ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 165 தமரும் அமரும் (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் திருமண தடை நீங்கும்.

தமரு மமரு மனையு மினிய
     தனமு மரசும் …… அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு
     தலையை வளைய …… எறியாதே

கமல விமல மரக தமணி
     கனக மருவு …… மிருபாதங்

கருத அருளி யெனது தனிமை
     கழிய அறிவு …… தரவேணும்

குமர சமர முருக பரம
     குலவு பழநி …… மலையோனே

கொடிய பகடு முடிய முடுகு
     குறவர் சிறுமி …… மணவாளா

அமர ரிடரு மவுண ருடலு
     மழிய அமர்செய் …… தருள்வோனே

அறமு நிறமு மயிலு மயிலு
     மழகு முடைய …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

தமரும் அமரு மனையும் … சுற்றத்தாரும், அவர்கள் கூடி இருக்கும்
இல்வாழ்க்கையும்,

இனிய தனமும் அரசும் … இனிமையான செல்வமும், ஆட்சியும்

அயலாக … என்னை விட்டு விலகிப் போகும்படியாக,

தறுகண் மறலி முறுகு கயிறு … கொடுமையான யமன் திண்ணிய
பாசக்கயிற்றைக் கொண்டு

தலையை வளைய எறியாதே … தலையைச் சுற்றி வளைப்பதற்கு
எறியாமல் இருக்க,

கமல விமல மரகதமணி … தாமரை போன்றும், பரிசுத்தமான,
மரகதமணி போலவும்,

கனக மருவும் இருபாதம் … தங்கத்தைப் போலவும் விளங்கும்
உன்னிரு திருவடிகளை

கருத அருளி … நான் நினைத்துக்கொண்டே இருக்குமாறு அருளி,

எனது தனிமை கழிய … என் திக்கற்ற தனிமை நீங்கும்படி

அறிவு தரவேணும் … அறிவைத் தந்தருள வேண்டும்.

குமர சமர முருக பரம … குமரா, போர் வீரா, முருகா, பரமனே,

குலவு பழநி மலையோனே … விளங்கும் பழனிமலை வாசனே,

கொடிய பகடு … மதம் பிடித்த யானையை

மேலும் படிக்க ; ஆவணி மாதத்தின் சிறப்பு விசேஷங்கள்

முடிய முடுகு … (வள்ளியை பயமுறுத்தி உன்னை
அணையவைக்கவேண்டும் என்ற) உன் கருத்து நிறைவேற
எதிரே வரச் செய்தவனே,

குறவர் சிறுமி மணவாளா … குறப்பெண் வள்ளியின்
மணவாளனே,

அமரர் இடரும் அவுணர் உடலும் … தேவர்களின் துன்பமும்,
அசுரர்களின் உடலும்

அழிய அமர் செய்தருள்வோனே … ஒன்றாக அழியும்படி
போர் செய்து அருளியவனே,

அறமும் நிறமும் அயிலும் மயிலும் … தர்மமும், செந்நிறமும்,
வேலும், மயிலும்,

அழகும் உடைய பெருமாளே. … அழகும் உடைய பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *