ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 166 தலைவலி மருத்தீடு (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் எது இப்பாடலை தொடர்ந்து படித்தால் தீராத நோய்கள் நீங்கும்

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி …… யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
          சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் …… விதியாதே

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க …… ளிருபாதம்

உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை …… வரவேணும்

அலைகட லடைத்தேம காகோர ராவணனை
     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு …… மருகோனே

அறுகினை முடித்தோனை யாதார மானவனை
     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் …… வருவோனே

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு …… மணவாளா

பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் … தலைவலி, வசிய
மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, ஜுரம்,

விழிவலி வறட்சூலை காயாசு வாசம் … கண்வலி, வறள் என்ற
வயிற்றுவலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு,

வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே …
நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், உலகமாயையால் வரும்
விகாரமான பிணிகள் முதலியவை என்னை அணுகாதவண்ணம்,

தலமிசை யதற்கான பேரோடு கூறி … பூமியில் அந்த நோய்கள்
நீங்குவதற்காக சில வைத்தியர்களிடம் சொல்லி,

யிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் … இது
நீங்குவதற்குப் பரிகாரம் யாதெனக் கேட்டால், காது கேளாததுபோலச்
செல்பவர் சிலர்,

சரியும் வயதுக்கேது தாரீர்சொலீரெனவும் விதியாதே …
சாகப்போகும் வயதாகிவிட்டதே உமக்கு, எவ்வளவு பணம் தருவீரெனக்
கேட்பவர் சிலர் என்று பிறர் கூறும்படியான விதியை என் தலையில்
எழுதாமல்,

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் … ஊக்கக்குறைவு
இன்றி, விருப்பமுடன் பெரிய பூந்தோட்டத்தில் பூத்த மணமுள்ள
மலர்களை,

வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம் … விதவிதமாகப்
பறித்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல் அமைத்து

உனதடியி னிற்சூடவேநாடு மாதவர்கள் இருபாதம் …
உன்னடியில் சூட்டுதற்கு விரும்பும் சிறந்த தவசிரேஷ்டர்களின் இரு
பாதங்களையும்

உளமது தரித்தே வினாவோடு பாடியருள் … மனத்தினில்
தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, உன்னருளால்

வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ … உன்னை
வழிபடுவதற்கு, என்மீது அன்பு கூர்ந்து, உன் திருவடிகளைத் தந்துதவ

உரகமது எடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும் …
பாம்பைத் தூக்கி எறிந்து ஆடும் மயிலின் மீது வந்தருள வேண்டும்.

அலைகடல் அடைத்தே மகாகோர ராவணனை … அலைகடலை
அணையிட்டு அடைத்து, மகா கோரமான ராவவணனுடைய

மணிமுடி துணித்து ஆவியேயான ஜானகியை … மணிமுடிகளை
அறுத்துத்தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாதேவியை

அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு
மருகோனே
 … தன் தோள்வலியால் அழைத்துக்கொண்ட மாயவனான
திருமாலை மாமன்
என்று அழைக்கும் மருகனே,

அறுகினை முடித்தோனை யாதார மானவனை … அறுகம்புல்லை
சடையில் முடித்தவனும், உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும்,

மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் … மழு, மான்
இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர்

அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்
வருவோனே
 … சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை,
சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே,

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை … பல கலைகளைப்
படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற

இருசரண வித்தார வேலாயுதா … இரு திருவடிகளை உடைய
வித்தகனே, வேலாயுதனே,

உயர்செய் பரண்மிசை குறப்பாவை … உயரத்தில் கட்டப்பட்ட
பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின்

தோள்மேவ மோகமுறு மணவாளா … தோள்களைத் தழுவ மிக்க
ஆசை கொண்ட மணவாளனே,

மேலும் படிக்க : விரதத்துக்கு தயாராகலாமா!

பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில் வருபுனல்
பெருக்காறு
 … தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும்,
வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய

காவேரி சூழவளர் பழநிவரு … காவேரி சூழ விளங்கும் பழநியில்
எழுந்தருளிய,

கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. … பச்சைக் கற்பூர மணம்
கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *