ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 168 திமிர உததி (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் எது பாடலை தொடர்ந்து படித்தால் கல்வியில் முன்னேற்றம் அடைவீர்

திமிர வுததி யனைய நரக
     செனன மதனில் …… விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு
     சிறிது மிடியு …… மணுகாதே

அமரர் வடிவு மதிக குலமு
     மறிவு நிறையும் …… வரவேநின்

அருள தருளி யெனையு மனதொ
     டடிமை கொளவும் …… வரவேணும்

சமர முகவெ லசுரர் தமது
     தலைக ளுருள …… மிகவேநீள்

சலதி யலற நெடிய பதலை
     தகர அயிலை …… விடுவோனே

வெமர வணையி லினிது துயிலும்
     விழிகள் நளினன் …… மருகோனே

மிடறு கரியர் குமர பழநி
     விரவு மமரர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

திமிர வுததி யனைய … இருண்ட கடல் போன்றதும்,

நரகசெனன மதனில் … நரகத்திற்கு ஒப்பானதும் ஆன பிறப்பு
என்பதில்

விடுவாயேல் … நீ என்னை விழும்படியாகச் செய்தால்,

செவிடு குருடு வடிவு குறைவு … செவிடு, குருடு, அங்கஹீனம்,

சிறிது மிடியும் அணுகாதே … சிறிதேனும் வறுமை என்பவை ஏதும்
இல்லாது,

அமரர் வடிவும் அ திக குலமும் … தேவ லக்ஷணமும், உயர்
குடிப்பிறப்பும்,

அறிவு நிறையும் வரவே … அறிவும், நீதி ஒழுக்கமும் எனக்கு
வருமாறு

நின் அருள தருளி … உனது திருவருளைத் தந்தருளி,

எனையு மனதோடு … என்னையும் நீ மனம்வைத்து

அடிமை கொளவும் வரவேணும் … உன் அடிமையாக ஆட்கொள்ள
வரவேண்டும்.

சமர முகவெல் அசுரா தமது … போர்க்களத்தில் வெல்லப்பட்ட
அசுரர்களின்

தலைக ளுருள … தலைகள் உருளும்படியாக,

மிகவேநீள் சலதி யலற … மிகப் பெரிய கடல் அலறும்படியாக,

நெடிய பதலை தகர … நீண்டுயர்ந்த கிரெளஞ்சமலை பொடியாக,

அயிலை விடுவோனே … வேலினைச் செலுத்தியவனே,

வெமர வணையி லினிது துயிலும் … பாம்புப் படுக்கையில் இனிதே
துயிலும்

விழிகள் நளினன் மருகோனே … தாமரைக்கண்ணன் திருமால்
மருகனே,

மிடறு கரியர் குமர … கண்டம் கறுத்த (நீலகண்ட) சிவனின்
குமரனே,

பழநி விரவு மமரர் பெருமாளே. … பழனியில் வந்து தொழும்
தேவர்களின் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *