ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 164 தகைமைத் தனியில் (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
     தநுமுட் டவளைப் …… பவனாலே

தரளத் திரளிற் புரளக் கரளத்
     தமரத் திமிரக் …… கடலாலே

உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
     கொளிமட் குமிகைப் …… பொழுதாலே

உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
     குனநற் பிணையற் …… றரவேணும்

திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
     சிறையிட் டபகைத் …… திறல்வீரா

திகழ்கற் பகமிட் டவனக் கனகத்
     திருவுக் குருகிக் …… குழைமார்பா

பகலக் கிரணப் பரணச் சடிலப்
     பரமற் கொருசொற் …… பகர்வோனே

பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
     பழநிக் குமரப் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

தகைமைத் தனியில் பகை கற்று உறு கைத் தநு முட்ட
வளைப்பவனாலே
 … தக்க தருணமென்று பார்த்து தனி நிலையில்
(அவள் மீது) பகை பூண்டு, தன் கையில் உள்ள வில்லை நன்றாக
வளைக்கும் மன்மதனாலே,

தரளத் திரளில் புரளக் கரளத் தமரத் திமிரக் கடலாலே …
முத்துக் குவியல்கள் புரள்கின்றதும், நஞ்சின் பிறப்புக்கு இடமானதும்,
ஒலி செய்வதும், இருள் நிறைந்ததுமாகிய கடலாலும்,

உ(ற்)கை முத்தம் மிகுத்தது எனப் பகல் புக்கு ஒளி மட்கு
மிகைப் பொழுதாலே
 … நட்சத்திரங்கள் முத்துக்கள் நிறைந்தது போல்
வானில் நிரம்பித் தோன்ற, பகல் பொழுது போய், ஒளி மங்கி, மிஞ்சி
நிற்கும் (இரவுப்) பொழுதாலும்,

உரை அற்று உணர்வு அற்று உயிர் எய்த்த கொடிக்கு உன
நல் பிணையல் தர வேணும்
 … வாக்கு அற்றும், உணர்வு அற்றும்,
உயிர் இளைத்து நிற்கும் கொடி போன்ற (என்) மகளுக்கு
உனது நல்ல மாலையை நீ தந்தருள வேண்டும்.

திகை பத்தும் உகக் கமலத்தனை முன் சிறை இட்ட பகைத்
திறல் வீரா
 … பத்துத் திசைகளில் உள்ளவர்களும் கலங்க, தாமரையில்
உள்ள பிரமனை முன்பு சிறையில் அடைத்து பகைமைத் திறத்தைக்
காட்டிய வீரனே,

திகழ் கற்பகம் மிட்ட வனக் கனகத் திருவுக்கு உருகிக் குழை
மார்பா
 … (வேண்டியதைத் தந்து) விளங்கும் கற்பக மரங்கள் நிறைந்த
சோலைகளை உடைய பொன்னுலகத்து லக்ஷ்மி (தேவயானை) மீது
மனம் உருகிக் குழைந்து அணைந்த மார்பனே,

பகலக் கிரணப் பரணச் சடிலப் பரமற்கு ஒரு சொல் பகர்வோனே …
ஞாயிறு போல ஒளி கொண்ட, பாரமான சடையைக் கொண்ட
பரமனாகிய சிவபெருமானுக்கு, ஒப்பற்ற பிரணவச் சொல்லை
உபதேசித்தவனே,

பவனப் புவனச் செறிவுற்று உயர் மெய்ப் பழநிக் குமரப்
பெருமாளே.
 … வாயு மண்டலம் வரையும் நிறைந்து உயர்ந்த மெய்ம்மை
விளங்கும் பழநித் தலத்தில் நிற்கும் குமரப் பெருமாளே.

மேலும் படிக்க : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தைப்பூசம் ஸ்பெஷல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *