திருப்புகழ் 157 சிறு பறையும் (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் செல்வம் பெருகும்.
சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு
மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி
சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி …… யணுகாதே
சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு
சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்
திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை …… யொழியாதே
மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி
உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்
வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது …… மொருநாளே
வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத …… மருள்வாயே
நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு
சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி
னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு …… மயிலேறி
நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல
அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்
நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு …… முருகோனே
குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்
மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு
குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு …… மணவாளா
குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற
அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய
குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு …… பெருமாளே.
மேலும் படிக்க ; சங்கல்பத்தில் சகலுமும் இருக்குமா , மச்சாவாதாரமும் மரிக்கும் உலகமும்
……… சொல் விளக்கம் ………
சிறு பறையும் முரசு துடி சத்தக் கணப் பறையும் … சிறிய
பறையும், முரசும், உடுக்கையும், ஒலிக்கின்ற கூட்டமான பறைகளும்,
மொகு மொகு என அதிர உடன் எட்டிப் பிடித்து … மொகு
மொகு என்ற பெரும் சப்தத்துடன் முழங்க, உடனே யம தூதர்கள்
எட்டிப் பிடித்து,
முடி சிறு கயிறு நெடிது கொடு கட்டிட்டு இழுக்க … (தலை)
முடியைச் சிறிய பாசக் கயிற்றால் நெடு நேரம் கட்டி இழுக்கவும்,
இனி அணுகாதே சில தமர்கள் உறவு கிளை கத்திப் பிதற்றி …
இனி அவர் பிழைக்க மாட்டார் என்று கருதி தூரத்தில் இருந்தே சில
உறவினர்கள், சுற்றம் மிகுந்த உடன்பிறந்தார்கள் கூச்சலிட்டு
அலறி அழுது,
எடு சுடலை தனில் இடு கனலை இட்டுக் கொளுத்து புனல்
திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே …
(உடலை) எடுத்துக்கொண்டு போய் சுடுகாட்டில் (கிரமப்படி) வைக்க
வேண்டிய தீயை வைத்துக் கொளுத்திய பின்னர், (நீங்கும் முன்பு)
நீரில் அலை வீசும் கடலில் முழுகுங்கள் எனச் சொல்லும்படிக்குள்ள
இந்த நிலையற்ற உடலை எடுக்கும் பிறப்பு என்பது ஒருநாளும்
நீங்காதோ?
மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி …
வேத நூல்களில் முடிவாகச் சொல்லப்பட்ட நிலையாகிய முக்தி
பெறுதற்குச் சொல்லிய வழிப்படி,
உடல் உயிர்கள் கரண வெளி பட்டுக் குணத் திரயம்
வழிபடவும் … உடலும் உயிர்களும் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
என்ற) அந்தக்கரணங்களும் பர வெளியில் சம்பந்தப்பட்டு, (அதனால்
சத்வ, ராஜ , தாம மாகிய) முக்குணங்களும் வழிபட்டு ஒழுக,
நினது அடிமை இச்சைப் படுத்துவதும் ஒரு நாளே … உன்
அடிமையாகிய எனக்கு உன் மீது இச்சை வருமாறு என்னை
ஆண்டருளும் ஒரு நாளும் கிடைக்குமோ?
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட … நீ ஏறி வரும்
குதிரையாகிய மயிலின் மணிகள் சத்தம் செய்ய நடனம் ஆடும்படி,
ஒரு பதுடன் இரு புயமும் மட்டுத் தொடைக்கு இசைய …
பன்னிரு புயங்களும் தேன் ஒழுகும் மாலைக்குப் பொருந்தி விளங்க,
மனம் மகிழ இனிய மொழி செப்பிச் சிவத்த பதம்
அருள்வாயே … மனம் மகிழுமாறு இனிய உபதேச மொழியைக் கூறி,
உனது சிவந்த திருவடியை அருள்வாயே.
நறை இதழி அறுகு பல புட்பத் திரட்களொடு சிறு பிறையும்
அரவும் எழில் அப்புத் திரு தலையில் … வாசனையுள்ள கொன்றை
மலரையும், அறுகம் புல்லையும், பலவகையான மலர்க் குவியல்களையும்,
பிறைச் சந்திரனையும், பாம்பையும், அழகிய கங்கை நதியையும்,
சிறந்த சென்னி மீது
நளினம் உற அணி சடையர் மெச்சிப் ப்ரியப்படவும் மயில்
ஏறி … இனிது விளங்க அணிந்துள்ள சடையராகிய சிவபெருமான்
புகழ்ந்து விரும்பப்பட மயிலில் ஏறி,
நவ நதிகள் குமு குமு என வெற்புத் திரள் சுழல … ஒன்பது
நதிகளும்* குமுகுமு என்று கலங்கவும், மலைக் கூட்டங்கள்
சுழற்சி உறவும்,
அகில முதல் எழு புவனம் மெத்தத் திடுக்கிடவும் … பூலோகம்
முதலான ஏழு உலகங்களும் மிகவும் திடுக்கிடவும்,
நவ மணிகள் உரகன் உடல் கக்கத் துரத்தி வரும்
முருகோனே … பாம்பின் உடலினின்று ஒன்பது** மணிகள்
வெளிப்படவும், அசுரர்களைத் துரத்தி வரும் முருகனே,
குறவர் முனை கெட மனது வெட்கப் பட … குறவர்களுடைய
வெறுப்பு அழியவும், மனது வெட்கப்படவும்,
குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து
சிறுக்கி … குடிசையிலும், மலையின் கண் உள்ள தினைப்
புனத்துப் பரணிலும் இருந்த சிறு பெண்ணாகிய வள்ளியின்
இரு குவி முலையும் அணி இடையும் மெச்சிப் புணர்ச்சி
செயு மணவாளா … இரண்டு குவிந்த மார்பகங்களையும்,
அழகிய இடையையும் பாராட்டி அவளை மணந்த கணவனே,
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற …
குட்டை வடிவனராகிய அகத்திய முனிவர் காலை மாலை இரு
போதிலும் அர்ச்சனை செய்து முக்தி அடையும்படி
அறிவு நெறி தவ நிலைகள் செப்பு … அவருக்கு ஞான
மார்க்கத்தையும், தவ ஒழுக்கங்களையும் சொல்லிய,
தமிழ்க்கு இனிய குரு குமர பழநி வளர் வெற்புத் தனில்
திகழும் பெருமாளே. … தமிழுக்கு இனிய குருவே, குமரனே,
பழனியில் உள்ள அருள் வளர்கின்ற மலையில் விளங்கும்
பெருமாளே