திருப்புகழ் 156 சிவனார் மனங்குளிர (பழநி)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் …… குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் …… நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென …… வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது …… புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் …… மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு …… விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் …… வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
சிவனார் மனங்குளிர … சிவபிரானது மனம் குளிரும்படியாக
உபதேச மந்த்ரம் … ஓம் என்ற மந்திரத்தின் விளக்க உபதேசத்தை
இருசெவிமீதி லும்பகர்செய் … அவரது இரு செவிகளிலும் சொன்ன
குருநாதா … குருநாதனே,
சிவகாம சுந்தரிதன் … சிவகாம சுந்தரியாம் பார்வதியின்
வரபால கந்த … மேன்மையான மைந்தனே, கந்தனே,
நினசெயலேவி ரும்பி … உனக்குச் செய்யும் தொண்டினையே விரும்பி
உளம் நினையாமல் … உள்ளத்தில் நினைக்காமல்,
அவமாயை கொண்டு … கேடு விளைவிக்கும் மாயையின் வசமாகி,
உலகில் விருதாவ லைந்துழலும் … உலகிலே வீணாக அலைந்து
திரியும்
அடியேனை அஞ்சலென வரவேணும் … அடியேனை அஞ்சாதே
எனக் கூறி அருள்வதற்கு நீ வரவேண்டும்.
அறிவாக மும்பெருக … அறிவு மனத்திலே பெருகி வளரவும்,
இடரான துந்தொலைய … துன்பங்களெல்லாம் தொலையவும்,
அருள்ஞான இன்பமது … நின்னருளால் பெறக் கூடிய ஞான
இன்பத்தை
புரிவாயே … தந்தருள்வாயாக.
நவநீத முந்திருடி … வெண்ணெயையும் திருடி,
உரலோடெ யொன்றுமரி … உரலுடனும் கட்டுப்பட்ட ஹரி,
ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே … ரகுராமனாம் திருமால்
மனமகிழும் மருமகனே,
நவலோக முங்கைதொழு … நவகண்ட பூமியில் யாவரும்
கைதொழுது வணங்கும்
நிசதேவ லங்கிருத … உண்மைத் தெய்வமே, அலங்காரமானவனே,
நலமான விஞ்சைகரு விளைகோவே … நலம் தரும்
மாயவித்தையால் பிறப்புத் தோற்றங்கள் பலவற்றை விளைவிக்கும்
தலைவனே,
தெவயானை யங்குறமின் மணவாள … தேவயானை, அழகிய
குறப்பெண் வள்ளி இவ்விருவருக்கும் மணவாளனே,
சம்ப்ரமுறு திறல்வீர … நிறைவான திறல் வாய்ந்த வீரனே,
மிஞ்சுகதிர் வடிவேலா … மிக்க ஒளி வீசும் கூரிய வேலாயுதனே,
திருவாவி னன்குடியில் வருவேள் … திருவாவினன்குடியில்
எழுந்தருளிய மன்மதனே,
சவுந்தரிக … அழகனே,
செகமேல்மெய் கண்ட … உலகில் உண்மைப் பொருளைக்
கண்டு தெரிவித்த
விறல் பெருமாளே. … திறம் வாய்ந்த பெருமாளே.