இள நீர் ஆன பார முலை மீது அணைய
வாரும் இதழ் தாரீர் என் ஆணை மொழி … சூதாடும் கருவி
போன்ற அமைப்பில், குளிர்ந்த இள நீர் போன்ற பாரமான மார்பகங்களை
(நான்) தழுவும்படி வருவாயாக. வாயிதழை உண்ணத் தருவாயாக. இது
என் ஆணை மொழி ஆகும்.
சோர்வது இ(ல்)லை யான் அடிமை ஆவேன் உம் ஆணை
மிக மயலானேன் … சோர்வே இல்லாமல் நான் உனக்கு அடிமை
ஆவேன். உன்மீது ஆணை. உன்னிடம் மிகவும் காம மயக்கம்
கொண்டுள்ளேன்.
ஆகம் உறவே நகம் அதாலே விடாத அடையாளம் இட
வாரும் எனவே … எனது உடலில் அழுந்திப் படியும்படியாக நகத்தால்
என்றும் அழியாத அடையாளத்தை இட வருவாயாக எனறெல்லாம்
மாதர்களுடன் ஆசை சொ(ல்)லியே உழலும் மா பாதன்
நீதியிலி உனை ஓதேன் … விலைமாதர்களுடன் ஆசை
மொழிகளைக் கூறித் திரிகின்ற பெரிய பாபம் செய்பவன், நீதி
அற்றவன், உன்னை ஓதித் துதிக்காதவன் நான்.
ஆம் உனது நேய அடியாரோடு கூடுகிலன் நீறு நுதல் மீது
இடல் இலா மூடன் ஏதுமிலி … உனக்கு உகந்த அன்பு பூண்ட
அடியவர்களோடு சேர்வதில்லை. திருநீற்றை நெற்றியில் இடுதல்
இல்லா முட்டாள். எவ்வித நற்குணமும் இல்லாதவன்.
ஆயினும் யான் அடிமை ஈடேறவே கழல்கள் தருவாயே …
அப்படி இருந்த போதிலும் நான் உன் அடிமை ஆவேன். ஆகையால்
நான் நற்கதி அடைய உனது திருவடிகளைத் தருவாயாக.
மாகம் முகடோடு அகில பாதாள மேருவுடனே சுழல வாரி
அதுவே தாழியா(க) … அண்ட உச்சி முதல் அகில பாதாளம் வரையும்
அங்ஙனம் மேரு மலையும் சுழற்சி உற, பாற்கடலே கடையும் பானையாக
அமைய,
அமரர் வாலி முதலானவர்கள் ஏனோர்களால் அமுது கடை
நாளில் … தேவர்கள், (குரங்கரசன்) வாலி முதலியவர்கள்
மற்றவர்களுடன் அமுது கடைந்த நாளில்,
வாரும் எனவே ஒருவர் நோகாமல் ஆல விடம் ஈசர்
பெறுமாறு உதவியே தேவர் யாவர்களும் வாழ அமுதே பகிரும்
மா மாயனார் இனிய மருகோனே … வாருங்கள் எனக் கூறி
ஒருவரும் மனம் நோகாத வண்ணம், ஆலகால விஷத்தை
சிவபெருமான் பெறும்படி தந்து, தேவர்கள் எல்லோரும் வாழும்
பொருட்டு அமுதத்தை அந்தத் தேவர்களுக்குப் பகிர்ந்து அளித்த
பெரிய மாயோனாகிய திருமாலுக்கு இனிய மருகனே,
மேக நிகரான கொடைமான் நாயக அதிபதி வாரி கலி மாருத
கரோ பாரி மா மதன வேள் கலிசை வாழ வரு காவேரி
சேவகனது உளம் மேவும் வீர … மேகத்தைப் போன்ற கொடைப்
பெருமை வாய்ந்த நாயகத் தலைவனும், தன் செல்வக் கடலை வாயு
வீசுவதைப் போல் விரைந்து அளிக்கும் கொடைத் திறம் கொண்ட
கைகளை உடைய பாரி வள்ளல் போன்றவனும், சிறந்த மன்மதனைப்
போன்ற அழகனுமாகிய, கலிசையில் வாழும் காவேரி சேவகனாருடைய*
மனத்தில் வீற்றிருக்கும் வீரனே,
அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா … பெரும்
சூரர் சுற்றமெல்லாம் வேரோடு மடியும்படி சண்டை செய்த தீரனே,
குமரனே,
குவளை சேர் ஓடை சூழ் கழனி வீரை நகர் வாழ் பழநி
வேலாயுதா அமரர் பெருமாளே. … குவளை மலர்கள் நிறைந்த
ஓடைகள் சூழ்ந்த வயல்களை உடைய வீரை நகரில் வாழும் பழனி
வேலாயுதனே, தேவர்களின் பெருமாளே.