ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 167 திடமிலி சற்குணமிலி (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் சகல சௌபாக்கியம் கிடைக்கும்.

திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் …… புதமான
     செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் …… கமுமீதே

இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் …… றமிழ்பாட
     இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் …… பெறவேணும்

கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் …… பொரும்வேலா
     கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் …… கிறகோடே

படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் …… கொருபாலா
     பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

திடமிலி … உன் அருளில் ஈடுபடும் உறுதி இல்லாதவன் யான்,

சற் குணமிலி … நல்ல குணங்கள் ஏதும் இல்லாதவன் யான்,

நற் றிறமிலி … தொண்டுகள் செய்வதற்கு ஆற்றல் இல்லாதவன் யான்,

அற்புதமான செயலிலி … வியக்கத்தக்க அரும் செயலைச்
செய்யாதவன் யான்,

மெய்த் தவமிலி … மெய்யறிவோடு கூடிய தவம் ஒன்றும் செய்யாதவன்
யான்,

நற் செபமிலி … நன்மையை நல்கும் ஜபம் ஏதும் செய்யாதவன் யான்,

சொர்க்கமுமீதே இடமிலி … சொர்க்க உலகத்தில் இடம்பெறத் தகுதி
இல்லாதவன் யான்,

கைக் கொடையிலி … கரங்களால் ஒரு தானமும் கொடுத்தறியாதவன்
யான்,

சொற்கு இயல்பிலி நற்றமிழ் பாட … உன்னை நல்ல
தமிழ்ப்பாடலால் பாடுதற்கு ஏற்ற சொல்வன்மை இல்லாதவன்
யான், (இத்தகைய குறைபாடுகள் உள்ள அடியேன்)

இருபதமுற்று … உனது இரண்டு திருவடிகளையும் அடைந்து

இருவினையற்று … நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும்
தீர்ந்து

இயல்கதியைப் பெறவேணும் … உயர்ந்த முக்தி நிலையைப் பெற்று
உய்ய வேண்டும்.

கெடுமதியுற்றிடும் அசுர … தீய புத்தியே உடையவர்களாகிய
அசுரர்களது

கிளைமடியப் பொரும்வேலா … வம்சமே அழியுமாறு போர் புரிந்த
வேலனே,

கிரணகுறைப் பிறை … ஒளிபடைத்த இளம்பிறைச் சந்திரன்,

அறுகு அக்கு இதழ் மலர் கொக்கிறகோடே … அறுகம்புல்,
ருத்திராக்ஷம், வில்வ இதழ், கொன்றை மலர், கொக்கின் இறகு
முதலியவற்றை

படர்சடையிற் புனை … விரிந்த சடைமுடியில் தரித்துக்
கொண்டிருப்பவரும்

நடனப் பரமர்தமக்கொருபாலா … ஆனந்தத் தாண்டவம்
புரிபவருமான பரமசிவன் பெற்ற ஒப்பற்ற குமாரனே,

பலவயலிற் றரளநிறை … குறையின்றிப் பயன் தரும் வயல்களில்
முத்துக்கள் நிறைந்த

பழநிமலைப் பெருமாளே. … பழநி மலையில் எழுந்தருளிய
பெருமாளே.

மேலும் படிக்க ; திருப்புகழ் 178 பெரியதோர் கரி (பழநி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *